Published : 12 Jul 2019 10:06 AM
Last Updated : 12 Jul 2019 10:06 AM
ஓடும் ரயிலில் பொருட்கள் திருடு போனால் உடனடியாக புகார் தெரிவிக்க வசதியாக போலீஸாரின் மொபைல் எண்கள், ‘ஹெல்ப் லைன்’ எண் அடங்கிய ஸ்டிக்கரை பயணி களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
ரயில் பயணிகளிடம் நடக்கும் செல்போன், பணம், நகை பறிப்பு போன்ற குற்றச் செயல்களைத் தடுப்பது குறித்த ரயில்வே போலீஸாருக்கான ஆய்வுக் கூட்டம் திருச்சியில் நடந்தது. திருச்சி மண்டல ரயில்வே எஸ்.பி சரோஜ்குமார் தாகூர் தலைமையில் நடந்த இக் கூட்டத்தில் திருச்சி, மதுரை கோட்ட ரயில்வே போலீஸார் மற்றும் நெல்லை ரயில்வே போலீஸார் பங்கேற்றனர்.
அப்போது, ஓடும் ரயில்களில் பயணிகளை ஏமாற்றி நடைபெறும் குற்றச்செயல்கள், மொபைல்போன், நகை, பணம் திருட்டு போன்றவற்றை தடுப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு ரயில் நிலையத்திலும், ரயிலில் பயணம் செய்வோரிடமும் விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை அடிக்கடி விநியோகிக்க வேண்டும். எக்ஸ்பிரஸ், பயணிகள் ரயில்களில் திருட்டுச் சம்பவங்கள் நடந்தால், அது குறித்து உடனடியாக பணியில் இருக்கும் போலீஸாரை தொடர்பு கொள்ள வசதியாக அவசர உதவிக்கான ‘ஹெல்ப் லைன்’ எண்களை பயணி களிடம் அளிக்க வேண்டும். குறிப்பாக முதியவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது. இதன்படி விழிப் புணர்வு ஸ்டிக்கர்களை பயணிகளுக்கு அளிக்கும் நடைமுறையை ரயில்வே போலீஸார் தொடங்கியுள்ளனர்.
இது குறித்து ரயில்வே போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ரயில்களில் செல்லும்போதும், ரயில் நிலையங்களில் காத்திருக்கும்போதும் பயணிகள் செல்போன்களை சார்ஜ் செய்யும்போது, சில நேரங்களில் மறந்து வைத்துவிட்டுச் செல்கின்றனர். சில நேரங்களில் தூங்கி விடுகின்றனர். இதுபோன்ற சமயத்தில் செல்போன் அதிகமாக திருடுபோவதாகப் புகார்கள் வருகின்றன. மேலும் பயணிகள் தூங்கும்போது அவர்கள் வைத்திருக்கும் உடமைகள் திருடு போகின்றன. இதுபோன்ற நேரங்களில் யாரிடம் புகார் தெரிவிப்பது எனத் தெரி யாமல் பயணிகள் தவிக்கும் நிலை ஏற்ப டுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் பயணிகளிடம் போலீஸாரை தொடர்பு கொள்ளும் தொலைபேசி எண்கள் அடங்கிய ஸ்டிக்கர்களை தருவதற்கு எஸ்.பி. உத்தரவிட்டார். இந்த ஸ்டிக்கரில் பணியில் இருக்கும் போலீஸாரின் பெயர், மொபைல் எண்கள், ஹெல்ப்லைன் எண் (1512) மற்றும் போலீஸ் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளும் மொபைல் எண்(99625 00500) ஆகிய தகவல்கள் இடம்பெற்றிருக்கும்.
இதை ஸ்டிக்கராகவோ அல்லது ஜெராக்ஸ் நகல்களாகவோ முதல் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்ட பயணிகளிடம் வழங்க உத்தரவிடப் பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு ரயில் பெட்டியிலும், கழிவறை, கதவு அருகே, பயணிகள் சீட் அருகே என 8 இடங்களில் இந்த ஸ்டிக்கர் ஒட்டப்படும். ஒரு பேட்ஜ் போலீஸார் பணி முடிந்து சென்ற பின், அடுத்ததாக பணிக்கு வரும் போலீஸாரின் பெயர் மற்றும் மொபைல்போன் எண்கள் இந்த ஸ்டிக்கரில் குறிப்பிடப்பட்டு பயணி களிடம் தரப்படும் என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT