Published : 02 Apr 2014 11:54 AM
Last Updated : 02 Apr 2014 11:54 AM

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காதது ஏன்? - மத்திய இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் விளக்கம்

ஐ.நா. மன்றத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தாக்கல் செய்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காதது இலங்கை மீதான சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட ராஜதந்திர முயற்சி என மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்தார்.

இதுகுறித்து ‘தி இந்து’வுக்கு அவர் அளித்த பேட்டி: இலங்கையில் வாழும் தமிழர்களுக்கான மீள்குடியேற்றம், அகதிகள் மறுவாழ்வு, தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகளில் இந்திய அரசு அதிக அக்கறை காட்டி வருகிறது. இதற்காக பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டு, போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருகிறது இந்தியா.

இந்நிலையில், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரித்திருந்தால், தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் அவர்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீனா மேற்கொள்ள வாய்ப்பாக அமைந்திருக்கும். இது இலங்கை மீதான சீனாவின் பிடியை மேலும் வலுவாக்க வழிவகுத்திருக்கும். ஆனால் தீர்மானத்தைப் புறக்கணிப்பது என்ற ராஜதந்திர நடவடிக்கையால் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்திவிட்டது இந்தியா.

இந்தியாவின் இந்த நிலைப்பாட்டால், இலங்கையில் வாழும் தமிழர்கள் மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்வாதாரம் காக்கப்பட்டிருப்பதுடன் அங்கு அமைதி ஏற்படும் சூழலும் உருவாகி இருக்கிறது.

மேலும், இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மற்றும் வடகிழக்குப் பிராந்தியங்களில் இருந்து ராணுவ பாதுகாப்பை திரும்பப் பெறுவதற்கும் வழி ஏற்பட்டுள்ளது. தமிழர்களின் நிலங்கள் மீண்டும் தமிழர்களிடமே ஒப்படைக்கப்படும் சூழலும் அங்கு ஏற்பட்டுள்ளது.

இந்தியா எடுத்திருக்கும் இந்த நிலைபாட்டால் தமிழகம், ஆந்திரம் புதுச்சேரி மாநில மீனவர்களின் அன்றாட பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண வழி ஏற்பட்டுள்ளது.

இப்போது ஐ.நா. மன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானம், இலங்கையில் நடை பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா-வின் மனித உரிமைகள் ஆணையத்தின் நேரடிப் பார்வையில் சுதந்திர விசாரணை கோருகிறது.

ஒரு சர்வதேச அமைப்பு, ஜனநாயக ஆட்சி நடக்கும் ஒரு நாட்டில் அதன் இறையாண்மைக்கு எதிராக விசாரணை நடத்திட அனுமதித்தால் அடுத்து அதே போன்ற ஒரு நிலைமை இந்தியாவுக்கும் நாளை ஏற்படக்கூடும் என்பதை யும் யோசித்துப் பார்த்துத்தான் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவில்லை.

இவ்வாறு சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x