Published : 09 Jul 2019 12:28 PM
Last Updated : 09 Jul 2019 12:28 PM
மதுரையில் மது போதையில் காவலர் ஒருவரே விபத்தை ஏற்படுத்திய சம்பம் நடந்துள்ளது. விபத்தை ஏற்படுத்திய காவலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை படம் பிடித்த பாதிக்கப்பட்ட இளைஞர் அதை சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.
மேலும், காவல் நிலையத்திலும் புகார் கொடுத்துள்ளார். இதனையடுத்து, மதுரை போலீஸ் கமிஷனர் சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை அன்று முதல்வர் பழனிசாமி தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து மதுரைக்கு வந்தார். முதல்வர் வருகையையொட்டி போலீஸார் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது.
மதுரை மாவட்டம் திருநகர் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார் காவலர் கணேசன். அப்போது அந்த வழியாக மில்டன் என்ற இளைஞர் ஒருவர் இருச்சக்கர வாகனத்தில் வந்துள்ளார். வாகனம் வருவதை கவனித்தும்கூட சாலைத்தடுப்பை காவலர் குறுக்கே வைத்துள்ளார். இதனால், வாகனத்தில் வந்த மில்டன் சாலைத்தடுப்பில் மோதி கீழே விழுந்துள்ளார். இதில் அவருக்குக் காலில் காயம் ஏற்பட்டிருக்கிறது.
தட்டுத்தடுமாறி எழுந்த மில்டன் காவலரிடம் "நான் வருவதைப் பார்த்தும் ஏன் தடுப்பை இழுத்து வைத்தீர்கள்" என்று கேட்டுள்ளார். அதற்கு கணேசன் உளறிக் கொண்டே பதில் கூறியுள்ளார். உடனே அருகிலிருந்த இன்னொரு காவலர் அங்கு வந்து இளைஞருக்கு சமாதானம் சொல்லியுள்ளார். அவரிடம் மில்டன் தனக்கு விபத்தை ஏற்படுத்திய காவலர் போதையில் இருக்கிறாரா? ஏன்று விசாரித்துள்ளார்.
அதற்கு அந்தக் காவலர் ஆமாம் என பதில் சொல்லியிருக்கிறார். மேலும், நீங்கள் கிளம்புங்கள் நான் பார்த்துக் கொள்கிறேன் எனக் கூறி அந்த இளைஞரை அனுப்பிவைத்துள்ளார்.
வீட்டுக்கு வந்த மில்டன் அந்த வீடியோவை இணையத்தில் பதிவேற்றியதோடு காவல் நிலையத்திலும் புகார் கொடுத்துள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்த போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
அண்மையில் மதுரையில் போலீஸார் ஒருவர் லத்தியால் தாக்கியதில் வாகன ஓட்டி ஒருவர் உயிரிழந்ததாக சர்ச்சை எழுந்த நிலையில் தற்போது மது போதையில் காவலர் ஏற்படுத்திய இந்த விபத்து மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT