Published : 16 Nov 2014 08:48 AM
Last Updated : 16 Nov 2014 08:48 AM

தருமபுரி அரசு மருத்துவமனையில் 5 பச்சிளங் குழந்தைகள் அடுத்தடுத்து மரணம்: பொதுமக்கள் அதிர்ச்சி

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அடுத்தடுத்து ஐந்து பச்சிளங் குழந்தை கள் இறந்ததால் பரபரப்பு ஏற்பட் டுள்ளது.

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பச்சிளங் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு இயங்கி வருகி றது. குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகள் தொடங்கி குறைந்த எடை கொண்ட குழந்தை, தொற்று நோய் உள்ள குழந்தை, காமாலை பாதிப்புக்கு ஆளான குழந்தை உள்ளிட்ட குழந்தைகளுக்கு இந்தப் பிரிவில் சிகிச்சை அளிக்கப் படுகிறது. அதாவது பிறந்தது முதல் 28 நாட்கள் வரையிலான பச்சிளம் குழந்தைகளுக்கு இந்தப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்படும்.

ஒரே நேரத்தில் 100-க்கும் அதிக மான குழந்தைகள் வரை சேர்ந்து சிகிச்சை பெறும் அளவில் இந்த பிரிவு செயல்படுத்தப்படுகிறது. இந்நிலையில் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்ததில் 5 குழந்தைகள் அடுத்தடுத்து இறந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வெள்ளிக்கிழமை மாலை முதல் இரவு வரையில் 5 குழந்தைகள் இறந்தது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இருப்பினும் இந்த குழந்தைகளின் மரணம் மருத்துவ காரணங்களால் நிகழவில்லை என மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

மருத்துவ கல்லூரி முதல்வர் விளக்கம்

இதுகுறித்து மருத்துவக் கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு) இளங்கோவன் கூறிய தாவது: இறந்த 5 குழந்தைகளும் உடல்பாதிப்பு, குறைந்த எடை, குறைப் பிரசவம் போன்ற காரணங் களால்தான் இறந்துள்ளன. தருமபுரி மாவட்டம் ஈச்சம்பாடியைச் சேர்ந்த குமுதா என்பவருக்கு வேறு இடத்தில் பிறந்த ஆண் குழந்தை 1.25 கிலோ எடை மட்டும் இருந்தது. எனவே அந்தக் குழந்தையை நவம்பர் 12-ம் தேதி தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பச்சிளங் குழந்தைகள் பிரிவில் சேர்த்தனர். இந்தக் குழந்தை நேற்று முன் தினம் மாலை 5 மணிக்கு இறந்துள்ளது.

பாப்பிரெட்டிப்பட்டியைச் சேர்ந்த பூர்ணிமா என்பவருக்கு பிறந்த பெண் குழந்தை 12-ம் தேதி சேர்க்கப்பட்டது. நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு இறந்துள்ளது. கோபிநாதம்பட்டியைச் சேர்ந்த ஜெயகாந்தியின் பெண் குழந்தை நவம்பர் 3-ம் தேதி சேர்க்கப்பட் டது.

‘பர்த் ஆஸ்பிக்‌ஷியா’ என்ற நுரையீரல் பாதிப்பால் பாதிக்கப்பட் டிருந்த அந்தக் குழந்தை நேற்று முன் தினம் இரவு 9.30 மணிக்கு இறந்தது.

நவம்பர் 14-ம் தேதி சேர்க்கப்பட்ட பைசுஅள்ளியைச் சேர்ந்த பழனியம்மாளுக்கு மருத்துவமனையில் பிறந்த பெண் குழந்தையும் நுரையீரல் பாதிப் பால் நேற்று முன் தினம் இரவு 10.30 மணிக்கு இறந்துள்ளது.

வேலூர் மாவட்டம் திருப்பத் தூரைச் சேர்ந்த ஷோபனா என்பவர் இறுதி நேரத்தில் பிரசவத் துக்காக தருமபுரிக்கு அனுப்பப் பட்டவர். நவம்பர் 12-ம் தேதி மருத்துவமனையில் சேர்ந்த அவருக்கு அன்றே பெண் குழந்தை பிறந்தது. குழந்தை குறைந்த எடை கொண்டதாக இருந்தது. இந்த காரணத்தால் நேற்று முன் தினம் மாலை 4.30 மணிக்கு இறந் துள்ளது. மற்றபடி இந்த குழந்தை களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் அனைத்தும் முறையானவை என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

இயற்கை காரணங்களால் மரணம்

எனவே இந்த 5 குழந்தைகளும் வெவ்வேறு இயற்கை காரணங்களால் இறந்துள்ளன. பிறக்கும் 1000 குழந்தைகளில் 20 குழந்தைகள் இறப்பது இயல்பு என மருத்துவ உலகம் கூறுகிறது. இந்த விகிதம்கூட தருமபுரியில் 1000க்கு 17 என்ற அளவில் ஆரோக்கிய நிலையிலேயே உள்ளது. பச்சிளங் குழந்தைகள் பிரிவின் மருத்துவ சேவையில் குறைபாடு இல்லை என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

இவ்வாறு அவர் கூறினார்.

விசாரணைக்கு கோரிக்கை

மருத்துவமனை நிர்வாகம் இப்படி கூறினாலும், ‘ஒரே நேரத் தில் 5 குழந்தைகள் இறந்ததன் பின்னணியில் உள்ள உண்மை முழுமையாக வெளிவரும் வகையில் விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்’ என தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x