Published : 13 Nov 2014 08:53 AM
Last Updated : 13 Nov 2014 08:53 AM

தி இந்து செய்தி எதிரொலி: போலி, பழைய பால் பாக்கெட்டை முற்றிலும் தடுக்க தேதியுடன் கணினி குறியீடு

தனியார் நிறுவனங்களைப் போல், ஆவின் பால் பாக்கெட்டுகளின் மேல் தயாரிப்பு தேதி மற்றும் குறியீடுகளை கணினி மூலம் பதிவு செய்யும் முறை அமலுக்கு வந்துள்ளது.

பால் உற்பத்தியில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. ஒவ்வொரு நாளும் 127 லட்சம் லிட்டர் பால் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்பட்டு, அதில் சுமார் 64 லட்சம் லிட்டர் பால் தினமும் ஆவின் மூலம் விநியோகம் செய்யப்படு கிறது.

ஆனால், அவ்வப்போது ஆவின் பால் கெட்டுப்போவது தொடர் கதையாக உள்ளன. இதற் கிடையில், சமீப காலமாக ஆவினில் தயாரிப்பு தேதி இல்லாமல் பால் பாக்கெட்டுகள் விற்பனைக்கு வருவது அதிகரித்தது. இதனால் கடைக்காரர்கள், விநியோகஸ்தர் களில் பலர் முந்தைய நாளில் மீதமான பாலை, மறுநாள் விற்கின் றனர்.

இதுகுறித்து, கடந்த அக்டோபர் 26-ம் தேதி ‘தி இந்து’-வில் விரிவான செய்தி வெளியானது. மற்ற தனியார் நிறுவன பால் பாக்கெட்டுகளில் பால் அடைக்கப்பட்ட தேதி மற்றும் அதற்கான தயாரிப்பு குறியீட்டு எண் கணினி முறையில் அச்சடித்து வெளியிடுவர். ஆனால், ஆவினில் பழைய முறைப்படி, அந்தந்த பகுதி டீலர்களே ரப்பர் ஸ்டாம்ப் மூலம் தேதி குறிப்பிடும் வழக்கம் இருந்து வந்தது.

இந்நிலையில் பால் வளத்துறை அதிகாரிகள், ஆவின் நிறுவன அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு கண்டுள்ளனர்.

இதுகுறித்து, அரசின் பால் வளத்துறை அதிகாரிகள் கூறியதா வது: பால் பாக்கெட்டுகளில் போலி மற்றும் பழைய பாக்கெட்டுகள் கலக்காத வண்ணம், கணினி மூலம் தயாரிப்பு எண் மற்றும் பாக்கெட் தயாரிக்கப்பட்ட தேதி அச்சடிக்கும் முறை நவம்பர் 10-ம் தேதி முதல் அமுலுக்கு வந்துள்ளது. இனி ஆவின் பால் பாக்கெட்டுகளில் பழைய பாலையோ, போலி பாக்கெட்டு களை கலந்தோ விற்க முடியாது.

பொதுமக்கள் பால் வாங்கும் போது, ஆவின் பாக்கெட்டின் பக்கவாட்டில் உள்ள அதிகபட்ச விலை, கார்டு விலை, பாக்கெட் விநியோகத்துக்கான தேதி மற்றும் தயாரிப்புக் குறியீட்டு எண்ணை பார்த்து வாங்க வேண்டும். முதல் நாள் தயாரான பாலை வாங்கத் தேவை யில்லை. அதேபோல், போலி பால் பாக்கெட்டாகத் தெரிந்தால் ஆவின் குறை தீர்வு தொலைபேசி எண்ணிலோ அல்லது அந்தந்த கள அதிகாரியையோ தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். தயாரிப்புக் குறியீட்டு எண் மூலம் போலி பாக்கெட்டுகள் அடையாளம் காணப்படும். இதன் மூலம் தரமான, அசல் ஆவின் பாக்கெட்டுகளை பொதுமக்கள் வாங்க எளிய வழி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

ஆவின் பாக்கெட்டில் நவீன முறையில் தயாரிப்பு தேதி மற்றும் குறியீட்டு எண் அச்சிடப்பட்டுள்ளது.

சூரியசக்தி கொதிகலன் மூலம் பால் பதனிட முயற்சி

தமிழக அரசின் சூரிய மின் சக்தி கொள்கை அடிப்படையில், ஆவின் நிறுவனத் தில் சூரியசக்தி நீர் கொதிகலன் அமைப்புகள் பொருத்தப்படுகின்றன. சென்னை சோழிங்க நல்லூரில் உள்ள ஆவின் பதப்படுத்தும் மையத்தில் தினமும் 500 லிட்டர் அளவுக்கு பாலைக் கொதிக்க வைத்து பதப்படுத்தும், 50 சூரியசக்தி நீர் கொதிகலன் அமைப்புகள் பொருத்தப்பட உள்ளன.

இதேபோல் ஆவியை வெளிப்ப டுத்தும், சூரிய சக்தி நீராவி கொதி கலன் கருவிகள் இரண்டை பொருத் துவதற்கும், தமிழக அரசின் பால்வளத்துறை நடவடிக்கை மேற் கொண்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x