Published : 14 Jul 2019 06:31 PM
Last Updated : 14 Jul 2019 06:31 PM

மதுரை மாநகராட்சி தெருவிளக்கு மின் கட்டணம் 14 மாதங்களுக்கு ரூ.104 கோடியா? தவறான தகவல் கொடுத்த அதிகாரிகள் 4 பேருக்கு மெமோ

மதுரை மாநகராட்சியில் உள்ள தெருவிளக்குகளுக்கு 14 மாதத்திற்கு ரூ.104 கோடி மின் கட்டணம் செலுத்தியதாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மாநகராட்சி அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர். அதிர்ச்சியடைந்த தகவல் பெற்றவர் அளித்த புகாரால் தவறான தகவல் அளித்த 4 அதிகாரிகள் மீது மாநகராட்சி நிர்வாகம் ‘மெமோ’ கொடுத்து நடவடிக்கை எடுத்துள்ளது.

மதுரை மாநகராட்சியில் 100 வொர்டுகளில் மொத்தம் 43,898 தெருவிளக்குகள் உள்ளன. மண்டலம் வாரியாக 1-வது மண்டலத்தில் 15,827, 2-வது மண்டலத்தில் 15,975, 3-வது மண்டலத்தில் 9,275, 4-வது மண்டலத்தில்12,821 தெருவிளக்குகள் உள்ளன. இந்த தெருவிளக்குகளுக்கு மின் விநியோகம் செய்வதற்கு 1-வது மண்டலத்தில் 942 மின் இணைப்புகளும், 2-வது மண்டலத்தில் 828 மின் இணைப்புகளும், 3-வது மண்டலத்தில் 747 மின் இணைப்புகளும், 4-வது மண்டலத்தில் 808 மின் இணைப்புகளும் உள்ளன. இந்த மின் இணைப்புகள் மூலம் தெருவிளக்குகளுக்கு மண்டலம் வாரியாக மாதந்தோறும் 1-வது மண்டலத்தில் 9 லட்சத்து 46 ஆயிரத்து 600 யூனிட்டும், 2-வது மண்டலத்தில் 12 லட்சத்து 50 ஆயிரத்து 800 யூனிட்டும், 3-வது மண்டலத்தில் 75 லட்சத்து 52 ஆயிரத்து 200 யூனிட்டும், 4-வது மண்டலத்தில் 11 லட்சத்து 69 ஆயிரத்து 100 யூனிட் மின்சாரமும் பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில் மதுரை நெல்பேட்டையைச் சேர்ந்த ஹக்கீம் 100 வார்டுகளின் உள்ள மொத்த தெருவிளக்குகளுக்கு மின் கட்டணம், பயன்படுத்தப்படும் மின்சாரத்தின் அளவு, பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்காக கட்டப்படும் மின் கட்டணம் எவ்வளவு என்பது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களைக் கேட்டிருந்தார்.

இதற்கு பதில் அளித்த மாநகராட்சி நிர்வாகம், ஒரு மாதத்திற்கு 41 லட்சத்து 21 ஆயிரத்து 700 யூனிட்டுகள் பயன்படுத்தப்படுவதாகவும், அதற்காக மின்சார வாரியத்திற்கு கடந்த 1.4.2018 முதல் 1.5.2019 வரை 14 மாதங்களுக்கு மின்வாரியத்திற்கு மாநகராட்சி 104 கோடியே 55 லட்சத்து 45 ஆயிரத்து 937 ரூபாய் மின் கட்டணமாக செலுத்துவதாகவும் தகவல் அளித்தது. இந்த தகவலைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஹக்கீம், உடனடியாக மாநகராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று, இந்தத் தகவல் உண்மையா? என்று கேட்டுள்ளார். அதற்கு மாநகராட்சி நிர்வாகம், மின் கட்டணம் செலுத்திய தொகையை தவறுதலாகத் தந்துவிட்டோம் என்றது.

தவறான தகவல் கொடுத்த தெருவிளக்கு பிரிவு 4 உதவிப் பொறியாளர்களுக்கு தற்போது மாநகராட்சி நிர்வாகம் மெமோ கொடுத்துள்ளது.

அத்துடன் கணிணி ஆப்ரேட்டர் செல்லத்துரை பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து ஆர்டிஐ தகவல் பெற்ற ஹக்கீம் கூறுகையில், ‘‘தெருவிளக்கிற்கு மட்டும் 14 மாதத்தில் ரூ.104 கோடிக்கு மேல் மின்கட்டணம் செலுத்தியதாக வந்த தகவலைப் பார்த்து முதலில் குழப்பமும், அதிர்ச்சியும்அடைந்தேன். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பெறப்பட்ட தகவல்கள் பல முறை உறுதி செய்யப்பட்ட சம்பந்தப்பட்ட மனுதாரர்களுக்கு தபாலில் அனுப்பி வைக்கப்படுகிறது. அப்படிப்பட்ட தகவல் பொய்யாக இருக்க வாய்ப்பில்லை என்று நம்பி, இந்த பெரும்தொகை மின் கட்டணத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். ஆனாலும், ஒரு யூனிட்டுக்கு 12 ரூபாய் என்று வைத்துக் கொண்டால் கூட ரூ.5 கோடியே 77 லட்சத்து 3 ஆயிரத்து 800 தானே வரும் என நினைத்து

மாநகராட்சியை அணுகி விவரம் கேட்டபோதுதான் தெரிந்தது, குளறுபடியால் எனக்கு அளித்த தகவல் தவறானது என்பது தெரியவந்தது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பெறும் தகவல்களே இப்படி தவறாகஇருக்கும்போது மற்ற தகவல்களை எப்படி நம்புவது. அதனால், இதுபோன்ற தவறுகள் மீண்டும் நடக்கக்கூடாது’’ என்றார்.

இதுகுறித்து மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் சரியான தகவல் அளிப்பது அரசு ஊழியர்களின் பொறுப்பு. தவறான தகவல் அளித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, ’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x