Published : 08 Nov 2014 04:15 PM
Last Updated : 08 Nov 2014 04:15 PM

மீனவர்கள் மேல்முறையீட்டுச் செலவுப் பணத்தை இலங்கை தூதரகத்திற்கு அனுப்பி வைத்தது தமிழக அரசு

இலங்கை நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள 5 மீனவர்களும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதற்கான செலவு ரூ.20 லட்சத்தையும் ஏற்றுக் கொண்ட தமிழக அரசு, பணத்தை இலங்கை தூதரகத்திற்கு சனிக்கிழமை அனுப்பி வைத்தது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பில், "ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த எமர்சன், அகஸ்டஸ், வில்சன் பிரசாத் மற்றும் லேங்க்லெட் என்ற ஐந்து மீனவர்கள் கடந்த 28.11.2011 அன்று கூசூ/10/ஆகுக்ஷ/822 என்ற பதிவு எண் கொண்ட மீன்பிடி விசைப்படகில் ராமேஸ்வரம் மீன்பிடி தளத்திலிருந்து புறப்பட்டு தங்களது பாரம்பரிய மீன்பிடி பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்து போதைப் பொருள் கடத்தியதாக பொய்யாக குற்றம் சாட்டினர்.

இது தொடர்பாக யாழ்ப்பாணம் மாகாணம் மல்லாகம் நீதிமன்றத்தில் போதைப்பொருள் கடத்துதல் குற்றத்திற்கான பிரிவின்கீழ் உள்நோக்கத்துடன் பொய் வழக்கு ஒன்று இலங்கை அரசால் தொடரப்பட்டது.

இந்த வழக்கு பொய்யாக புனையப்பட்ட வழக்கு என்றும், கைது செய்யப்பட்ட ஐந்து அப்பாவி மீனவர்களை உடனடியாக விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்றும் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களை கேட்டுக் கொண்டார்கள்.

அவர்களது வேண்டுகோளினை பரிசீலித்த ஜெயலலிதா, அந்த ஐந்து மீனவர்களையும் விடுவிக்கும்பொருட்டு மீனவர்கள் சார்பில் வழக்காடுவதற்காக இலங்கையைச் சார்ந்த வழக்கறிஞர் ஒருவரை நியமித்திடவும், அவர்களை விடுவிப்பதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளை மேற்கொள்ளவும் இராமேஸ்வரத்திலுள்ள நிரபராதி மீனவர்களின் விடுதலைக்கான கூட்டமைப்பு (Alliance for Release of Innocent Fishermen Trust) மூலம் நடவடிக்கை எடுத்திடவும் போலியாக புனையப்பட்ட இந்த வழக்கிலிருந்து அப்பாவி மீனவர்களை விடுவித்திடும் நடவடிக்கைகளுக்கான செலவிற்காக 2 இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியும் 14.12.2011 அன்று ஆணையிட்டார்.

தமிழக அரசின் நிதியுதவியுடன், மேற்கண்ட ஐந்து மீனவர்களை ஜாமீனில் விடுதலை செய்திட 21.3.2012 அன்று யாழ்ப்பாணம் மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் 11.6.2012 அன்று மேற்கண்ட மனுவின் மீது வழங்கப்பட்ட தீர்ப்பில் மீனவர்களுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு, அவர்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மீன்பிடித் தொழிலை நம்பி வாழும் இம்மீனவர்களின் குடும்பங்கள், வருமானம் ஈட்டித் தரும் தங்கள் குடும்பத் தலைவர்கள் சிறையில் உள்ள நிலையில், அன்றாட குடும்பச் செலவிற்கு போதிய வருமானமின்றி துன்பப்படுவதால், இந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு தின உதவித்தொகையாக நாளொன்றிற்கு ரூ.250/- வீதம் மாதந்தோறும் ரூ. 7,500/- வழங்கிட ஜெயலலிதா 6.8.2012 அன்று ஆணையிட்டார்.

மேற்படி வழக்கில் சிக்கி அல்லலுறும் ஐந்து மீனவர்களின் குடும்பங்களுக்கு தின உதவித் தொகை தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்ற போதிலும், இக் குடும்பங்களின் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு ஐந்து மீனவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவித் தொகையாக தலா இரண்டு லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் பத்து லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஐந்து மீனவர்களின் குடும்பத்தினருக்கு 13.12.2012 ஜெயலலிதா வழங்கினார்.

தொடர்ந்து, பொய் வழக்கின் பேரில் இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட ஐந்து மீனவர்களின் நலனில் பெரும் அக்கறையுடனும், அவர்களது குடும்பங்களின் நல்வாழ்விற்காகவும் மேற்படி ஐந்து மீனவர்களை கண்டிப்பாக மீட்டெடுக்கும் உறுதியுடன் பல்வேறு ராஜாங்க மற்றும் சட்ட ரீதியான தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

இலங்கை நீதிமன்றங்கள் தொடர்ந்து இம்மீனவர்களின் வழக்கில் கடினமான நிலைப்பாட்டினை கடைபிடித்ததால், வழக்கினை தொய்வின்றி நடத்திடும் பொருட்டு கூடுதல் நிதியாக மூன்று லட்சம் ரூபாய் வழங்கிட 8.2.2013 அன்று ஆணையிட்டார்.

எனினும், 30.10.2014 அன்று கொழும்பு உயர் நீதிமன்றம் மேற்படி 5 மீனவர்களுக்கும் மரண தண்டனை விதித்து ஆணையிட்டது.

இந்த அதிர்ச்சி செய்தியை அறிந்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் 5 அப்பாவி மீனவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள மரணதண்டனையிலிருந்து அவர்களை காப்பாற்றி விரைவில் விடுதலை செய்திடவும், தாயகம் திரும்பிடவும், ராஜாங்கரீதியாக இந்த பிரச்சினையை இலங்கை அரசின் உயர்மட்ட அளவில் கொண்டு செல்ல வேண்டுமென கேட்டுக்கொண்டதோடு, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 5 பேரும் மேல் முறையீடு செய்யும் வகையில் உரிய சட்ட உதவிகளை வழங்கிட இலங்கையிலுள்ள இந்திய துhதரகத்திற்கு உத்தரவிடவேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தார்.

இந்த சட்ட பூர்வ நடவடிக்கைகளுக்கு ஆகும் அனைத்து செலவுகளையும் ஏற்க தமிழக அரசு தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், தமிழக அரசின் தலைமைச் செயலர், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை அரசுச் செயலர் மற்றும் மீன்வளத்துறை ஆணையர் ஆகியோரை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துடன் தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட உத்தரவிட்டார்கள். அதன்படி, தமிழக அரசின் தலைமைச் செயலர், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை அரசுச் செயலர் மற்றும் மீன்வளத்துறை ஆணையர் வெளியுறவுத்துறை அலுவலர்களுடன் தொடர்புகொண்டு, மேல் முறையீடு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்தனர்.

இதனைத்தொடர்ந்து இலங்கையிலுள்ள இந்திய துhதரக அதிகாரிகளால் கொழும்பு உயர்நீதி மன்ற தீர்ப்பாணையின் நகல் பெறப்பட்டுள்ளது.

இத்தீர்ப்பாணையானது சிங்கள மொழியில் அமைந்துள்ளதால், அதனை ஆங்கில மொழிபெயர்ப்பு செய்து, 5 அப்பாவி மீனவர்களை விடுதலை செய்திட, வரும் திங்கட்கிழமை (10.11.2014) அன்று இலங்கை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இம்மேல்முறையீட்டு வழக்கில் இலங்கை உச்சநீதிமன்றத்தில் 5 மீனவர்கள் சார்பில் ஆஜராவதற்கான மிகச்சிறந்த சட்ட வல்லுநர்கள் இலங்கையிலுள்ள இந்திய தூதரகத்தால் இறுதி செய்யப்பட்டுள்ளது. இச்சட்ட வல்லுநர் குழு இலங்கை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான மொத்த செலவினமான 20 லட்சம் ரூபாய் தமிழக முதலமைச்சரின் உத்தரவின்படி இலங்கையிலுள்ள இந்திய தூதரகத்திற்கு இன்று (8.11.2014) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x