Published : 14 Jul 2019 10:04 AM
Last Updated : 14 Jul 2019 10:04 AM
கோவை-பொள்ளாச்சி நெடுஞ் சாலையில் உள்ள குறிச்சி குளத்தின் மறுகரையில் இருக்கிறது அந்த அரசு மேல்நிலைப் பள்ளி. மாணவர்களின் எண்ணிக்கை 2017-ல் 120-ஆக சுருங்கி, மூடப்படும் நிலைக்குச் சென்ற அந்தப் பள்ளியில் தற்போதைய மாணவர் எண்ணிக்கை 170-ஐ தாண்டியிருக்கிறது. இதில் 100 பேர் தற்போது விளையாட்டு வீரர்கள். இதற்கு வித்திட்டவர் இப்பள்ளியின் தலைமை ஆசிரியர்.
போதிய கட்டமைப்பு வசதிகள் ஏதும் இல்லாத நிலையிலும், எப்படி சாத்தியமானது இந்த வெற்றி? தலைமையாசிரியர் சாந்தியிடம் பேசினோம்.
“பள்ளியை மேம்படுத்த பலர் கிட்ட உதவி கேட்டும், பெருசா எந்த உதவியும் கிடைக்கலை. ‘நாம போய் உதவி கேக்கறதைவிட, நம்மளைத்தேடி உதவி வரணும்னா நீங்க சாதிக்கணும்’னு மாணவர்களுக்குப் புரியவெச்சோம். இங்க படிக்கற குழந்தைகள் படிப்பைவிட, விளையாட்டுல ஆர்வமாக இருந்ததை கண்டுபுடிச்சு, அரசுப் பள்ளிகள் கையில எடுக்காத தேக்வாண்டோ, ஜூடோ, நீச்சல், வாள்வீச்சுப் போட்டிகள்ல பயிற்சி கொடுத்தோம். அதோடு விளைவு, போன வருஷம் மண்டல அளவுல நடந்த தேக்வாண்டோ, ஜூடோ, வாள்வீச்சு, நீச்சல் போட்டிகள்ல எங்க பசங்க 91 பதக்கங்களை குவிச்சாங்க. அதுக்கு அப்புறம்தான் மாற்றம் வர ஆரம்பிச்சுது” என்றார்.
உறுதுணையான ஆசிரியர்கள்!
நீச்சல் குளம் அமைத்து, பிரத்தியேக பயிற்சியளிக்கும் தனியார் பள்ளிகளுடன் போட்டிபோட்டு, மண்டல அளவில் நடைபெற்ற நீச்சல் போட்டிகளில் இப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
இதற்கு பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்கள் சிவப்பிரகாசம், நிசார் ஆகியோர் காரணமாக இருந்துள்ளனர். இவர்களின் பயிற்சியால் 7 பேர் மாநில அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் பங்கேற்றுள்ளனர். 12-ம் வகுப்பு மாணவி பிரவீணா, கராத்தேவில் தேசிய அளவில் 4-ம் இடம் பிடித்துள்ளார்.
மற்றொரு மாணவி சனுஷா, பஞ்சாபில் நடைபெற்ற தேசிய அளவிலான ‘சைக்கிள் போலா’ போட்டிக்குத் தேர்வாகியும், அங்கு செல்ல போதிய பணம் இல்லாததால் செல்ல முடியவில்லை.
உள்ளூர் போட்டிகளுக்கு சென்று வரும் போக்குவரத்து செலவு, விளையாட்டு உபகரணங்களுக்கு ஆகும் செலவை பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்கள், சக ஆசிரியர்கள் பகிர்ந்துகொள்கின்றனர்.
பிளாஸ்டிக் பைப்பில் பயிற்சி!
“புதிய போட்டிகளுக்கு பயிற்சி பெறும் முன், கபடிதான் இந்தப் பள்ளி மாணவர்களுக்கு பிரதான விளையாட்டு. எனவே, கபடியில் யார் எதிரணி வீரர்களை லாவகமாக பிடிக்கிறார்களோ, அவர்களை ஜூடோ பயிற்சிக்குத் தேர்வு செய்தோம். ‘மேட்’ வாங்க பணமில்லாததால், ஜூடோ பயிற்சியின்போது அடிபடாமல் இருக்க அட்டைகளுக்குள் தெர்மாகோல் வைத்து, ‘மேட்’ போன்று பயன்படுத்தினோம். அதுவும், அடிப்படை நுணுக்கங்களை மட்டுமே கற்றுக்கொடுத்தோம். யூ-டியூப் வீடியோக்கள் மூலம்தான், மேம்பட்ட சில நுணுக்கங்களை மாணவர்களுக்கு காண்பிக்க முடிந்தது.
சொட்டுநீர் பாசன பைப்புகளை வைத்து சண்டையிடச் செய்து, கால்களின் வேகம் அதிகமுள்ள மாணவர்களை வாள் வீச்சுப் பயிற்சிக்குத் தேர்ந்தெடுத்தோம். விடுமுறை நாட்களில் குறிச்சி குளத்தில் நீச்சல் அடிக்கும் மாணவர்களைக் கண்டறிந்து, காந்திபார்க்கில் உள்ள மாநகராட்சி நீச்சல் குளத்தில், நீச்சல் போட்டிக்கான அடிப்படைப் பயிற்சிகளைக் கற்றுக் கொடுத்தோம். இதை வைத்தே, மாணவர்கள் பதக்கங்களைக் குவித்துள்ளனர். இவர்களுக்கு முறையான உபகரணங்களும், பயிற்சியும் இருந்தால் தேசிய அளவில் சாதிப்பார்கள்” என்கின்றனர் உடற்கல்வி ஆசிரியர்கள் சிவப்பிரகாசமும், நிசாரும்.
எல்லாமே ‘அம்மா’தான்..
வேறொரு பள்ளியில் ஆறாம் வகுப்புடன் இடைநின்ற, போத்தனூரைச் சேர்ந்த மாணவர் ஆகாஷ்(14) தற்போது இப்பள்ளியின் நீச்சல் வீரர். `படிப்பு வரலைன்னு ஆறாவதோட நின்னுட்டேன். குறிச்சி குளக்கரையில் சுத்திக்ட்டு, மீன் பிடிச்சிக்கிட்டு இருப்பேன். அப்போ அந்த வழியாக ‘அம்மா’ (தலைமை ஆசிரியர்), வரும்போதும், போகும்போதும் வணக்கம் சொல்லுவேன். ஒருநாள் அம்மா என்னையக் கூப்பிட்டு, `ஏன்டா, படிக்க வருகிறாயா? உன்னைய நான் பள்ளிக்கூடத்துல சேத்துக்கறேன்னு சொன்னாங்க. அம்மாவோட அன்பு பிடிச்சுப்போய், இந்தப் பள்ளிக்கூடத்துல சேர்ந்துட்டேன். நாங்க நீச்சல் போட்டிக்குப் போனப்ப, எங்கிட்ட தலைக்குபோடற உறை, நீச்சலுக்குப் பயன்படற கண் கண்ணாடி எதுவும் இல்ல. வெறும் ஷார்ட்ஸ், பனியன் மட்டும்தான் இருந்துச்சு. ஆனாலும், நாங்க ஜெயிச்சோம்” என்று உற்சாசம் ததும்பப் பேசினார் நீச்சலில் மண்டல அளவில் இரண்டாமிடம் பிடித்த மாணவர் ஆகாஷ்.
வெறும் கட்டிடங்களும், கட்டமைப்பு வசதிகளும் மாணவர்களின் தனித் திறமைகளை வளர்க்க உதவாது. மரத்தடியில்கூட பாடம்சொல்லிக்கொடுக்கலாம். அரசுப் பள்ளி ஆசிரியர்களின் அரவணைப்பு இருந்தாலே, சாதனையாளர்களை உருவாக்க முடியும் என்பதற்கு இப்பள்ளி ஓர் முன்னுதாரணம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT