Last Updated : 05 Jul, 2019 12:00 AM

 

Published : 05 Jul 2019 12:00 AM
Last Updated : 05 Jul 2019 12:00 AM

கிருஷ்ணகிரி மாங்கனி கண்காட்சியில் மா போட்டியில் பங்கேற்க ஆர்வமில்லாத வெளியூர் விவசாயிகள்: பயனற்ற பரிசுகள் வழங்குவதை தவிர்க்க வலியுறுத்தல்

கிருஷ்ணகிரியில் நடந்து வரும் மாங்கனி கண்காட்சியில், பயனற்ற பரிசுகள் வழங்கப்படுவதாக கூறி, வெளியூர் விவசாயிகள் 250-க்கும் மேற்பட்டோர் மா போட்டியில் பங்கேற்க ஆர்வம் காட்டவில்லை.

கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், 27-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி நடைபெற்று வருகிறது. இக்கண்காட்சியில் மா விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், மா ரகங்களுக்கான போட்டி நடத்தப்படுகிறது. இதற்காக கிருஷ்ணகிரி, தருமபுரி உட்பட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களையும் சேர்ந்த விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் விளையும் மாங்கனி வகைகளை காட்சிக்கு வைத்துள்ளனர்.

மாங்கனி விழா தொடங்க தினத்தில் சிறந்த மாங்கனி ரகங்களை, தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் தேர்வு செய்கின்றனர். இதில், தேர்வு செய்யப்படும் மா விவசாயிகளுக்கு, நிறைவு நாளில் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. இந்நிலையில், மா போட்டியில் பங்கேற்று வெற்றி பெறும் விவசாயிகளுக்கு பயனற்ற பரிசுகள் வழங்கப்பட்டு வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர் மா விவசாயிகள்.

இதுதொடர்பாக மா விவசாயிகள் சிலர் கூறியதாவது:

மா விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் கடந்த 27 ஆண்டுகளாக அகில இந்திய அளவிலான மாங்கனி கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. கண்காட்சி தொடங்கப்பட்ட சில ஆண்டுகள் வரை கண்காட்சியில் விவசாயிகள் கூடுதல் லாபம் பெறவும், புதிய தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ளவும் முடிந்தது. சர்வதேச சந்தையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விளையும் மாங்கனி மற்றும் மா சார்ந்த உற்பத்தி பொருட்களை பெரும் அளவில் சந்தைப்படுத்த ஒரு தளத்தை ஏற்படுத்துவதற்கான களமாகவும் பயன்படுத்தப்பட்டது.

காலப்போக்கில் மாங்கனி விழா பொருட்காட்சியாக மாற்றப்பட்டு, லாப நோக்கில் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது. மா விவசாயிகளின் பெயரில் விவசாயிகள் அல்லாதவர்கள் பயன் பெற்று வருகின்றனர். மேலும், மாங்கனி விழாவில் நடைபெறும் மா போட்டியில் பங்கு பெறும் விவசாயிகளுக்கு ‘ஹாட் பாக்ஸ்’ போன்ற குறைந்த மதிப்புள்ள பரிசுகள் வழங்குவதால், கடந்த 3 ஆண்டுகளாகவே வெளியூர் மா விவசாயிகள் 250-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வதில்லை.

இப்போட்டியில் வெற்றி பெறும் விவசாயிகளுக்கு, மருந்து தெளிப்பான் மற்றும் வேளாண் கருவிகளை பரிசாக வழங்க வேண்டும். மழையின்றி வறட்சியால் மா விவசாயிகள் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வரும் நிலையில், மா விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் மாங்கனி கண்காட்சியை நடத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x