Published : 09 Nov 2014 12:36 PM
Last Updated : 09 Nov 2014 12:36 PM

111 ஆண்டுகளுக்கு முன்பு பாலாற்று வெள்ளத்தில் சிக்கி 200 பேர் பலியான துயர சம்பவம்: நினைவஞ்சலிக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

விவசாயத்தை முக்கியத் தொழி லாகக்கொண்ட வேலூர் மாவட் டத்தின் ஜீவாதாரமாக பாலாறு விளங்குகிறது. ஆண்டுதோறும் பாலாற்றில் வெள்ளம் கரைபுரண் டோடிய நிலை மாறி இன்று ஆக்கிரமிப்புகளின் அடையாள மாக காணப்படுகிறது. பாலாற் றில் 1874, 1884, 1898 ஆகிய கால கட்டங்களில் பெரிய அளவில் வெள்ளம் ஏற்பட்டதாக வரலாற்றில் ஆங்கிலேயர்கள் பதிவு செய்துள்ளனர்.

அத்துடன், 111 ஆண்டுகளுக்கு முன்பு 1903-ம் ஆண்டு நவம்பர் 12-ம் தேதி நடந்த ஒரு துயர சம்பவத்தை அழுத்தமாக பதிவு செய்துள்ளனர். லாஸ் ஏஞ்சல்ஸ் ஹெரால்டு பத்திரிகையில் அதே ஆண்டு நவம்பர் 23-ம் தேதி வெளியான செய்தியில், ‘இந்தியாவின் வைஸ்ராய் லார்டு கர்சன் அலுவலக தகவலின்படி, சென்னை மாகாணத்தில், சேலம் மாவட்டம் வாணியம்பாடி நகரில் நவம்பர் 12-ம் தேதி பாலாற்றில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் 200 பேர் பலியாகி உள்ளனர்’ என்று செய்தி வெளியாகி உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் பாலாற் றின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த பலத்த மழை மற்றும் ஏரி உடைப்பால் பெருக்கெடுத்த வெள்ளம், வாணியம்பாடி அருகே கொடையாஞ்சி என்ற பகுதியில் 3 கிளை ஆறுகளாகப் பிரிந்து நகரத்தை உருக்குலைத்து, வளை யாம்பட்டு அருகே ஒருங்கி ணைந்த பாலாறாக மீண்டும் உருவெடுத்துள்ளது. பெருவெள்ளத்தில் ஏற்பட்ட 3 கிளை ஆறுகள் இன்று நகரில் கழிவு நீர் கால்வாயாக ஓடிக்கொண் டிருக்கின்றன.

இந்தத் துயர சம்பவத்தின் நினைவாக வாணியம்பாடி சந்தையின் மறு பகுதியில் ஆங்கி லேயர்கள் நினைவுத் தூண் எழுப்பி உள்ளனர். வரலாற்றை நினைவுப்படுத்தும் இந்தத் தூண், இன்று அடையாளம் தெரியாமல் மறைந்துள்ளது. இந்த நினைவுத் தூண் அமைந்துள்ள பகுதியில், உயிரிழந்த 200 பேருக்கு அஞ்சலி செலுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு பசுமை பாதுகாப்பு மக்கள் இயக்கத் தலைவர் ஏ.சி.வெங்கடேசன் கூறும் போது, ‘‘வாணியம்பாடி நகரின் மறக்க முடியாத வரலாற்று நிகழ்வான இந்தத் தூணை நகராட்சி நிர்வாகம் மறந்துவிடக் கூடாது. உயிரிழந்த 200 பேருக்கு அஞ்சலி செலுத்துவதை கடமையாகக் கருத வேண்டும். பெருவெள்ளத்தில் உயிரிழந்த 200 பேர் இறந்த கொடிய நிகழ்வு நடந்து 111 ஆண்டு கள் ஆனதால் இந்த ஆண்டாவது நினைவஞ்சலி நிகழ்ச்சி நடத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x