Published : 26 Nov 2014 11:03 AM
Last Updated : 26 Nov 2014 11:03 AM

திருட்டு நகைகளை எப்படி கண்டுபிடிப்பீர்கள்? துப்பாக்கியால் சுடுவது எப்படி? - போலீஸாரிடம் கேள்வி கேட்டு அசத்திய சென்னை பள்ளி மாணவர்கள்

திருட்டு நகைகளை எப்படி கண்டுபிடிப்பீர்கள்?, துப்பாக்கியால் சுடுவது எப்படி?, எப்ஐஆர் என்றால் என்ன? என்று போலீஸாரிடம் சரமாரியாக கேள்வி கேட்டு அசத்தினர் பள்ளி மாணவர்கள்.

குழந்தைகள் வன்முறை தடுப்பு தினமாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னையில் உள்ள காவல் நிலையங்கள் அனைத்துக்கும் அந்தந்த பகுதி பள்ளி மாணவ-மாணவிகளை அழைத்துச் சென்று கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். அதன்படி அனைத்து காவல் நிலையங்களுக்கும் பள்ளி மாணவ மாணவி கள் சென்று, காவல் நிலை யங்களின் செயல்பாடுகள் பற்றி அறிந்து வருகிறார்கள்.

நேற்று முன்தினம் சென் னையில் உள்ள பல காவல் நிலையங்களுக்கு பள்ளி மாணவ-மாணவிகள் நேரில் சென்று பார்வையிட்டனர். போலீஸாரின் பணிகள் குறித்து மாணவ-மாணவிகளுக்கு விளக்கி கூறப்பட்டது. அப்போது மாணவ-மாணவி கள், எப்.ஐ.ஆர். என்றால் என்ன? துப்பாக்கியால் சுடுவது எப்படி? என்பது பற்றி ஆர்வ மாக கேட்டனர். இதற்கு போலீஸாரும் பொறுமையாக பதில் கூறினர். துப்பாக்கியை எடுத்துக்காட்டி அதில் சுடுவது குறித்தும், குண்டை எந்த வழியாக போடுவது என்பது குறித்தும் விளக்கி கூறினர். துப்பாக்கியை மிக அருகில் பார்த்த மாணவர்கள் அதை தொட்டுப்பார்த்தும் மகிழ்ந்தனர்.

திருட்டுபோன நகைகளை எப்படி கண்டுபிடிப்பீர்கள்? குற்றவாளிகளை எப்படி பிடிப்பீர்கள்? என்றெல்லாம் மாணவர்கள் கேள்வி கேட்க, அவற்றிற்கும் போலீஸார் பதில் கூறினர். முடிவில் போலீஸ் நிலைய செயல்பாடுகள் பற்றிய தேர்வும் மாணவர்களுக்கு வைக்கப்பட்டது. அதில் அதிக மதிப்பெண் பெற்ற இரண்டு மாணவர்கள் தேர் ந்தெடுக்கப்பட்டனர். இப்படி ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் 2 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டு, அவர்கள் அனைவரும் வருகிற 29-ம் தேதி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டு பரிசுகளும், சான்றிதழ்களும் அளிக்கப்பட உள்ளன. குழந்தைகள் மீதான வன்முறைகள் பற்றி 1098 என்ற எண்ணிலும், பெண்கள் மீதான வன்முறைகள் குறித்து 1091 என்ற எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம் என்றும் மாணவ-மாணவிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x