Published : 23 Dec 2014 08:59 AM
Last Updated : 23 Dec 2014 08:59 AM
மதுரை மாவட்டத்தில் உள்ள கிரானைட் குவாரிகளை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு கூடுதலாக 8 வாரம் அவகாசம் அளித்து சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தர விட்டது.
சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்படும் கனிம வளங்கள் குறித்து விசாரணை நடத்த ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையில் குழு அமைக்க வேண்டும்.
குவாரி உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி சமூக சேவகர் டிராபிக் ராமசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கனிமவள முறைகேடுகளை ஆய்வு செய்து 2 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டது. சகாயம் குழுவுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
சகாயம் மனு
இந்நிலையில், சட்டவிரோத குவாரிகள் முறைகேடுகள் குறித்து மதுரை மாவட்டத்தில் மட்டும் ஆய்வு நடத்த வேண்டுமா அல்லது தமிழகம் முழுவதும் ஆய்வு செய்ய வேண்டுமா என்று தெளிவுபடுத்தக் கோரி உயர் நீதிமன்றத்தில் சகாயம் மனு தாக்கல் செய்தார். ‘மதுரை மாவட்டத்தில் உள்ள கிரானைட் குவாரிகளை சகாயம் ஆய்வு செய்தால் போதும்’ என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கிடையே, கிரானைட் குவாரிகளை ஆய்வுசெய்து அறிக்கை தாக்கல் செய்ய கூடுதலாக 8 வாரம் அவகாசம் கோரி சகாயம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் இந்த மனுவை நேற்று விசாரித்து பிறப்பித்த உத்தரவு:
கிரானைட் குவாரிகளை ஆய்வுசெய்து அறிக்கை தாக்கல் செய்ய ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு கூடுதலாக 8 வாரம் அவகாசம் அளிக்கப்படுகிறது.
கிரானைட் குவாரிகள் தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யாததால் மத்திய அரசுக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தற்போது பதில் மனு தாக்கல் செய்ய மேலும் 3 வாரம் அவகாசம் அளிக்கப்படு கிறது. தவறும்பட்சத்தில் ரூ.10 ஆயிரம் கூடுதலாக அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மார்ச் 12-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT