Published : 12 Jul 2019 10:09 AM
Last Updated : 12 Jul 2019 10:09 AM
மதுரையில் நான்கு வழிச்சாலைப் பணிக்காக அப்புறப்படுத்தப்படயிருந்த 11 மரங்கள் ஒரே நாளில் கிரேன் உதவியால் வேரோடு பிடுங்கி மாற்று இடங்களில் பாதுகாப்பாக நடப்பட்டன.
மாற்று இதய அறுவை சிகிச்சை செய்து எப்படி ஒருவருக்கு உயிர் கொடுக்க முடியுமோ அதுபோல் மரங்களையும் காப்பாற்ற முடியும்.
மதுரை - நத்தம் சாலையில் ரூ.1020 கோடியில் பறக்கும் பாலம் கட்டப்படுகிறது. இந்த பாலத்திற்காக நத்தம் சாலையில் ஏற்கெனவே 500-க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. அதற்கு மதுரையைச் சேர்ந்த சுற்றுச்சுழல் ஆர்வலர்கள், இளைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி போராட்டங்கள் நடந்தன. அதனால், தற்போது இந்த பால பணிக்காக அகற்றப்பட வேண்டிய மரங்கள், வேரோடு பிடுங்கி மாற்று இடத்தில் நடப்படுகின்றன.
மதுரை - நத்தம் சாலை மேம்பாலம் மதுரை மாநகராட்சி வளாகத்தில் 10 அடி தூரம் உள்ளே வந்து செல்கிறது. அதனால், மாநகராட்சி நிர்வாகம், பாலத்திற்கு இந்த பகுதியில் உள்ள நிலத்தை நெடுஞ்சாலைத்துறை வழங்கியது.
ஆனால், இப்பகுதியில் 11 பழமையான மரங்கள் இருந்தன. அந்த மரங்களை அகற்றினால் மட்டுமே அப்பகுதியில் பறக்கும் பாலம் அமைக்கப்படும். அதனால், மரங்களை அகற்ற நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்தது. தகவல் அறிந்த மாநகராட்சி ஆணையாளர் ச.விசாகன், அகற்றப்படும் மரங்களை வேரோடு பிடுங்கி மாநகராட்சியின் மற்ற பகுதியில் பாதுகாப்பாக நடுவதற்கு நெடுஞ்சாலைத்துறையிடம் வேண்டுகோள் வைத்தார். அதன் அடிப்படையில் நேற்று நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள், மாநகராட்சி வளாகத்தில் பறக்கும் பாலத்திற்காக விட்டுக்கொடுக்கும் இடத்தில் இருந்த 11 மரங்களை வேரோடு பிடுங்கி மாற்று இடத்தில் வெற்றிகரமாக நட்டுவைத்தனர். இந்தப் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ச.விசாகன் பார்வையிட்டார்.
அவர் கூறுகையில், ‘‘முன்பெல்லாம் மாற்று இதயம், சிறுநீரகம் போன்ற உடல் உறுப்புகளை பொருத்தி மரண தருவாயில் உள்ளவர்களுக்கு மீண்டும் உயிர் கொடுப்போம். தற்போது அதுபோல, மரங்களை வேரோடு பிடுங்கி மாற்று இடத்தில் நடுவது மூலம் சாலை விரிவாக்கத்திற்காக மரங்கள் வெட்டப்படுவது தடுக்கப்பட்டு மாற்று இடத்தில் நடப்பட்டு மீண்டும் உயிர் கொடுக்கப்படுகின்றன.
அதன் அடிப்படையிலே, மதுரை-நத்தம் பறக்கும் சாலை திட்டத்திற்காக அகற்றப்பட இருந்த 8 வேப்பமரங்கள், 3 உதிய மரங்களை வேரோடு பிடுங்கி கிரேன் மூலம் அப்படியே அருகில் உள்ள மாநகராட்சி வளாகத்தில் பாதுகாப்பாகநடப்பட்டன. இந்த மரங்கள் 20 ஆண்டுகள் முதல் 50 ஆண்டுகள் பழமையானவை, ’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT