Published : 14 Dec 2014 11:47 AM
Last Updated : 14 Dec 2014 11:47 AM

மின் கட்டண உயர்வு, கட்டண சலுகை அமல்படுத்துவதில் சிக்கல்: ஆணையத்துக்கு எதிராக வழக்கு தொடர நுகர்வோர் அமைப்புகள் முடிவு

மின் கட்டணம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும்போது, கட்டண உயர்வு அறிவிப்பையும், 500 யூனிட் வரை பயன்படுத்தும் நுகர்வோருக்கு அரசு மானியம் என்ற அறிவிப்பையும் அமல்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. கட்டண உயர்வை எதிர்த்து நுகர்வோர் அமைப்புகள் வழக்கு தொடர முடிவு செய்துள்ளன.

தமிழகத்தில் 15 சதவீத மின் கட்டண உயர்வை டிச.11ல் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்தது. இதையடுத்து, 500 யூனிட்களுக்கு கீழ் பயன்படுத்தும் நுகர்வோருக்கான கூடுதல் கட்டணத்தை அரசே மானியமாக வழங்கும் என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். ஆனால், மானியம் தொடர்பான அரசாணையோ, அலுவலக உத்தரவோ இன்னும் வெளியிடப்படவில்லை. இதனால், அனைவருக்கும் மின் கட்டண உயர்வு என்ற ஒழுங்குமுறை ஆணைய உத்தரவு மட்டுமே தற்போது அமலில் உள்ளது.

இதுகுறித்து, மின் துறை அதிகாரிகள் கூறியதாவது:

அரசின் கட்டுப்பாட்டில் மின் வாரியம் செயல்படுவதால், மின் கட்டணத்தை உயர்த்த வேண்டாம் என்ற கொள்கை முடிவை அரசு எடுக்கலாம். ஆனால், 500 யூனிட்களுக்கு மேல் கட்டண உயர்வு இல்லை என்றால், அதற்கான தொகையை கணக்கிட்டு, தமிழக அரசிடம் இருந்து மின் வாரியத்துக்கு கூடுதல் மானியமாக வழங்க வேண்டும்.

ஒழுங்குமுறை ஆணைய உத்தரவு நகல் மின் வாரியத் துக்கும், தமிழக அரசுக்கும் அனுப்பப்படும். பின்னர் 500 யூனிட் வரை பயன்படுத்தும் நுகர்வோருக்கான கட்டண உயர்வுத் தொகையை மானியமாகத் தருவதாக அரசாணை பிறப்பிக்கப்படும். இதுதொடர்பான தமிழக அரசின் கடிதத்தை பரிசீலித்து, அதனடிப்படையில் திருத்த உத்தரவை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பிக்கும். அதன் பிறகே 500 யூனிட் வரை பயன்படுத்தும் நுகர்வோருக்கு கட்டண உயர்வு இல்லை என்ற உத்தரவை மின் வாரியம் செயல்படுத்த முடியும்.

மின் கட்டணம் உயர்வுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. கட்டண உயர்வு தொடர்பாக ஒழுங்குமுறை ஆணையம் எத்தகைய அறிவிப்பை வெளியிட்டாலும், இந்த வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

எனவே, தீர்ப்பு வந்த பிறகே, மின் கட்டண சலுகைக்கான உத்தரவை அரசு பிறப்பிக்க முடியும் என்றனர். கட்டண உயர்வு அறிவிப்பையும் ஒரு தரப்பினருக்கு மட்டும் சலுகை அளிப்பதையும் எதிர்த்து புதிய வழக்கு தொடர நுகர்வோர் அமைப்புகள் முடிவு செய்துள் ளன.

இதுகுறித்து ஊழல் ஒழிப்பு இயக்க தலைவர் சி.செல்வராஜ் கூறும்போது, ‘‘மின் கட்டண உயர்வால் அனைத்து வணிக பொருட்களின் விலை மற்றும் சேவைக் கட்டணம் உயரும். எனவே, ஒழுங்குமுறை ஆணைய உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர உள்ளோம்’’ என்றார்.

தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் மையத் தலைவர் டி.சடகோபன் கூறும்போது, ‘‘குறிப்பிட்ட பிரிவுக்கு மட்டும் மானியம் என்பதும் நியாயமாக இல்லை. இதில் பல்வேறு நடைமுறை பிரச்சினைகள் உள்ளன. இதுகுறித்து வழக்கு தொடர ஆலோசித்து வருகிறோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x