Published : 12 Jul 2019 02:59 PM
Last Updated : 12 Jul 2019 02:59 PM
தேனி மாவட்டத்தில் கூரியர் மற்றும் ஆம்னி பேருந்துகள் சரக்குகளை ஏற்றிச் செல்லும் நிலை அதிகரித்துள்ளதால் ரெகுலர் லாரி சர்வீஸ் தொழில் வீழ்ச்சி அடைந்துள்ளது.
தமிழகத்தில் நாமக்கல்லுக்கு அடுத்தபடியாக தேனி மாவட்டம் லாரி தொழிலில் சிறப்பானதாக இருந்தது.
அந்தவகையில் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை ரெகுலர் சர்வீஸ் எனப்படும் சரக்குகளை தினமும் குறிப்பிட்ட ஊர்களுக்கு கொண்டு சேர்க்கும் லாரிகளின் எண்ணிக்கை 500-க்கும் மேல் இருந்தது. இதற்கான லாரி ஷெட்களும் 150-க்கும் மேல் இயங்கி வந்தன.
சென்னை, கோவை, திருச்சி, பழநி, திண்டுக்கல், திருச்சி, தூத்துக்குடி, மதுரை என்று ஒவ்வொரு வழித்தடத்திற்கும் இந்த லாரிகள் எதிரெதிர் மார்க்கமாக இயக்கப்பட்டன.
பொதுமக்களிடம் இருந்து ஒரு கிலோ பார்சல் முதல், சைக்கிள், டூவீலர், இயந்திர தளவாடங்கள், தானிய மூட்டைகள் என்று பல வகையான பொருட்கள் இதன் மூலம் தினமும் கொண்டு போய் சேர்க்கப்பட்டன.
இந்நிலையில் டீசல், உதிரிபாகங்களின் விலை உயர்வு, சிறிய ரக சரக்கு வாகனங்களும் களத்தில் இறங்கியதால் இத்தொழில் தடுமாறத் துவங்கியது. மேலும் ஆம்னி பேருந்துகள், கூரியரில் சரக்குகளை அதிகம் கொண்டு செல்வது லாரி ரெகுலர் சர்வீஸ் தொழிலை முற்றிலும் சீர்குலைத்துள்ளது.
ஆம்னி பேருந்துகளைப் பொறுத்தளவில் கீழ்பகுதியில் அதிகளவில் சரக்குகளை ஏற்றுவதற்கான அமைப்பு உள்ளது. இதில் பல வகையான பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன. பேருந்துகளின் மேற்புறத்திலும் இதுபோன்ற சரக்குகள் ஏற்றப்படுகின்றன.
தேனி மாவட்டத்தைப் பொறுத்தளவில் ரயில் போக்குவரத்து இல்லை. எனவே ஆம்னிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தற்போது 160-க்கும் மேற்பட்ட வண்டிகள் இங்கிருந்து சென்னை, பெங்களூரூ உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று கொண்டிருக்கின்றன.
இதுபோன்ற நிலையினால் தற்போது ரெகுலர் சர்வீஸ் லாரிகளின் எண்ணிக்கை மாவட்டத்தில் 80ஆக குறைந்துவிட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT