Published : 23 Nov 2014 09:33 AM
Last Updated : 23 Nov 2014 09:33 AM

ஆவுடையார்கோவில் அருகே தமிழ் பிராமி எழுத்துகளுடன் பானை ஓடு கண்டுபிடிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே தமிழ் பிராமி எழுத்துகளுடன் கூடிய பானை ஓடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் அ.சந்திரபோஸ் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

ஆவுடையார்கோவில் அருகே உள்ள மதகம் கிராமத்தில், சாலையோரம் உள்ள கருளாநாதர் ஊருணி தூர்வாரப்பட்டுள்ளது. அதில் புதைந்து கிடந்த மண் பானைகள் வெட்டி எடுக்கப்பட்டன. அங்கு சிதறிக் கிடந்த கருப்பு, சிவப்பு நிற பானை ஓடுகளில், சிலவற்றில் சட்டென்று புரிபடாத ஏதோ எழுத்துகள் இருந்தது தெரிய வந்தது.அவற்றை ஆய்வு செய்தபோது, தமிழ் பிராமி எழுத்து பொறிக்கப்பட்டிருந்தது புரிந்தது.

அதில், ‘கதிர் அம்’ என்று தமிழ் பிராமி எழுத்தில் எழுதப்பட்டுள்ளது. இது பெயர்ச்சொல் என்று அறியப்படுகிறது. ‘கதிர்’ என்பது சூரியனைக் குறிக்கும் சொல்லாகும். இந்தச் சொல் சங்க இலக்கியங்களான மணிமேகலை, சிலப்பதிகாரம், அகநானூறு, கலித்தொகை, குறுந்தொகை, நற்றிணை, புறநானூறு ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்துள்ள ‘அம்’ என்ற வார்த்தை அம்பலம், அம்பர் கிழான், அம்மள்ளனார், அம்மெய்யராகனார், அம்மெய்யன், அம்மூவனார் ஆகிய, சங்க இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்ட பெயர்ச் சொற்களில் ஒன்றாக இருக்கலாம் அல்லது ‘அம்’ என்று தொடங்கும் தமிழ்ப் பெயர்களில் ஒன்றாக இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.

ஏற்கெனவே, கொடுமணல், அழகன்குளம், ஆண்டிப்பட்டி, மாளிகைமேடு போன்ற ஊர்களில் கிடைத்த பானை ஓடுகளில் பெயர்ச் சொற்களே இடம் பெற்றுள்ளன. எனவே, தற்போது கிடைத்துள்ள பானை ஓட்டில் உள்ள தமிழ்ப் பிராமி எழுத்துகள், ஒரு நபரின் பெயர் என்று உறுதியாகக் கூறலாம்.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறைத் தலைவர் சு.ராசவேலன், இந்த வார்த்தைகளை ஆய்வு செய்து, ‘கதிர் அம்’ பெயர்ச்சொல் என்பதையும், இந்த பிராமி எழுத்தின் காலம் கி.மு. முதல் நூற்றாண்டு என்பதையும் உறுதி செய்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ் பிராமிக் கல்வெட்டுகள் சித்தன்னவாசல், குடுமியான்மலை, பொற்பனைக்கோட்டை போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களில் கல்லிலும், மலைக் குகையிலும் மட்டுமே கிடைத்துள்ளன. ஆனால், பானை ஓட்டில் கிடைத்திருப்பது இதுவே முதல் முறையாகும். இதன்மூலம், அந்தக் காலத்தில் பயன்படுத்திய பாத்திரங்களில் பெயர்களை எழுதி வைத்திருந்தது தெரிகிறது.

அந்த வகையில், மதகம் ஒரு சங்க கால ஊர் என்பதையும் அறிய முடிகிறது. இந்த ஆய்வுப் பணியில், கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கரு.ராஜேந்திரன், ஆய்வு மாணவர் த.சத்தியமூர்த்தி ஆகியோரும் ஈடுபட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x