Published : 13 Nov 2014 12:34 PM
Last Updated : 13 Nov 2014 12:34 PM

பள்ளிகளில் திட்டமிட்ட சமஸ்கிருதத் திணிப்பை நிறுத்துக: ராமதாஸ் கொந்தளிப்பு

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சமஸ்கிருதத் திணிப்பை மத்திய அரசு கைவிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய அரசுக்கு சொந்தமான கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஜெர்மன் மொழிப்பாடத்தை உடனடியாக ரத்து செய்து விட்டு அதற்குப் பதிலாக சமஸ்கிருதப் பாடத்தைக் கற்றுத்தர வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இராணி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.

திட்டமிட்ட இந்த சமஸ்கிருதத் திணிப்பு கண்டிக்கத்தக்கது.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் இடைநிலை வகுப்புகளில் மும்மொழிக் கொள்கை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி முதல்மொழியாக ஆங்கிலமும், இரண்டாவதாக பிராந்திய மொழியும், மூன்றாவதாக சமஸ்கிருதம் அல்லது ஏதேனும் ஒரு நவீன இந்திய மொழியும் கற்றுத்தரப்பட்டு வந்தன.

வெளிநாட்டு வேலைவாய்ப்பைக் கருத்தில் கொண்டு ஏதேனும் ஒரு வெளிநாட்டு மொழியை கற்பிக்க முந்தைய மத்திய அரசு முடிவெடுத்தது. இதையடுத்து 2011-12 ஆம் கல்வியாண்டிலிருந்து மூன்றாவது மொழியாக சமஸ்கிருதத்திற்குப் பதிலாக வெளிநாட்டு மொழி அறிமுகம் செய்யப்பட்டது.

மொத்தமுள்ள 1092 கேந்திரிய வித்யாலயாக்களில் 500க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூன்றாவது மொழியாக ஜெர்மன் மொழியை தேர்ந்தெடுத்தன. இப்பள்ளிகளில் உள்ள 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஜெர்மன் மொழியை படித்து வந்தனர். இம்மொழியைக் கற்றுத் தருவதற்காக ஜெர்மன் அரசு ஆதரவுடன் இயங்கும் மேக்ஸ்முல்லர் பவன் நிர்வாகத்துடன் கேந்திரிய வித்யாலயா ஒப்பந்தம் செய்துகொண்டது.

கடந்த செப்டம்பர் மாதம் இந்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாத நிலையில், கடந்த 27.10.2014 அன்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி தலைமையில் நடைபெற்ற கேந்திரிய வித்யாலயா சங்கதன் ஆளுனர்கள் வாரியத்தின் 99-வது கூட்டத்தில் ஜெர்மன் உள்ளிட்ட அன்னிய மொழிப் பாடங்களை ரத்து செய்துவிட்டு அவற்றுக்குப் பதிலாக முன்பிருந்தவாறு சமஸ்கிருதம் அல்லது ஏதேனும் ஒரு நவீன இந்திய மொழியை கற்றுத்தர வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

அதுமட்டுமின்றி 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் சமஸ்கிருதப் பாடத்தை அறிமுகம் செய்யவும் கூட்டத்தில் தீர்மானிக்கப் பட்டது. இம்முடிவுகளை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என அமைச்சர் ஸ்மிரிதி இராணி ஆணையிட்டிருக்கிறார். இது திட்டமிடப்பட்ட சமஸ்கிருதத் திணிப்பு என்பதில் எந்தவித ஐயமுமில்லை.

வெளிநாட்டு வேலைவாய்ப்பை அதிகரிக்கவே வெளிநாட்டு மொழிகள் அறிமுகம் செய்யப்பட்டன. இதை எதிர்த்து சமஸ்கிருத ஆதரவாளர்கள் தில்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் பதில்மனு தாக்கல் செய்த முந்தைய மத்திய அரசு, வெளிநாட்டு மொழிகள் கற்றுத் தரப்பட வேண்டியது மிகவும் அவசியம் என்று கூறியிருந்தது. ஆனால், அடுத்த சில மாதங்களில் இந்நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு திடீரென சமஸ்கிருதத்தை திணிப்பதற்கான தேவை என்ன? என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.

அதிலும், கல்வியாண்டின் தொடக்கத்தில் தான் மாற்றங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற வழக்கத்தை மாற்றி, கல்வியாண்டின் மத்தியில் இந்த மாற்றத்தை செய்திருப்பதிலிருந்தே சமஸ்கிருதத் திணிப்பில் மத்திய அரசு எவ்வளவு தீவிரமாக உள்ளது என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.

கேந்திரிய வித்யாலயாக்களில் கடைபிடிக்கப்பட்டு வரும் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக இருந்ததால் தான் ஜெர்மன் உள்ளிட்ட வெளிநாட்டு மொழிகள் ரத்து செய்யப்பட்டதாக அரசு கூறுவதை ஏற்க முடியாது. ஏனெனில் எந்த கேந்திரிய வித்யாலயாவிலும் மும்மொழிக் கொள்கை உண்மையாக கடைபிடிக்கப்படவில்லை. முதல் மொழியாக ஆங்கிலமும், இரண்டாவதாக பிராந்திய மொழியும் கற்பிக்கப்பட்டு வரும் நிலையில், எந்த மாநிலத்திலும் பிராந்திய மொழியாக இல்லாத சமஸ்கிருதத்தை திணிக்க வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டு மூன்றாவது மொழி என்ற வழக்கம் ஏற்படுத்தப்பட்டது. அப்போது கூட மூன்றாவது மொழியாக ஏதேனும் ஓர் இந்திய மொழி கற்றுத்தரப்படும் என்பது தான் இயல்பானதாக இருக்க முடியும். ஆனால், ஏதேனும் ஒரு இந்திய மொழி அல்லது சமஸ்கிருதம் என்ற விதி உருவாக்கப்பட்டதே, பள்ளிகளில் சமஸ்கிருதம் நுழைய வழி ஏற்படுத்தித் தருவதற்காகத் தான்.

கேந்திரிய வித்யாலயாக்கள் உண்மையாகவே மும்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தினால், வட இந்திய பள்ளிகளில் ஏதேனும் ஒரு தென்னிந்திய மொழியும், தென்னிந்திய பள்ளிகளில் ஏதேனும் ஒரு வட இந்திய மொழியும் கற்றுத்தரப்பட வேண்டும். ஆனால், மும்மொழிக் கொள்கை நடைமுறையில் இருந்த போது எந்த வட இந்தியப் பள்ளியிலும் மூன்றாவது மொழியாக தமிழ் கற்றுத்தரப்படவில்லை; மாறாக 90% தென்னிந்திய பள்ளிகளில் சமஸ்கிருதம் தான் மூன்றாவது மொழியாக கற்றுத்தரப்பட்டது.

அதேபோன்ற நிலையை மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத் தான் வெளிநாட்டு மொழிகளுக்கு மூடுவிழா நடத்தப்பட்டு, சமஸ்கிருதத்திற்கு மகுடம் சூட்டப்பட்டிருக்கிறது. அதன்படி தமிழகத்திலுள்ள 43 கேந்திரிய வித்யாலயாக்களிலும் சமஸ்கிருதம் திணிக்கப்படும். ஏற்கனவே, சமூக ஊடகங்களில் இந்தி, கல்லூரிகளில் இந்தி, பள்ளிகளில் சமஸ்கிருத வாரம், ஆசிரியர் நாள் குரு உத்சவாக மாற்றம் என பலவழிகளில் மொழி மற்றும் கலாச்சாரப் படையெடுப்பை நிகழ்த்திய மத்திய அரசு, இப்போது மூன்றாவது மொழி என்ற போர்வையில் சமஸ்கிருதத்தை திணிக்க களமிறங்கியுள்ளது. இது நல்லதல்ல.

நாட்டின் வளர்ச்சிக்கான பணிகள் ஏராளமாக இருக்கும் நிலையில் மொழி மற்றும் கலாச்சாரத் திணிப்பில் ஈடுபடுவதை மத்திய அரசு கைவிட வேண்டும். கேந்திரிய வித்யாலயா மூலம் சமஸ்கிருத மொழியைத் திணிக்கும் முடிவைக் கைவிட்டு, முன்பிருந்த நிலையே தொடர வகை செய்ய வேண்டும்" என ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x