Published : 13 Jul 2019 06:49 PM
Last Updated : 13 Jul 2019 06:49 PM

ஏரியை ஆய்வு செய்ய வந்தவர்களைக் கைது செய்தது ஏன்?- காவல்துறை விளக்கம்; அறப்போர் இயக்கம் மறுப்பு

கல்லுக்குட்டை ஏரியை ஆய்வு செய்ய வந்தவர்களைக் கைது செய்தது ஏன் என்பது குறித்து காவல்துறை விளக்கமளித்த நிலையில், அதை அறப்போர் இயக்கம் மறுத்துள்ளது.

நீர்நிலைகளைத் தூய்மைப்படுத்தி, தூர் வாரும் பணிக்காக 'அறப்போர் இயக்கம்' என்னும் தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த 11 பேர் சென்னை, தரமணியில் உள்ள கல்லுக்குட்டை ஏரிக்கு இன்று (சனிக்கிழமை) காலை ஆய்வு செய்யச் சென்றனர்.  ஆனால் ஏரியை ஆய்வுசெய்ய முன் அனுமதி வாங்கவேண்டும் என்றுகூறி காவல்துறையினர் அவர்களைக் கைது செய்து மண்டபத்தில் வைத்திருந்தது. மாலை சுமார் 5.30 மணியளவில் தன்னார்வலர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஆய்வு செய்ய வந்தவர்களைக் கைது செய்தது ஏன் என்பது குறித்து தரமணி காவல் நிலைய ஆய்வாளர் ஜெயராஜிடம் 'இந்து தமிழ்' சார்பில் பேசினோம். இதுகுறித்து விளக்கமளித்த அவர், ''இந்த இயக்கத்தினர் ஏரியை ஆய்வு செய்ய கும்பலாக வந்துள்ளனர். அங்கு குடியிருப்பவர்களில் ஒருவரான மதி என்பவர், 'எதற்காக இங்கு வந்திருக்கிறீர்கள், அரசிடமோ, தாசில்தாரிடமோ அனுமதி பெற்றிருக்கிறீர்களா?' என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு, 'அதெல்லாம் உன்னிடம் சொல்லவேண்டியதில்லை, போ' என்று பிரச்சினை செய்துள்ளனர்.

'அத்துமீறிக் குடியிருக்கிறார்கள் என்று தங்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்குமோ?' என்று பயந்த மதி, தரமணி காவல் நிலையத்திடம் வந்து புகார் அளித்தார். அவரின் புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்தோம். சட்டம், ஒழுங்கு பிரச்சினை வந்துவிடக்கூடாது என்பதால் எங்களிடம் கேட்டு விட்டுத்தான் ஆய்வு நடத்தவேண்டும்'' என்றார் ஆய்வாளர் தேவராஜ்.

ஆனால் தேவராஜின் குற்றச்சாட்டை அறப்போர் இயக்கம் முழுமையாக மறுக்கிறது. இதுகுறித்து அவ்வியக்கத்தைச் சேர்ந்த ஜெயராமன் நம்மிடம் கூறும்போது, ''தன்னார்வலர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு, சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். என்ன பிரிவுகளில் வழக்கு போடப்பட்டது என்று தெரியவில்லை. காவல்துறை சொல்வதில் உண்மையில்லை. உள்ளூர் மக்களுடன் இணைந்துதான் பணியாற்றிவருகிறோம். ஏன், கைதான 11 பேரில் ஒருவர்கூட உள்ளூர் நபர்தான்.

இதுவரை 30 ஏரிகளை ஆய்வு செய்துள்ளோம். இதுவரை இப்படிப்பட்ட பிரச்சினை ஏற்பட்டதில்லை. 'கேளு சென்னை கேளு' என்ற தண்ணீர் தொடர்பான நிகழ்ச்சியை நடத்தியபோது காவல்துறை அனுமதி கொடுக்கவில்லை. நீதிமன்றம் சென்று அனுமதி வாங்கி, நிகழ்ச்சியை நடத்தினோம். 'Know your Rights' என்ற நிகழ்ச்சியை வார்டு தோறும் மண்டபங்களில் நடத்தி வருகிறோம். மண்டப உரிமையாளரை போலீஸார் மிரட்டியுள்ளனர். எங்கள் மீது துல்லிய தாக்குதலைத் தீவிரமாக நடத்துகின்றனர்.

ஆளுங்கட்சியின் அழுத்தம் காரணமாக குறிப்பாக அமைச்சர் வேலுமணியாலேயே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. போலீஸாரும், 'மேலிடத்து பிரஷர் சார், நாங்க ஒண்ணும் பண்ணமுடியாது' என்கின்றனர். ஏற்கெனவே நாங்கள் அவரின் ஊழலை வெளிக்கொண்டு வந்து அவர் மீது வழக்கு தொடுத்திருக்கிறோம். அவர் எங்கள் மீது போட்ட 18 அவதூறு வழக்குகளிலும் தோல்வியடைந்துவிட்டார். இதுதான் இந்த தாக்குதலுக்கான காரணம்.

வழக்குகளில் ஜனநாயக நாட்டில், ஓர் ஏரியைச் சென்று பார்ப்பதே தவறு என்றால், சாலையில் நடக்கக் கூடாது என்று சொல்வது போலத்தான். ஒருபக்கம் முதல்வர், 'ஏரிகளைக் காப்பாற்ற வேண்டும். மக்கள் அனைவரும் வாருங்கள்' என்கிறார். மறுபுறம் காவல்துறை கைது செய்கிறது.

தண்ணீர்ப் பஞ்சம் இருக்கும் நேரத்தில் தண்ணீருக்காக வேலை செய்ய வரும் தன்னார்வலர்கள் மீது வழக்கு பதிவு செய்வதை எப்படி எடுத்துக்கொள்வது? ஜனநாயகத்தின் குரல்வளையையே நசுக்குகின்ற செயலாகத்தான் இதைப் பார்க்க முடிகிறது'' என்கிறார் ஜெயராமன்.

மழையை எதிர்நோக்கித் தலைநகரும் தமிழ்நாடும் காத்துக்கிடக்கும் இந்த சூழலில், ஏரி உள்ளிட்ட நீராதாரங்கள் தூர்வாரப்பட வேண்டியது அவசர அவசியம். இதை எல்லா இடங்களிலும் அரசு முன்னெடுக்க முடியாவிட்டாலும், செய்யும் தனியார்களைத் தடுக்காமலாவது இருக்கலாம் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x