Published : 14 Jul 2019 07:25 AM
Last Updated : 14 Jul 2019 07:25 AM

வாராணசியில் நடைபெறுவதுபோல பூடானிலும் ‘வாக்யார்த்த சதஸ்’ நடத்தப்படும்: சுவாமி விவேகானந்த சரஸ்வதி உறுதி

வாராணசி சம்பூர்ணானந்த் பல்கலைக்கழகத்தில் நடப்பதுபோல, பூடானிலும் வாக்யார்த்த சதஸ் நடத்தப்படும் என்று அந்நாட்டின் மன்னர் வம்சத்து ராஜகுரு சுவாமி விவேகானந்த சரஸ்வதி தெரிவித்தார்.

ஹைதராபாத்தில் உள்ள இண்டிக் அகாடமியின் இன்டர்-குருகுலா பல்கலைக்கழக மையம், ஹைதராபாத்தில் உள்ள பாரதிய சிக்‌ஷன் மண்டல் என்ற அமைப்புடன் இணைந்து வாராணசி சம்பூர்ணானந்த் சம்ஸ்கிருத பல்கலைக்கழகத்தில் முதலாவது சர்வதேச வாக்யார்த்த சதஸை நடத்தி வருகிறது. இந்த 3 நாள் சதஸில் இந்தியா மட்டுமின்றி, பூடான், நேபாள நாடுகளைச் சேர்ந்த வேத விற்பன்னர்கள் பலரும் பங்கேற்றுள்ளனர்.

இந்த சதஸ் 11 சம்ஸ்கிருத சாஸ்திரங்களின் அடிப்படையில் 11 அமர்வுகளைக் கொண்டுள்ளது. கடந்த 2 நாட்களில் வியாக்கரண சாஸ்திரம், நியாய சாஸ்திரம், மீமாம்ஸா சாஸ்திரம், பிராசீன நியாய சாஸ்திரம், ஜோதிஷம், கணிதம், வைசேஷிகம் ஆகிய சாஸ்திர தலைப்புகளில் 7 அமர்வுகள் நடைபெற்றன.

நேற்று காலை யக்ஞசாலா வேத ஆய்வுத் துறை அரங்கில் ராஷ்ட்ர – மித்ரவிந்தா இஷ்டி (யாகம்) என்ற நிகழ்ச்சியும் மாலை பாணினி அரங்கில் சம்ஸ்கிருத அஷ்டாவதானம் நிகழ்ச்சியும் நடைபெற்றன.

சர்வதேச வாக்யார்த்த சதஸ்குறித்து பூடான் மன்னர் வம்சத்து ராஜகுரு சுவாமி விவேகானந்த சரஸ்வதி கூறும்போது, “சம்பூர்ணானந்த் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் முதலாவது சர்வதேச வாக்யார்த்த சதஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். வாராணசி போன்ற புண்ணியத் தலங்களில் வாக்யார்த்த சதஸ் நடைபெறுவது மிகவும் பொருத்தமானது. இதன்மூலம், சம்ஸ்கிருத மொழியில் உள்ள சாஸ்திரங்களை பலரும் அறிந்துகொள்ள முடியும்.

மாணவர்கள் தங்கள் சந்தேகங்களுக்கு விளக்கமும், ஆழ்ந்த ஞானமும் பெறலாம். பூடான் நாட்டிலும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்’’ என்றார்.

இன்று நிறைவு

சம்பூர்ணானந்த் சம்ஸ்கிருத பல்கலைக்கழகத்தில் கடந்த 2 நாட்களாக நடைபெறும் இந்த சதஸ் இன்று நிறைவடைகிறது. நிறைவுநாளான இன்று யோக சாஸ்திரம், ஆயுர்வேதம், த்வைதவேதாந்த சாஸ்திரம், அத்வைத வேத சாஸ்திரம், அத்வைத வேதாந்த சாஸ்திரம் ஆகிய சாஸ்திர தலைப்புகளில் 4 அமர்வுகள் நடக்கின்றன. விழா நிறைவில் வேத விற்பன் னர்கள் கவுரவப்படுத்தப்பட உள்ளனர்.

பல்கலைக்கழகத்தின் பாணினி அரங்கத்தில் நடைபெறும் தனுர்வேத ராஜ்ய சாஸ்திரம் மற்றும் ஆயுர்வேத குருகுலங்களுக்கு பாடத்திட்ட உருவாக்கம் குறித்த 3 நாள் பயிலரங்கமும் இன்று நிறைவடைகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x