Published : 30 Dec 2014 10:44 AM
Last Updated : 30 Dec 2014 10:44 AM
தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில் முந்தைய காலத்தைவிட தற்போது மிகப்பெரிய அளவில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தமிழக அரசு உலக முதலீட்டாளர்கள் கூட்டத்தை வரும் ஜனவரி முதல் வாரத்தில் கூட்டவுள்ளது. இந்தக் கூட்டத்தின் மூலமாக ரூ.1 லட்சம் கோடி முதலீடு பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2012–ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, 12 நிறுவனங்களுடன் ரூ.20,295 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை போட்டுள்ளார் என்றும், இதன் மூலம் 35,855 பேருக்கு நேரடியாகவும், ஒரு லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று சொல்லப்பட்ட நிலையில், இதில் எதுவும் நிறைவேறாமல் உள்ளதாகவே தெரிகிறது.
தமிழகத்தில் அடிப்படை கட்டமைப்பு இல்லாததுதான் இதற்கு காரணம். மேலும் தொடர் மின்வெட்டு, அனைத்து துறைகளிலும் தேக்கமான சூழ்நிலை, அரசு நிர்வாகத்திலே வெளிப்படையற்றதன்மை போன்றவற்றால், தொழில் வளர்ச்சி மங்கியுள்ளது. மேலும் கடந்த 2009-ம் ஆண்டில் 236 பரிந்துரைகளுக்கு ரூ 67,224 கோடி முதலீடு வந்தது. இப்போது 2014-ம் ஆண்டில் 89 பரிந்துரைகளுக்கு ரூ.14,349 கோடியாக குறைந்துள்ளது.
தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையின் ஏற்றுமதி மூலம் மட்டுமே ரூ.50,000 கோடி வருமானம் வருகிறது. தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியால் நோக்கியா, பாக்ஸ்கான் போன்ற தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT