Published : 14 Jul 2019 10:29 AM
Last Updated : 14 Jul 2019 10:29 AM
தமிழகத்தில் 15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகளில் உள்ள 9.69 லட்சம் கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு இல்லை என உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்ந்த அதிகாரிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்த 2001-ல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை செயல்படுத்தினார். மேலும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அனைத்து கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்பு கட்டாயப்படுத்தப்பட்டன. கட்டிட வரைப்படத்தில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு இருந்தால் மட்டுமே புதிய கட்டிடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டன. இதனால் 80 சதவீதக் கட்டிடங்களில் மழை நீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத் தப்பட்டன. நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்ந்தது.
காலப்போக்கில் உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் மழைநீர் சேகரிப்பு திட்டம் முறையாக அமல்படுத்தப்படவில்லை. மேலும் ஏற்கெனவே அமைத்திருந்த கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்பு முறையாக பராமரிக்கப்படவில்லை. கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் போதிய மழை இல்லாததால் நிலத்தடி நீர்மட்டம் பல இடங்களில் குறைந்து வருகிறது. இதையடுத்து மீண்டும் மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை தமிழக அரசு தீவிரப் படுத்தி வருகிறது.
இது தொடர்பாக உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகள் ஆய்வு செய்ததில் ஏராளமான கட்டிடங் களில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு இல்லாததும், ஏற்கெனவே அமைக்கப்பட்டிருந்த கட்டிடங் களிலும் அவை பயன்பாடின்றி கிடப்பதும் தெரியவந்துள்ளது. 12 லட்சம் கட்டிடங்கள்2019-ம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி, சென்னை மாநகராட்சியில் மட்டும் 12 லட்சம் கட்டிடங்கள் உள்ளன. இதில் 8.05 லட்சம் கட்டிடங்களில் மட்டுமே மழைநீர் சேகரிப்பு அமைப்பு உள்ளது. அதேபோல் மற்ற 14 மாநகராட்சிகள், 121 நகராட்சிகளில் மொத்தம் 45.14 லட்சம் கட்டிடங்கள் உள்ளன. இதில் 39.40 லட்சம் கட்டிடங்களில் மட்டுமே மழைநீர் சேகரிப்பு அமைப்பு உள்ளது. இதிலும் பாதிக்கும் மேற்பட்ட கட்டிடங்களில் முறையான பராமரிப்பு இல்லாததால் மழைநீர் சேகரிப்பு அமைப்பு பயன்பாடின்றி இருக்கின்றன. ஒட்டுமொத்தமாக 15 மாநகராட்சிகள் மற்றும் 121 நகராட்சிகளில் உள்ள 9.69 லட்சம் கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு இல்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதேபோல, சென்னையை தவிர்த்த மற்ற நகரங்களில் உள்ள 30,331 அரசு அலுவலகங்களில் 70 சதவீதம் அலுவலகங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு பயன் பாடின்றி உள்ளன. அதிகாரிகள் எச்சரிக்கைஇதையடுத்து, கட்டிடங்களில் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை சீரமைக்கவும், இதுவரை அமைக் காமல் உள்ளோரை புதிதாக மழை நீர் சேகரிப்பு அமைப்ப உருவாக்க வலியுறுத்தியும் உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகள் எச்சரித்து வருகின்றனர்.
இதுகுறித்து நகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: முதல் கட்டமாக மழைநீர் சேகரிப்பு அமைப்பை ஏற்படுத்த வலியுறுத்தி வருகிறோம். தொடர்ந்து நோட்டீஸ் கொடுப்போம். இறுதியாக குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும். புதிய கட்டிடங்களுக்கு மழைநீர் சேகரிப்பு அமைப்பு இருந்தால் மட்டுமே அனுமதி கொடுக்கிறோம் என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT