Published : 21 Nov 2014 12:50 PM
Last Updated : 21 Nov 2014 12:50 PM

தமிழ்நாட்டில் பேச்சு உரிமைக்குத் தடையா?- வைகோ கேள்வி

நவம்பர் 27-ம் தேதி மதிமுக சார்பில் நடைபெறும் தியாகத் திருநாள் பினாங்கு பிரகடன விளக்கப் பொதுக்கூட்டத்திற்கு, காவல்துறை அனுமதி வழங்குமாறு தமிழக அரசு அறிவிக்க வேண்டுமென வைகோ வலியுறுத்துயுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய நாட்டின் அரசியல் சட்டம் இந்தியக் குடிமக்களுக்கு உத்தரவாதம் அளித்துள்ள ஜீவாதார உரிமைகளுள் ஒன்றான பேச்சு உரிமைக்கு காவல்துறை அனுமதி மறுப்பது, முந்தைய அரசைப் போல இந்த அரசிலும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றது.

நவம்பர் 27 ஆம் தேதி அன்று, தலைநகர் சென்னையில் தியாகராய நகர் முத்துரங்கன் சாலையில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், என்னுடைய தலைமையில் ‘தியாகத் திருநாள் - பினாங்கு பிரகடன விளக்கப் பொதுக்கூட்டம்’ என்ற தலைப்பில், பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு, காவல்துறையினரிடம் முறைப்படி விண்ணப்பித்து இருந்தோம்.

கடந்த மூன்று நாட்களாக அனுமதி தருகிறோம் தருகிறோம் என்று சொல்லிக் கொண்டே வந்து, இப்போது கூட்டத்திற்கு அனுமதி கொடுக்க முடியாது; பொதுக்கூட்டம் நடத்தக்கூடாது என்று, காவல்துறையினர் வாய்மொழியாக தென்சென்னை மாவட்டச் செயலாளர் மணிமாறனிடம் இன்று தெரிவித்து உள்ளனர். அனுமதி மறுப்பை எழுத்து மூலமாகத் தாருங்கள் என்று கேட்டதற்கு, அதுவும் தர முடியாது என்று காவல்துறையினர் கூறி உள்ளனர்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக இருந்தபோது, சுதந்திரத் தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனச் சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானம்தான், பினாங்கில் நடைபெற்ற அனைத்துலகத் தமிழ் மாநாட்டில் அறிவித்த ‘பினாங்கு பிரகடனம்’ ஆகும்.

கடந்த 2002 ஆம் ஆண்டு, தமிழ் ஈழ விடுதலைப்புலிகளை நேற்றும் ஆதரித்தேன்; இன்றும் ஆதரிக்கின்றேன்; நாளையும் ஆதரிப்பேன் என்று திருமங்கலம் பொதுக்கூட்டத்தில் நான் பேசியதற்காக என் மீதும் எனது சகாக்கள் எட்டுப் பேர் மீதும் பொடா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்து 19 மாதம் சிறையில் அடைக்கப்பட்டோம்.

‘விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசுவது ஜனநாயகம் வழங்கி இருக்கின்ற கருத்து உரிமை ஆகும் என்பதால், நான் பேசியது குற்றமா? என்று கேட்டு, வேலூர் சிறையில் இருந்தவாறு உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தேன்.

‘தடை செய்யப்பட்ட இயக்கத்தில் சேர்ந்து ஆயுதம் ஏந்துவது போன்ற நேரடி நடவடிக்கைகளில் ஈடுபடாமல், அந்த இயக்கத்தின் கொள்கையை ஆதரித்துப் பேசுவது சட்டப்படி குற்றம் ஆகாது’ என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்து இருக்கின்றது.

இந்தத் தீர்ப்பின் மூலம், ஜனநாயகக் கருத்து உரிமைக்கு காப்பு உரிமை பெற்றுத் தந்தேன்.

அதுபோல. ஈழ விடுதலைப்போரில் தங்கள் இன்னுயிரை ஈந்தோருக்குப் புகழ் அஞ்சலி செலுத்துவது சட்டப்படி குற்றம் ஆகாது; எனவேதான், ‘தியாகத் திருநாள் பினாங்கு பிரகடன விளக்கப் பொதுக்கூட்டம்’ நடத்துவது என அறிவித்து உள்ளோம். அதற்கான அனைத்து முன் ஏற்பாடுகளும் செய்து இருக்கின்றோம்.

அனுமதி அளிப்பதாகத் தொடக்கத்தில் காவல்துறையினர் கூறியதால், பெரும் பொருட்செலவில் தேதி குறிப்பிட்டு சுவரொட்டிகள் அச்சிட்டு ஒட்டி இருக்கின்றோம். எனவே, நவம்பர் 27 ஆம் தேதி பொதுக்கூட்டத்திற்கு, காவல்துறை அனுமதி வழங்குமாறு தமிழக அரசு அறிவிக்க வேண்டுகிறேன்.

அனுமதி மறுக்கப்பட்டால், சட்டப்படியும், அறப்போர் வழியிலும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் நடவடிக்கை மேற்கொள்ளும் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன்" என வைகோ கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x