Published : 22 Nov 2014 10:28 AM
Last Updated : 22 Nov 2014 10:28 AM

1996-ம் ஆண்டு போலவே தேர்தலில் ரஜினி குரல்கொடுக்க வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் பேச்சு

1996-ம் ஆண்டு தேர்தலைப் போலவே 2016-ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலுக்கும் ரஜினிகாந்த் குரல்கொடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.

பாமக தலைமைச் சிறப்பு பொதுக்குழு கூட்டம் சென்னை சேப்பாக்கம் அண்ணா கலையரங்கில் நேற்று நடந்தது. கட்சித் தலைவர் ஜி.கே.மணி தலைமையில் நடந்த இக்கூட்டத் தில், கட்சி நிறுவனர் ராமதாஸ், இளைஞர் அணி தலைவர் அன்பு மணி ராமதாஸ், துணை பொதுச் செயலாளர் ஏ.கே.மூர்த்தி, எம்எல்ஏக்கள் ஜெ.குரு, கணேஷ் குமார், வழக்கறிஞர் பாலு உட்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: தமிழகத்தில் 1996-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது, ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். அதேபோல இப்போதும் அவர் குரல் கொடுக்கவேண்டும். பாமக கூட்டணியில் மதிமுக, காந்திய மக்கள் கட்சி, நாம் தமிழர் கட்சி, கொங்கு நாடு மக்கள் கட்சி, ஐஜேகே, தமிழர் தேசிய முன்னணி, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி ஆகிய 8 கட்சிகள் இணைய வேண்டும்.

ஜெயலலிதாவின் நிலைமை யைப் பார்த்து அதிமுக விழி பிதுங்கி நிற்கிறது. 2016 தேர்தல் ஒரு குருஷேத்திரம். இதில் புதிய கீதோபதேசம் எழுத ஊடகங்கள் துணை நிற்கவேண்டும்.

இவ்வாறு ராமதாஸ் கூறினார்.

‘பாமக ஜாதிக்கட்சி இல்லை’

அன்புமணி ராமதாஸ் பேசும்போது, ‘‘தமிழக மக்கள் ஏங்கிப்போயிருக்கின்றனர். அந்த அளவுக்கு ஊழல் நடக்கிறது. பாமக ஜாதிக் கட்சியோ, தலித் மக்களுக்கு எதிரான கட்சியோ இல்லை. அனைத்து சமுதாயக் கட்சி. தலித் மக்களுக்காக அதிக போராட்டங்களை நடத்தியுள்ளது. தமிழகத்தில் மோசமான சூழ்நிலை நிலவுகிறது. அதிகாரிகளும் பணியாற்றுவதில்லை.

முதல்வரையும் பணியாற்ற விடுவதில்லை. ஓய்வு பெற்ற அதிகாரிகள்தான் ஆட்சி நடத்துகின்றனர். இந்த நிலை மாற வேண்டும்’’ என்றார்.

‘அண்ணா சொன்ன 50 ஆண்டு முடிகிறது’

பாமக தலைமைச் சிறப்புப் பொதுக்குழுவில் நிறைவேற்றப் பட்ட அரசியல் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழகத்தில்1967-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பேற்ற அண்ணா, ‘திராவிட இயக்கத்தின் முதல் பாகத்தை எழுதிவிட்டேன். அடுத்த 50 ஆண்டுகளுக்கு வேறு இயக்கங்கள் இந்த மண்ணை ஆளமுடியாது’ என்றார்.

2016-ம் ஆண்டுடன் அந்த 50 ஆண்டு முடிகிறது. திராவிட இயக்கத்தின் கடைசி பாகத்தை திமுகவும், அதிமுகவும் எழுதிக் கொண்டிருக்கின்றன. மக்கள் நலன், தமிழகத்தின் வளர்ச்சியில் அக்கறை கொண்ட கட்சிகளை ஒருங்கிணைத்து புதிய அணியை உருவாக்க பாமக பொதுக்குழு தீர்மானிக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x