Published : 23 Nov 2014 08:35 AM
Last Updated : 23 Nov 2014 08:35 AM

கூட்டு முயற்சியால் மீனவர்கள் விடுதலை: தனியாக யாரும் உரிமைகொண்டாட முடியாது - ஜி.கே.வாசன் பேட்டி

மீனவர்கள் விடுதலைக்கு தனிப் பட்ட யாரும் உரிமை கொண்டாட முடியாது. அனைத்து கட்சிகளின் கூட்டு முயற்சியே இதற்கு கார ணம் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கூறினார். ஜி.கே.வாசன் தொடங்கும் புதிய கட்சிக்கான இணையதளம் மற்றும் ஆண்ட்ராய்டு அப்ளிகே ஷன் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை ஆழ்வார்பேட்டையில் நேற்று நடந்தது. அப்போது வாசன் கூறியதாவது:

புதிய இயக்கத்துக்கு ஆதரவு திரட்டும் விதமாக ‘ஐ சப்போர்ட் ஜி.கே.வாசன்’ என்னும் ஆண்ட்ராய்டு அப்ளிகேஷனை எங்கள் மாணவர் அணியினர் உருவாக்கி யுள்ளனர். இதை கூகுள் பிளேஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். எங்கள் இயக்கத்தை பிரபலப்படுத்த www.gkvasan.co.in என்ற இணைய தளத்தையும் தொடங்கியுள்ளோம். வரும் வாரத்தின் முதல் 3 நாட்களுக்குள் கட்சியின் பெயரை அறிவித்துவிடுவோம்.

திருச்சி பொதுக்கூட்டம் இந்த மாதம் 28-ம் தேதி மதியம் 2 மணி அளவில் இசை நிகழ்ச்சிகளுடன் தொடங்கும். சரியாக மாலை 4.35 மணிக்கு கட்சிக் கொடி அறிமுகப்படுத்தப்படும். இந்திய அளவில் தேசத் தந்தை காந்தியடிகளின் பெயரைச் சொல்லாதவர் களே இருக்க முடியாது. அதேபோல, தமிழகத்தில் காமராஜர் பற்றி பேசாமல் யாரும் இருக்க முடியாது. அவரது பெயரையும், படத்தை யும் தவிர்க்க வேண்டும் என்பவர் களால் ஒருபோதும் ஆட்சி அமைக்க முடியாது. அவரைப் பற்றிப் பேசாமல் மக்களின் நம்பிக் கையை பெறமுடியாது. அவரது பெயர் இல்லாமல் அரசியலே கிடையாது.

நாங்கள் புதுக் கட்சி அறிவித்த அடுத்த 48 மணி நேரத்தில் தங்கச்சி மடம் சென்று 5 மீனவர்களின் குடும்பத்துக்கும் ஆறுதல் சொன்னோம். மீனவர்கள் வீடு திரும்பியதற்கு யாரும் தனிப்பட்ட முறையில் உரிமை கொண்டாட முடியாது. அனைத்து கட்சிகளின் தொடர் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங் களே இதற்கு காரணம்.

பாஜகவுடன் சேர்வதற்காகவே நான் புது இயக்கம் ஆரம்பிப்பதாக கார்த்தி சிதம்பரம் கூறியிருக்கிறார். அரண்டவர் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பார்கள். தினமும் எங்களைப் பற்றி பேசித்தான் அவர்களது கட்சியை வளர்க்கவேண்டும் என்றால், அவர்கள் தாராளமாக அதையே செய்யட்டும். எங்களது பணிகளை கவனிக்க 24 மணி நேரம் போதவில்லை. இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.

காங்கிரஸில் இருந்து விலகிய ஏராளமான வழக்கறிஞர்கள், இளைஞர்கள் ஜி.கே.வாசனுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x