Published : 09 Nov 2014 12:32 PM
Last Updated : 09 Nov 2014 12:32 PM

சிமென்ட் சாலைகளால் ஆபத்து: நிலத்தடி நீர் ஆதாரம் குறைவதாக அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் நகரங்கள், கிராமங் களில் சிமென்ட்’ சாலைகள் அதிகரிப்பால் நிலத்தடி நீர் ஆதாரம் குறைவதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் தற்போது மழை பெய்தாலும் கடந்த 3 ஆண்டுகளாக போதிய மழை இல்லை. வறட்சியால் விவசாய சாகுபடி பரப்பு குறைந்தது. கால்நடைகள் அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்டன. மழை பெய்தபோது நிலத்தடி நீரை சேமித்து வைப்பதற்கு போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாதது, நகரங்கள், கிராமங்களில் சிமெண்ட் சாலை, தரைகள் பெருக்கம் ஆகியன நிலத்தடி நீர் ஆதாரம் குறைவுக்கு முக்கிய காரணம் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

ஆய்வுப் பணி

நிலத்தடி நீர் தொடர்பாக தமிழ்நாடு நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை சார்பில் கடந்த 1996 முதல் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. தரிசு நிலத்தை சீரமைத்து விவசாய நிலமாக மாற்றுவது, மழைநீரை சேகரிப்பதற்கான கட்டமைப்பு களை உருவாக்குவது அனைத்து விதமா்ன ்மலைப்பாங்கான சிறிய மற்றும் பெரிய ஓடைகள் அமைப்பது, தடுப்பணைகள் அமைப்பது, உள்ளிட்ட பணிக ளுக்காக ஆய்வுப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆய்வின் மூலம் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆக்கிரமிப்புகள் அதிகம்

இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வேளாண்மைப் பொறியாளர் சே.செபாஸ்டியன் பிரிட்டோராஜ் தி இந்து’விடம் நேற்று கூறியது;

கிராமத்திலும், நகர்ப் புறங்களிலும் உள்ள தெருக்கள், சிமெண்ட் மற்றும் தார்ச் சாலைகளாக உள்ளன. பெரும்பாலான இடங்களில் நீர் வெளியேறும் சாக்கடைகள், நீர் மண்ணுக்குள் செல்லும் பகுதிகள் சிமெண்டினால் கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு வீட்டினையும் சுற்றியுள்ள புறக்கடை இடங்களும் சிமெண்ட் தளங்களாக மாறிவிட்டன.

இதனால், இப்பகுதிகளில் பெய்யும் மழைநீர் நிலத்தினுள் புக வழியின்றி கடத்தப்பட்டு, ஒவ்வொரு ஊரிலும் உள்ள தாழ்வான இடங்களில் சேமிக்கப் படுகிறது.

தாழ்வான இடங்களில் இருந்து குளங்களுக்குச் செல்லும் ஓடைகள் ஆக்கிரமிக்கப்பட்டும், குப்பைகள் கொட்டப்பட்டும் உள்ளதால் நீர்ப்போக்கு திசை மாற்றப்பட்டு, பயனில்லாத இடங்களில் தேங்கி வீணாகிறது. இதனால் அந்தந்த பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் செறிவூட்டப்படாமல் உயராத நிலையில் உள்ளது.

தமிழகத்தின் நிலப்பரப்பில் செம்மண் 3 அடி முதல் 5 அடி வரையிலும், களிமண் 6 முதல் 8 அடி வரையிலும், மணல் பாங்கான மண் 5 முதல் 8 அடி வரையிலும் மேல் மண்ணாக உள்ளது. அதற்குக் கீழ் இலகு ரகப் பாறைகளும் அதற்குக் கீழ் கடினப்பாறைகளும் உள்ளன. இக்கடினப் பாறைகளில் பல்வேறு இடங்களில் பல்வேறு வகையான நீர்த்தாங்கிகள் உள்ளன. இவையே ஆழ்துளை கிணறுகள் அமைக்கும்போது நாம் பேச்சு வழக்கில் உபயோகப்படுத்தும் ‘ஊத்து’ எனப்படும் பாறைப் பிளவுகளாக உள்ளது. நீர்த் தாங்கிகள் என்பவை நிலத்தின் கீழ் படுத்திருக்கும் குளங்கள் ஆகும். இவை நிலத்தடியில் பல்வேறு மட்டங்களில் பரந்த நிலப்பரப்பில் மேடுபள்ளங்களாக அமைந்திருக்கும்.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை நீர்த்தாங்கிகள், நிலப்பரப்பில் இரண்டு மேட்டுப் பகுதிகளுக்கு இடையில் சுமார் 65 கி.மீ. நீளத்திலும், 15-35 கி.மீ. அகலத்திலும் அமைந்திருக்கும். நிலப்பரப்பின் மேல் அமைந்திருக்கும் குளங்கள், ஏரிகள் மற்றும் ஆறுகள் போன்ற நீரை சேமிக்கும் அமைப்புகள் இந்த நீர்த் தாங்கிகளுக்கு நீரினை நுழைவுவாயிலாக செயல்பட்டு வழங்கி செறிவூட்டுகின்றன. பொதுவாக குளங்களில் தேங்கி இருந்த நீர், அக்குளங்கள் வற்றி தோற்றமளித்தாலும், பூமிக்குள் இறங்கி இந்த நீர்த்தாங்கிகளை செறிவூட்டுகின்றன.

பூமியின் நிலப்பரப்பில் உள்ள நீரில் 2.27 சதவீதம் நீர் மட்டுமே குடிநீராகவும், விவசாயத்துக்கும் பயன்படுத்தப்படுகிறது.

அதிகரிக்கும் நீர்ப்பற்றாக்குறை

தமிழகத்தில் மக்கள்தொகை பெருக்கத்தினாலும், நகரங்களும் அதனை சுற்றிய கிராமங்களும் வேகமாகப் பெருகிக் கொண்டிருப்பதாலும், மக்களின் அன்றாட நீர்த்தேவை பல மடங்கு அதிகரிக்கிறது. நிலத்தடியில் உள்ள நீர்த்தாங்கிகள் செறிவூட்டமின்றி வறண்டு இருப்பதால் நீர்ப் பற்றாக்குறை பெருமளவு அதிகரிக்கிறது. நீர்த்தாங்கிகளை செறிவூட்டினால் மட்டுமே விவசாயம் மற்றும் குடிநீர்த் தேவைகள் பூர்த்தி செய்யப்படும்.

பூமியின் மேற்பரப்பில் இருந்து மட்டுமே நிலத்தினுள் மழை நீரை சேமிக்க முடியும். அதனால், பல்வேறு வகைகளில் மழை நீரினை சேகரிக்க வேண்டும்.

ஒவ்வொரு வீட்டிலும் புறக்கடைப் பகுதிகளில் பொதுப் பணித்துறை மற்றும் குடிநீர் வடிகால் வாரியத் துறைகளால் பரிந்துரைக்கப்பட்ட வகைகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்கலாம்.

வீட்டின் மேல்தளங்களிலும், வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சேமிக்கப்படும் மழை நீர் நிலத்தினுள் செல்லுமாறு வகை செய்யப்பட வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x