Published : 05 Jul 2019 04:14 PM
Last Updated : 05 Jul 2019 04:14 PM
பஞ்சு இல்லாத மெத்தைகள் அதிகளவில் உருவாக்கப்படுவதால் போடி பகுதி இலவம் விவசாயமும், சார்ந்துள்ள தொழிலும் நசிவடைந்து வருகின்றன.
மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரப்பகுதிகளான போடி, குரங்கணி, ஊத்தாம்பாறை, பெரியாற்றுக் கோம்பை, வலசை உள்ளிட்ட பல பகுதிகளில் இலவம் பஞ்சு விவசாயம் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
சிறிய அளவிலான நாட்டுக்காய், சிங்கப்பூர்காய் எனப்படும் பெரிய அளவிலானது என்று இரண்டு விதங்களில் விளைகிறது.
நட்டு 4 ஆண்டுகளில் பலன் தரும் இந்த மரங்களுக்கு பெரியளவில் பராமரிப்பு தேவையில்லை என்பது மிகப்பெரிய ஆறுதல். மார்ச்சில் துவங்கும் சீசன் ஜூன், ஜூலை வரை தொடரும். தற்போது கடந்த ஆண்டை விட விளைச்சல் அதிகமாக உள்ளது.
3 கிலோ பஞ்சை சுத்தப்படுத்தும் போது விதை, நடுவில் உள்ள சிம்பு உள்ளிட்வற்றை நீக்கும் போது ஒரு கிலோ முதல்தர பஞ்சாக உருவாக்கப்படுகிறது.
தற்போது கிலோ ரூ.200-விற்கு விலை போகிறது. இருப்பினும் பறிப்புக்கூலி, சுத்தப்படுத்துதல் செலவினம் உள்ளிட்டவற்றுடன் ஒப்பிடுகையில் குறைவான லாபமே கிடைக்கிறது.
மேலும் இவற்றை சந்தைப்படுத்துவதிலும் பல்வேறு இடர்பாடுகள் உள்ளன.
மெத்தைகளைப் பொறுத்தவரை உள்ளே இருப்பது இலவம் பஞ்சா, பருத்திப்பஞ்சா, மூன்றாம்தர தயாரிப்பா என்று நுகர்வோர்க்கு வெளிப்படையாகத் தெரிவதில்லை. இதனால் இலவம் மெத்தை, தலையணை என்று கூறி இரண்டாம்தர, மூன்றாம் தரத்தை சந்தைப்படுத்தும் நிலை உள்ளது.
இதுஒருபுறம் இருக்க, பஞ்சு இல்லாத மெத்தைகள் அதிகளவில் உருவாக்கப்பட்டு வருகின்றன. ஸ்பிரிங் மெத்தை, தென்னைநார்-ஸ்பான்ஜ் மெத்தை, முழுவதும் ஸ்பான்ஜ், எம்எம்.ஃபோம் எனப்படும் ரப்பர் பாலில் தயாரான மெத்தைகள் என்று சமீபமாய் அதிகரித்துள்ளன.
இதனால் இலவம்பஞ்சின் தேவை குறைந்து சார்ந்துள்ள தொழிலும் நசிவடைந்து வருகிறது.
இது குறித்து விவசாயி சக்தி கூறுகையில், கொல்கத்தா, கேரளா, தமிழ்நாடு பகுதிகளில் இதன் தேவை அதிகம் உள்ளது. வடமாநிலங்களில் பருத்திபஞ்சு பயன்பாடே அதிகம். இலவம் பஞ்சு உடலில் உள்ள கெட்டநீரை உறிஞ்சிவிடும். வெயிலில் போட்டு எடுத்து முறையாக பராமரித்து தொடர்ந்து பயன்படுத்தலாம்.
பல ஆண்டுகளுக்குப்பிறகு இப்பஞ்சு பவுடர் போல மாறிவிடும். பருத்திபஞ்சு கிலோ ரூ.40க்கு கிடைக்கும். அதை இலவம் பஞ்சு மெத்தை என்று கூறி விற்கின்றனர். இதனால் சந்தைப்படுத்துவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது என்றார்.
வியாபாரி விவேகானந்தன் கூறுகையில், பஞ்சு இல்லாத மெத்தைகள் வந்தாலும் இலவத்தின் தன்மையே தனி. வெப்பம் போல தெரிந்தாலும் உடலுக்கு இதமானது. இந்த பஞ்சில் இருந்து நூல் தயாரிக்க முடியாது. அதனால் இதனை வேறுவகையில் சந்தைப்படுத்த முடிவதில்லை. விதையில் இருந்து எடுக்கப்படும் எண்ணையும் தீபத்திற்கு மட்டுமே பயன்படுத்த முடியும். பட்டைகள் முன்பு போல அடுப்பு எரிக்கவும் யாரும் வாங்குவதில்லை என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT