Last Updated : 09 Jul, 2019 09:35 AM

 

Published : 09 Jul 2019 09:35 AM
Last Updated : 09 Jul 2019 09:35 AM

கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படுகிறதா?- சமூக வலைதளங்களில் பரவும் தகவல்

கும்பகோணத்தை தலைமையிட மாக கொண்டு தனி வருவாய் மாவட்டம் அறிவிக்கப்பட உள்ளதாக கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் தகவல் பரவிவருகிறது.

பாரம்பரியமும், வரலாற்றுப் பின்னணியும் கொண்டுள்ள கும்பகோணத்தை தலைமையிட மாக கொண்டு தனி மாவட்டம் அறிவிக்க வேண்டும் என கடந்த கால் நூற்றாண்டாக பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மாவட்டத் தலைநகரங்களில் இருப்பது போல, தலைமை குற்றவியல் நீதிமன்றம், கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றம், தொழிலாளர் நல நீதிமன்றம் ஆகியவை கும்பகோணத்தில் செயல்பட்டு வருகின்றன. கும்பகோணம் கடந்த 1866 முதல் நகராட்சி அந்தஸ்து பெற்று சிறப்பு நகராட்சியாக செயல்பட்டு வருகிறது.

அதேபோல, கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி, நாகை மாவட்டம் வரை தன்னுடைய சேவையை இன்றும் வழங்குகிறது. மேலும், தமிழகத்தில் உள்ள 8 பேருந்து கோட்டங்களில் கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு அரசு போக்குவரத்து கழகத்தின் கும்பகோணம் கோட்டமும் செயல்படுகிறது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் காவிரி டெல்டா மாவட்டத்துக்கான தலைமை அலுவலகம் கும்பகோணத்தில் செயல்படுகிறது. மேலும் மாவட்ட தலைமையகத்துக்கு தேவையான பதிவாளர் அலுவலகம், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் போன்றவை உள்ளன.

இந்நிலையில், கும்பகோணம் தனி வருவாய் மாவட்டம் நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட உள்ளதாகவும், இந்த புதிய மாவட்டத்தில் பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர் ஆகிய வட்டங்களும், திருவாரூர் மாவட்டத்திலிருந்து வலங்கைமான், நீடாமங்கலம் ஆகிய வட்டங்களும் இடம் பெற்றிருக்கும் எனவும் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல், கும்பகோணம் பகுதி மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகனிடம் கேட்டபோது, அவர் கூறியது: நடப்பு சட்டப்பேரவை கூட்டத் தொடரில் வருவாய்த் துறை மானியக் கோரிக்கை வரும் 17-ம் தேதி நடைபெறவுள்ளது. ஆனால், கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டமாக அறிவிக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்றே தெரிகிறது. அப்படி புதிய வருவாய் மாவட்டம் அறிவிக்கப்பட்டால் மகிழ்ச்சி என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x