Published : 09 Jul 2019 09:23 AM
Last Updated : 09 Jul 2019 09:23 AM

திராவிட இயக்கமே எழுத ஊக்குவித்தது!- பன்முக எழுத்தாளர் ப.குணசேகர்

திராவிட இயக்கம்தான் தமிழ்ப் பற்றை ஏற்படுத்தி, எழுத ஊக்குவித்தது என்கிறார் 83 வயதைக் கடந்த எழுத்தாளர் ப.குணசேகர். விஞ்ஞானப் புத்தகங்கள், மொழிபெயர்ப்பு நூல்கள், ஒப்பியல் நூல்கள், தன்னம்பிக்கை புத்தகங்கள், சிறுகதை தொகுப்பு என ஏராளமான புத்தகங்களை எழுதியுள்ள இவர், இன்னமும் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார்.

கோவை கணபதியில் வசித்து வரும் ப.குணசேகரை சந்தித்தோம். "பெற்றோர் பரமசிவம்-வேதாம்பாள். கோவை ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த அப்பா, நகராட்சிப் பள்ளிகளின் மேற்பார்வையாளராகப் பணிபுரிந்தார். ஆர்.எஸ்.புரம் உயர்நிலைப் பள்ளியில் எஸ்எஸ்எல்சி முடித்து, அரசு கலைக் கல்லூரியில் இன்டர்மீடியேட், பி.ஏ. பட்டம், பி.என்.பாளையம் ராமகிருஷ்ணா கல்லூரியில் பி.டி. முடித்தேன்.

திராவிட இயக்கம்தான் எனக்கு தமிழ் மீது பற்று ஏற்படக் காரணமாகும். ஆர்.எஸ்.புரத்தில் பெரியாரின் தங்கை கண்ணம்மாள் மகள் காந்திமதி குடியிருந்தார். அவரது கணவர் கிட்டு. இவர், ஈவிகே.சம்பத்துக்கு உறவினர். இதனால், இவர்கள் வீட்டுக்கு பெரியார், அண்ணா, சம்பத் எல்லோரும் வருவார்கள். அவர்கள் பேசிக் கொண்டிருப்பதை உடனிருந்து பார்த்ததுடன், அவர்களுக்குத் தேவையான உதவிகள் செய்வேன்.

அண்ணாவும், குதிரை வண்டியும்...

கோவை வரும் பேரறிஞர் அண்ணா, மாலையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன், ரெயின்போ தியேட்டரில் படம் பார்க்கச் செல்வார். பின்னர் அங்கிருந்து பொதுக்கூட்டத்துக்குப் புறப்படுவார். காரில் சென்றால் மக்கள் அடையாளம் கண்டுகொள்வார்கள் என்பதால், குதிரை வண்டியில்தான் பயணிப்பார். நான் தான் குதிரை வண்டி கூட்டிவந்து, அண்ணாவை அதில் அனுப்பிவைப்பேன். கே.ஏ.கிருஷ்ணசாமி எனக்கு உறவினர். மதியழகனும் நெருங்கிய பழக்கம். மதியழகன் நடத்திய தென்னகம் பத்திரிகையில் `வெற்றிலைகளிடையே ஒரு ரோஜா ' என்ற கட்டுரை எழுதினேன். அவர் மூலம் எம்ஜிஆரும், கண்ணதாசனும் பழக்கமானார்கள். திராவிட நாடு, காஞ்சி, தென்றல் உள்ளிட்ட  இதழ்களை தொடர்ந்து படித்தேன்.

1957-ல் கோவை எல்ஐசி-யில் மொழிபெயர்ப்பு உதவியாளராகப் பணியாற்றினேன். தொடர்ந்து மும்பைக்கு பணிமாறுதலானேன். எல்ஐசி நிறுவனத்தில் விளம்பரம் எழுதுதல், தமிழில் வரும் ஆவணங்கள், கடிதங்களை மொழிபெயர்த்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டேன். இடையில் சட்டப் படிப்பு பயின்றேன். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சென்னைக்கு பணிமாறுதல் செய்யப்பட்டு, 1994-ல் விற்பனை மேலாளராக ஓய்வுபெற்றேன். மனைவி பத்ரவேணி, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் காலமானார். மூன்று குழந்தைகள் உள்ளனர்.

அரசு கலைக் கல்லூரியில் படிக்கும்போது, `படகு'  என்ற கையெழுத்துப் பிரதியில் ஓரங்க நாடகங்கள் எழுதியுள்ளேன். நவ இந்தியா பத்திரிகையில் `மாடுகளும் மனிதனும்' என்ற சிறுகதை வெளியானது. கர்னல் மெடாஸ் டெய்லர் எழுதிய திப்புசுல்தான் என்ற ஆங்கில நாவலைத் தழுவி, தமிழில் திப்புசுல்தான் என்ற நாவல் எழுதினேன்.

அணுவின் ரகசியம்!

1955-ல் சென்னை பல்கலைக்கழகம் விஞ்ஞான நூலுக்கான போட்டியை அறிவித்தது. இதற்கு `அணுவின் ஆற்றல்' என்ற விஞ்ஞான கட்டுரையை எழுதி அனுப்பினேன். எனினும், பரிசு கிடைக்கவில்லை. இதை அடிப்படையாகக் கொண்டு, குழந்தைகளுக்காக 1958-ல் `அணுவின் ரகசியம்' என்ற விஞ்ஞான நூலை எழுதினேன். பின்னர் இது ஆங்கிலம், தெலுங்கு, இந்தி, குஜராத்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.

திருக்கழுக்குன்றத்தில் நடைபெற்ற `முதியோர் இலக்கியப் பண்ணை' என்ற பயிற்சி முகாமில் பங்கேற்று, எளிமையாக எழுதுவது குறித்து  நிறைய கற்றுக்கொண்டேன். தொடர்ந்து நிறைய விஞ்ஞான நூல்கள் எழுதினேன். `பகலரசன்' என்ற விஞ்ஞான புத்தகம் மத்திய அரசின் பரிசைப் பெற்றது.

இந்தியாவில் டிவி பிரபலமாகாத 1960-களில் `விழிகளுக்கு ஓர் விருந்து' என்ற தலைப்பில், தொலைக்காட்சி குறித்த விஞ்ஞான நூலை எழுதினேன். அதேபோல, அணு குறித்து `திருவாளர் அணு' என்ற நூலை எழுதினேன். கவிஞர் நாகமுத்தையாவின் பதிப்பகம், நான் எழுதிய சிறுவர் நூல்களைப் பதிப்பித்தது.

விஞ்ஞான கதைகள் எழுதிக்கொண்டிருந்த சமயத்தில், எனது சிறுகதைகளைத் தொகுத்து `காதல் ஒரு பறவை' என்ற முதல் சிறுகதை தொகுப்பை வெளியிட்டேன். அர்ஜென்டினா கவிஞர் ராபர்ட் ஜொராஸின், லத்தீன் அமெரிக்க கவிதைகளை மொழிபெயர்த்து `மொழியின் ஒளித்துளி' என்ற மொழிபெயர்ப்பு நூலை வெளியிட்டேன். இதேபோல, பாப்லோ நெருடாவின் கவிதைகளை தமிழில் மொழிபெயர்த்தேன். மேலும், `பாப்லோ நெருடாவும், ஈரோடு தமிழன்பனும்' என்ற ஒப்பியல் நூலையும் வெளியிட்டேன்.

`வங்கக் கவிஞரும், சந்தக் கவிஞரும்' என்ற தலைப்பில் தாகூரையும், கண்ணதாசனையும் ஒப்பிட்டு எழுதினேன். அதேபோல, கண்ணதாசனின் கவிதைகளை திறனாய்வு செய்து 'கண்ணதாசனின் கவிநயம்' என்ற நூலை எழுதினேன்.  தமிழில் கஜல் கவிதைகள் எழுதிய கவிஞர் சென்னிமலை தண்டபாணியையும், உருதுக் கவிஞர்களையும் ஒப்பிட்டு `கஜல் பரல்கள்' என்ற நூலை எழுதினேன்.

மாநாட்டில் விற்ற 600 பிரதிகள்!

திமுக மாநாட்டையொட்டி `பேரறிஞர் அண்ணா ஒரு புகழ் கோபுரம்' என்ற நூலை ஒரே இரவில் எழுதினேன். அந்த மாநாட்டில் 600-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் ஒரே நாளில் விற்பனையாகின" என்றார் குணசேகர்.

சிலி நாட்டுக் கவிஞர் விசென்டி ஹ்யுபோபுரோவின் கவிதைகளைத் தழுவி `உயிரின் எதிரொலி' என்ற நூலையும், அர்ஜென்டினா எழுத்தாளர் போர்ஹேவின் நூலைத் தழுவி `கனவுகளின் நெசவாளி' என்ற நூலையும் எழுதியுள்ளார். 40 நாடுகளின் பழமொழிகளைத் தொகுத்து `பழமொழி களஞ்சியம்' என்ற நூலையும், தமிழ் இலக்கிய உவமைகள் மற்றும் பல்வேறு நாடுகளின் உவமைகளைத் தொகுத்து `உவமைக் களஞ்சியம்' என்ற நூலையும் எழுதியுள்ளார் இவர்.

பிரபல எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் எழுத்தாளர் குணசேகரனை வெகுவாகப் பாராட்டியுள்ளனர். கடந்த ஆண்டு உலகக்கோப்பை கால்பந்துப் போட்டி நடைபெற்ற சமயத்தில், கால்பந்தாட்டம் தொடர்பான பல்வேறு விஷயங்களை நகைச்சுவையுடன் தொகுத்து ஒரு புத்தகம் எழுதினார். கடந்த 6 மாதங்களுக்கு முன் `ஹைக்கூ உலகம்' என்ற 1,646 ஹைக்கூ கவிதைகள் கொண்ட நூலை வெளியிட்டுள்ளார். இவரது `காலத்தை கையகப்படுத்துவது எப்படி?' என்ற நூல் அச்சில் உள்ளது.

சென்னை கம்பன் கழகம் தமிழ் நிதி என்ற விருதும், திருச்சி தமிழ் அமைப்பு குறள் மணி என்ற விருதும் வழங்கியுள்ளது. இதேபோல, உலகத் தமிழர் பேரவையும் எழுத்தாளர் குணசேகருக்கு விருது வழங்கியுள்ளது.

நுனிப்புல் மேயாமல் ஆழமாகப் படிக்க வேண்டும்...

1958-ல் ஏஜென்ட் என்ற ஆங்கில வார்த்தையை  `முகவர்' என்று மொழிபெயர்த்துள்ளார். இதேபோல, யூனியன் என்ற வார்த்தையை ஒன்றியம் என்று மொழிபெயர்த்ததும் இவர்தான். 1967-ல் `நங்கூரம்'  என்ற இலக்கிய மாத இதழை நடத்தியுள்ளார். அந்த இதழ் 11 மாதங்கள் மட்டுமே வெளிவந்துள்ளது.

"மொழிபெயர்ப்பு என்பது மிகச் சிறந்த படைப்புக் கலை. அதேசமயம், வேற்று மொழியில் உள்ளதை அப்படியே மொழிபெயர்க்கக் கூடாது. அதில் உள்ள விஷயங்களை, கருத்துகளை உள்வாங்கி, நமது மொழி, மண்ணுக்கேற்ப எழுத வேண்டும். நிறைய, ஆழமாகப் படிக்க வேண்டும். சென்னையில் இருந்தபோது கன்னிமாரா நூலகத்தில் மணிக்கணக்கில் அமர்ந்து, படிப்பேன். ஒரு புத்தகம் எழுத 50-க்கும் மேற்பட்ட புத்தகங்களைப் படிப்பேன். தன்னம்பிக்கை நூலுக்காக 120-க்கும் மேற்பட்ட ஆடியோ கேசட்டுகளை கேட்டேன். ஆனால், இளைய தலைமுறை எழுத்தாளர்கள் சிலர் நுனிப்புல் மேய்ந்துவிட்டு, தோன்றுவதையெல்லம் எழுதுகிறார்கள். இந்தப் போக்கு கவலைக்குரியது. எழுதுபவர்கள் நிறைய படிக்க வேண்டும். மக்களுக்குப் பயனுள்ளதாக எழுதி வேண்டும்" என்றார் ப.குணசேகர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x