Published : 13 Jul 2019 10:35 AM
Last Updated : 13 Jul 2019 10:35 AM
நீலகிரி மாவட்டம் உதகையில் நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கம் (என்சிஎம்எஸ்) இயங்கி வருகிறது. உதகை பூங்கா செல்லும் சாலை யிலுள்ள இச்சங்கத்துக்கு சொந்த மான இடத்தில், தற்காலிக கடைகள் இருந்தன. ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை டெண்டர் மூலமாக கடைகள் வாடகைக்கு விடப்படுகின்றன. இந்த கடைகளின் டெண்டர் கோரும் தொகை மற்றும் மாதாந்திர வாடகை மூலமாக, கூட்டுறவு நிறுவனத்துக்கு பல கோடி ரூபாய் வருவாய் கிடைத்து வருகிறது.
இந்நிலையில், தற்காலிக கடைகளை அகற்றி 35 நிரந்தர கடைகள் கட்டப்பட்டுள்ளன. கட்டு மானப் பணி நிறைவடைந்துள்ள நிலையில், கடைகளை ஏலம் மூலமாக வாடகைக்கு கொடுக்க, கூட்டுறவு நிறுவன அதிகாரிகள் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் முடிவு எடுத்தனர். விருப்பம் உள்ளவர்கள், ரூ.1 லட்சம் செலுத்தி ஏலம் கோரலாம் என கடந்த மாதம் என்சிஎம்எஸ் நிறுவனம் அறிவித்தது.
இப்பகுதியில் சுற்றுலா பேருந்து கள் நிறுத்துமிடம் உள்ளதாலும், சுற்றுலாபயணிகள் நடமாட்டம் அதிமாக இருப்பதாலும் கடைகளை ஏலம் எடுக்க கடும் போட்டி உள்ளது. இதனால், ஏற்கெனவே தற்காலிக கடைகளை நடத்தி வந்த வியாபாரிகள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர், ஏலம் கோர ரூ.ஒரு லட்சம் செலுத்தி விண்ணப்பித்தனர். ஜூன் 27-ம் தேதி ஏலம் நடத்த கெடு நிர்ணயிக்கப்பட்டது.
ஏலம் ரத்து
இந்நிலையில், நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்திலுள்ள 11 ஆளும் கட்சி இயக்குநர்களில், 7 பேர் கடைகளை ஏலம் விட வேண்டும் என தெரிவித்தனர். மீதமுள்ளவர்கள், ஏலம் என்ற பெயரில் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு கடையை வாடகைக்கு விட வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், இயக்குநர்களிடையே 'பனிப்போர்' நிலவியது.
இதனால், கடந்த, 27-ம் தேதி நடக்க இருந்த டெண்டர், தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப் பட்டது. டெண்டருக்காக காத்தி ருந்தவர்கள் ஏமாற்றமடைந்தனர். என்சிஎம்எஸ் கூட்டுறவு நிறுவனத் துக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வியாபாரிகள் கூறும்போது, 'ஏற்கெனவே கடை நடத்தி வந்த எங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என நிர்வாகத்திடம் தெரிவித்தோம். ஆனால், ஏலம் விட்டால் கூடுதல் வருவாய் கிடைக்கும் என தெரிவித்து ஏலம் அறிவித்தனர்.
ஏலம் கோர ரூ.ஒரு லட்சம் செலுத்தி விண்ணப்பித்தோம். இந்நிலையில், ஏலம் ரத்தானதாக அறிவித்துள்ளனர். ஏலம் ரத்து செய்யப்பட்டதற்கு ஆளும் கட்சியினரே காரணம். ஒவ்வொரு கடைக்கும் குறிப்பிட்ட தொகை செலுத்தினால், கடை ஒதுக்கப்படும் என ஆளும் கட்சியினர் தெரிவித்தனர். ஆளும் கட்சியினர் சிலர் தங்களுக்கு கடைகளை ஒதுக்க வேண்டுமென, அதிகாரிகளை நிர்பந்தத்துக்கு உள்ளாக்கி வருகின்றனர்’ என்றனர்.
கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் லோகநாதனி டம் கேட்டபோது, ‘அந்த சங்கத்தில் உள்ள இயக்குநர்களிடையே ஏற்பட்ட பிரச்சினையால் டெண்டர் நிறுத்தப்பட்டது. விசாரணை நடந்து வருகிறது. விரைவில் இறுதி முடிவு எடுக்கப்படும்’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT