Published : 03 Nov 2014 08:24 AM
Last Updated : 03 Nov 2014 08:24 AM

திமுக கூட்டணியில் இருந்து வெளியேற விடுதலைச் சிறுத்தைகள் முடிவு?

பாமக மீது திமுகவுக்கு ஏற்பட்டுள்ள திடீர் பாசம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரை அதிருப்தியடைய வைத்துள்ளது. இதைத் தொடர்ந்து திமுக கூட்டணியில் இருந்து வெளியேறு வது குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

கடந்த 2006-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் முதல் திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இருந்துவருகிறது. இடையில் ஈழத் தமிழர் பிரச்சினை உள்ளிட்ட சில விவகாரங்களில் இரண்டு கட்சிகள் இடையே முரண்பாடுகள் ஏற்பட்டாலும் அவை ஒரே அணியில் இருந்துவந்தன. இந்நிலையில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு முதலில் ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டது. அதன் பின்பு நீண்ட இழுபறிக்கு பின்பே மற்றொரு தொகுதி ஒதுக்கப்பட்டது. அப்போதே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் திமுக மீது அதிருப்தி அடைந்தனர். திமுக கூட்டணியிலிருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வெளியேற வேண்டும் என்று திருமாவளவனிடம் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் தற்போது ராமதாஸ் இல்லத் திருமணத்தை முன்னிறுத்தி திமுக-வும் பாமக-வும் நெருங்கிவருகின்றன. திருமண நிகழ்ச்சியில் பேசிய திமுக தலைவர் கருணாநிதி “எனக்கும் டாக்டர் ராமதாஸுக்கும் பல ஆண்டுகாலமாக நெருங்கிய பழக்கம் உண்டு. இருவருக்கும் உள்ள அன்பு மறைந்ததில்லை” என்றார். பாமக, மதிமுக உள்ளிட்ட புதிய கூட்டணி அமைவது குறித்து பத்திரிகையாளர்கள் கருணாநிதி யிடம் கேட்டபோது, “புதிய அணி உருவானால், அந்த அணி பற்றி தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு கூடி முடிவெடுத்தால் மகிழ்ச்சியு டன் அதை வரவேற்பேன்” என்றார். இதன் மூலம் பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் புதிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் திமுக இறங்கியுள்ளது. இது கடந்த எட்டு ஆண்டுகளாக திமுக கூட்டணியில் இருந்துவரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியிருக் கிறது. திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவது குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

சில நாட்களுக்கு முன்பு ஈரோட்டில் இதை மனதில் வைத்துக்கொண்டு பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், “கூட்டணிக்காக நாங்கள் எந்தக் கட்சியுடனும் வாழ்நாள் ஒப்பந்தம் போடவில்லை. புதிய கூட்டணி அமைந்தால் அவர்கள் விருப்பம் நிறைவேற வாழ்த்துகள்” என்றார்.

இதுகுறித்து அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வன்னியரசு ‘தி இந்து’விடம் கூறும்போது, “ஆரம்பத்தில் இருந்தே எங்கள் தலைவர் பாமக இடம் பெறும் கூட்டணியில் இருக்க மாட்டோம் என்கிற கொள்கையில் உறுதியாக இருக்கிறார். இப்போதும் திமுக கூட்டணியில் பாமக இடம் பெற்றால் உடனடியாக நாங்கள் விலகிவிடு வோம். அதேசமயம் ‘திராவிடக் கட்சிகளை ஒழித்துக்கட்டுவேன்’ என்றும் ‘இனியும் திமுக கூட்டணியில் இருந்தால் கோவணத் துணியைக்கூட உருவிவிடுவார்கள்’ என்று சொன்ன ராமதாஸையும் திமுக தொண்டர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். 7-ம் தேதி தருமபுரி நத்தம் காலனி எரிக்கப்பட்ட நினைவு நாள். அது யாரால் நடந்தது என்பதையும் திமுக தலைவர் எண்ணிப் பார்க்க வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x