Published : 02 Apr 2014 10:14 AM
Last Updated : 02 Apr 2014 10:14 AM
நிறைவுற்ற நிதியாண்டில், நிர்ணயிக் கப்பட்ட இலக்கான ரூ.300 கோடியை தாண்டி விற்பனையில் சாதனை படைத்திருக்கிறது கோ-ஆப்டெக்ஸ்.
79 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட கோ-ஆப்டெக்ஸ், 2 ஆண்டுகளுக்கு முன்பு 11.5 கோடி ரூபாய் குவிப்பு நஷ்டத்தில் இருந்தது. நிர்வாக இயக்குநராக உ.சகாயம் ஐ.ஏ.எஸ். பொறுப்பேற்ற பிறகு மேற்கொண்ட சீர்திருத்த நடவடிக்கைகளை அடுத்து 2012-13-ம் நிதியாண்டில் கோ-ஆப்டெக்ஸ் மொத்த விற்பனை ரூ.245 கோடியானது. இதன்மூலம், குவிப்பு நஷ்டத்தை ஈடுகட்டி 2 கோடி ரூபாய் லாபம் ஈட்டியது கோ-ஆப்டெக்ஸ்.
இந்நிலையில், நிறைவுற்ற நிதியாண்டில் 300 கோடி ரூபாய்க்கு விற்பனை இலக்கு வைக்கப்பட்டது. இதன்படி மார்ச் 31-ம் தேதியுடன் ரூ.301 கோடியே 19 லட்சத்துக்கு விற்பனை செய்து சாதனை படைத்திருக்கிறது கோ-ஆப்டெக்ஸ்.
இதுகுறித்து கோ-ஆப்டெக்ஸ் தரப்பில் தெரிவித்ததாவது: கடந்த 2 ஆண்டுகளில் தீபாவளிக்கு முறையே 101 மற்றும் 121 கோடி ரூபாய்க்கும் பொங்கலுக்கு 52 மற்றும் 68 கோடி ரூபாய்க்கும் கோ-ஆப் டெக்ஸில் விற்பனை நடந்திருக்கிறது.
வேட்டி தினத்துக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து கடந்த நிதியாண்டில் கோ -ஆப்டெக்ஸில் இரண்டு மடங்கு அதிகமாக வேட்டி விற்பனை நடந்திருக்கிறது. தேர்வுகள் நேரம் என்பதால் ‘தாவணி தின’த்தை மிகச் சொற்பமான அளவிலேயே கொண்டாடி இருக்கிறார்கள்.
நிறைவுற்ற நிதியாண்டில் ரூ.300 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டதுபோல் இந்த நிதியாண்டுக்கு ரூ. 500 கோடி விற்பனை இலக்கை நிர்ணயித்து அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
‘சூப்பர் 1000’ என்ற புதிய வகை பட்டுகள் ஆயிரம் டிசைன்களில் அறிமுகப்படுத்துகிறது கோ-ஆப்டெக்ஸ். அதில் முதல் கட்டமாக 150 டிசைன்கள் விற்பனைக்கு வந்துவிட்டன. கோலங்கள் டிசைன் போட்ட 100 வகை பட்டுப் புடவைகள், ரசாயனம் இல்லாமல் இயற்கைச் சாயம் போட்ட பட்டுப் புடவைகள், பட்டுப் பூச்சிகளை கொல்லாமலேயே நூல் எடுத்துத் தயாரிக்கப்படும் அகிம்சா பட்டு ரகங்கள் உள்ளிட்டவைகளை இந்த ஆண்டில் கோ-ஆப்டெக்ஸ் புதிதாக அறிமுகப்படுத்த இருக்கிறது.
இதுமட்டுமில்லாமல், அந்தக் காலத்து மகாராணிகள் உடுத்திய பட்டு ரகங்களில் உள்ள டிசைன்களை தேர்வுசெய்து, ‘ராணி கலெக்ஷன்’ என்ற புதுவகை பட்டு ரகங்களையும் அறிமுகப்படுத்த இருக்கிறோம். இவ்வாறு கோ-ஆப்டெக்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நிறைவுற்ற நிதியாண்டுக்கான விற்பனையில் லாபம் மட்டுமே சுமார் ரூ.18 கோடியை தொடும் என்கிறார்கள். 2012-13-ம் நிதியாண்டில் லாபத்தில் ஒரு பகுதியை நெசவாளர்களுக்கு ஊக்கத் தொகையாக வழங்கியதுபோல் இந்த ஆண்டும் வழங்கப்படலாம் எனத் தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT