Published : 03 Jul 2019 04:12 PM
Last Updated : 03 Jul 2019 04:12 PM
புனிதமாகக் கருதப்பட்ட பெரிய குளம் வராகநதி தற்போது குப்பை களாலும், சாக்கடை கழிவுகளாலும் மாசடைந்து துர்நாற்றம் வீசி வரு கிறது. இந்த ஆற்றை மீட்க முன்பு இருந்தது போல ‘ரிவர் வாட்சர்' பணியிடங்களை உருவாக்க வேண் டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைநீர் தலச்சி ஆறு, கண்ணக்கரை ஆறு மற்றும் பேரிஜம் ஆறு ஆகியவற்றின் மூலம் ஒருங்கிணைந்து, வராகநதியாக பெரியகுளம் வழியே கடந்து செல்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலை முன்பு வராக மலை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் இருந்து வரும் ஆறுதான் வராகநதி என அழைக்கப்படுகிறது என்றும், கடந்த காலத்தில் மன்னர் ஒருவர் பன்றியை அம் பெய்து கொன்றதால் ஏற்பட்ட தோஷம் நீங்க, இந்த நதியில் வழிபாடு செய்து ஆலயம் கட்டியதால், வராக நதி என்ற பெயர் உருவானதாக இருவேறு கருத்துகள் நிலவுகின்றன.
வைகை நதியின் முக்கிய கிளை ஆறாக உள்ள வராக நதி தாமரைக்குளம், மேல்மங்கலம், ஜெயமங்கலம், டி.வாடிப்பட்டி என ஏறத்தாழ 30 கிமீ. தூரம் பயணித்து குள்ளப்புரம் என்ற இடத்தில் வைகை ஆற்றில் கலக்கிறது.
ஆரம்ப காலத்தில் இந்த ஆறு வழிபாட்டுக்கு உரிய புண்ணிய நதியாக இருந்தது. கோயில் கும்பாபிஷேகத்துக்கு இந்த நதி யில் இருந்து கலசநீர் எடுத்துச் செல்வர். நதியின் இரு கரைகளிலும் இரட்டை விநாயகர் படித்துறை, பெருமாள் கோயில் படித் துறை, மாரியம்மன் கோயில் படித்துறை, அரசமரம் படித் துறை என்று பல்வேறு பகுதிகள் ஏற்படுத்தப்பட்டு, பொதுமக்கள் குளிப்பதற்காக பயன்படுத்தப்ப ட்டுள்ளது.
நீரோட்டம் இல்லாதபோது, வராக நதி மணல்மேடு திறந்த வெளி பொதுக்கூட்ட மைதானமாக பயன்பட்டிருக்கிறது. அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர் போன்ற தலைவர்கள் இந்த இடத்தில் பிரச்சாரம் செய்துள்ளனர். தற் போது வராக நதியில் குப்பைகளை கொட்டுதல், கழிவுநீர் என ஆற்றின் தன்மையே மாசடைந்து போய் விட்டது. இதுகுறித்து தேனி மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் பாண்டியன் கூறியதாவது:
நான் சிறுவயதில் இருந்தபோது வராக நதியின் தண்ணீர் அவ்வளவு ருசியாக இருக்கும். மக்கள் குடிப்பதற்கு இந்த தண்ணீரைத் தான் எடுத்துச் செல்வர். இந்த ஆற்றின் வழிநெடுகிலும் 11 கண்மாய்கள் உள்ளன. அதன் மூலம் நூற்றுக்கணக்கான ஏக் கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்றன. மழைப்பொழிவு குறைவு, ஆக்கிரமிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் இந்த நதியில் படிப்படியாக நீரோட்டம் குறைந்துவிட்டது என்றார்.
நதியின் புனிதம் காக்க, பல ஆண்டுகளுக்கு முன்பு ‘ரிவர் வாட்சர்' என்ற பணியிடம் பெரிய குளம் நகராட்சியில் இருந்துள்ளது.
இப்பணியாளர்கள் தினமும் வராக நதியின் இரு கரைகளிலும் ஆய்வு செய்வர். சுகாதாரக்கேடான செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. காலப்போக்கில் இந்தப் பணி யிடம் மறைந்து விட்டது. எனவே ஆற்றின் வழிநெடுகிலும் உள்ள உள்ளாட்சிகளின் கழிவுநீர் கலப்பதை தடுப்பதுடன், நதியின் சுகாதாரத்தைக் காக்க உரிய கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும். ரிவர் வாட்சர் பணி யிடங்களை உருவாக்கி ஆற்றை கண்காணிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT