Published : 04 Jul 2019 12:07 PM
Last Updated : 04 Jul 2019 12:07 PM
பிஎஸ்என்எல் தொலைபேசி வாடிக்கையாளர்களுக்கு இதுவரை அனுப்பப்பட்டு வந்த பில் அனுப்பும் முறை நிறுத்தப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள சிரமங்களுக்கு உரிய மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து இந்து தமிழ் உங்கள் குரல் சேவையில் தொடர்புகொண்ட எல்லீஸ்நகரை சேர்ந்த ஜெயசுதா கூறியதாவது, பிஎஸ்என்எல் தரைவழி தொலைபேசி இணைப்பு வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்குரிய கட்டண பில் அவரவர் முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டு வந்தது.
மேலும் செலுத்த வேண்டிய கட்டண விபரம் குறுந்தகவல் மூலமும் வரும். தற்போது திடீரென பில் அனுப்பும் முறையை நிறுத்தி விட்டனர். இத்துடன் பில் தொகை குறித்த குறுந்தகவலும் வராதது அதிர்ச்சியளிக்கிறது.
அரசு நிறுவனமான பிஎஸ்என்எல்லின் இத்தகைய நடவடிக்கைகள் வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. இதுதொடர்பாக பிஎஸ்என்எல் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து பிஎஸ்என்எல் முதன்மை பொது மேலாளர் ராஜம் கூறுகையில் “சுற்றுச்சூழல் பாதுகாப்பு காரணங்களுக்காக காதிதப் பயன்பாட்டை குறைப்பது மற்றும் டிஜிட்டல் இந்தியா திட்டம் ஆகியவை காரணமாக நாடு முழுவதும் பில் அனுப்பும் முறை கைவிடப்படுகிறது.
அஞ்சல் வழி பில் அனுப்பும் முறை கைவிடப்பட்டதை தவிர வேறு எந்த சேவையும் நிறுத்தப்படவில்லை. இதுகுறித்து அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் தொலைபேசி வழியாகவும், ஊடகங்கள் வழியாகவும் முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அருகிலுள்ள வாடிக்கையாளர் சேவை மையங்களை அணுகி தங்களது மின்னஞ்சல் முகவரியையும், அலைபேசி எண்ணையும் பதிவு செய்துகொண்டு தொடர்ந்து இ-பில் மற்றும் குறுந்தகவல் சேவையை பெறலாம். மேலும் இத்திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு இணைப்பிற்கும் மாதாந்திர கட்டணத்தில் பத்து ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
வாடிக்கையாளர்கள் தங்களது கட்டண விபரம் தொடர்பான சந்தேகங்களுக்கு கணக்கு அதிகாரியை தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம். வாடிக்கையாளர்கள் தங்களது பில் தொகையை கடைசி தேதிக்குள் செலுத்திவிட்டால் இணைப்பு துண்டிக்கப்படாது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT