Published : 13 Jul 2019 10:05 AM
Last Updated : 13 Jul 2019 10:05 AM

தேசத்தை வழிநடத்துவதே ஆசிரியர்கள் கடமை!- பி.ஏ. கல்வி நிறுவனங்களின் தலைவர் ப.அப்புக்குட்டி

இந்த நாட்டின் எதிர்காலம் மாணவர்கள். தேசப்பற்று, சமூக நோக்கு கொண்டவர்களாக இளைய தலைமுறை மாறினால்தான், கலாமின் கனவு நனவாகும். மாணவ, மாணவிகளின் எதிர்காலம் அவர்களது பெற்றோர்களைக் காட்டிலும், ஆசிரியர்களை நம்பியே இருக்கிறது. நல்ல வழிகாட்டுதலே சிறந்த மாணவர்களை உருவாக்கும். மாணவர்களின் திறமைகளைக் கண்டறிந்து, ஊக்குவித்து, அவர்களைச் சாதனையாளர்களாக்குவதும் ஆசிரியர்கள்தான். இவ்வாறு தேசத்தை வழிநடத்துவதே ஆசிரியர்கள்தான். இந்தக் கடமையை அவர்கள் சிறப்பாகச் செய்ய வேண்டும்” என்கிறார் பொள்ளாச்சி பி.ஏ. கல்வி நிறுவனங்களின் தலைவர் ப.அப்புக்குட்டி.

விவசாயக் குடும்பத்தில் பிறந்து, பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து, அந்தக் கல்லூரிக்கே முதல்வராகப் பொறுப்பேற்று, பணி ஓய்வுக்குப் பின் பல்வேறு கல்வி நிறுவனங்களையும் தொடங்கி நடத்துகிறார் இவர்.

கிடங்கு வீட்டய்யன்!

“பல்லடம் தாலுகாவுல இருக்கற அக்கிராணம் என்கிற குக்கிராமம்தான் எங்க பூர்வீகம். பரம்பரை விவசாயக் குடும்பம். பெரிய வீடு, கிடங்கு, 40 ஏக்கர் பண்ணையம்னு பெருந்தலைக்காரரா வாழ்ந்தவரு என்னோட பாட்டனார் கிடங்கு வீட்டய்யன். ஊர் ஊராகப் போய் பருத்தி வாங்கி, வீட்டில் பஞ்சு வேறாக, பருத்திக்கொட்டை வேறாக பிரித்து எடுப்பார்கள். தர்ம சிந்தனையும், பாட்டு-கதை சொல்லறதும் அவருக்கு பெரிய ரசிகர் கூட்டத்தை உருவாக்கி இருந்தது. நாளைடைவுல தொழில்ல நாட்டம் குறைந்தது. காணி நிலம் கைவிட்டுப் போக ஆரம்பிச்சது. ஒருகட்டத்துல அடுத்தவங்க தோட்டத்துக்கு வேலைக்குப் போனாங்க ஆத்தா. அப்ப சர்ப்பம் தீண்டி அங்கேயே மூச்சை விட்டுட்டாங்க. கிடங்கு வீட்டை இரண்டாயிரம் ரூபாய்க்கு வித்துட்டு, சொந்த ஊரை விட்டுக் கிளம்பினார் பாட்டனார். இவரோட மகன் சின்னியகவுண்டர் என்னோட தாத்தா. அவருக்கு ரெண்டு மனைவிகள். ரெண்டாவது மனைவி முத்தம்மாள்தான் எங்க அப்பத்தா. சின்னியகவுண்டர்-முத்தம்மாள் மகன் பழனிசாமிக் கவுண்டர்தான் என்னோட அப்பா.

பார வண்டி ஓட்டிய அப்பா...

தாத்தா காலத்திலேயே அக்கிராணம்ங்கற ஊர்ல இருந்து, புள்ளியப்பன் பாளையம் கிராமத்துக்கு வந்துட்டோம். உடுமலை-பல்லடம் பிரதான சாலையிலிருந்து பிரிந்து செல்லும் பிரிவு சாலையில் இருக்கும் இந்த சின்ன கிராமத்துல, விவசாயமும், பாரவண்டியும் ஓட்டினாரு அப்பா பழனிசாமி. கோயமுத்தூர்ல இருந்து, விருதுநகர் வரைக்கும் சரக்கு வண்டி ஓட்டினாலும், விவசாயத்துல அப்பாவுக்கு நல்ல அறிவு. என்னோட அம்மா அம்மணியம்மாள். அப்பாவுக்கு ரெண்டாவது மனைவி. கடும் உழைப்பாளி. கடைசி வரைக்கும் என்னோட அப்பா கிராமத்துல விவசாயியாகவே இருந்து, மூச்சைவிட்டார். ஏன், என்னோட அம்மாவும், சாவறதுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்புகூட தோட்டத்துல களை கொத்திக்கிட்டிருந்தார்.

சீமெண்ணெய் விளக்கில் படிப்பு!

என்னோட முழு பேரு அப்புக்குட்டி பாட்டையக் கவுண்டன். பாட்டிமை நாள்ல பிறந்ததால் பாட்டையக்கவுண்டன்னு பேர் வெச்சாங்க. ஆறு பெண் பிள்ளைகளுடன் சேர்ந்து எங்க குடும்பம் பெரிய குடும்பம். சாப்பாட்டுக்கு என்னைக்கும்கஷ்டம் இருந்ததில்லை. சீமெண்ணெய் விளக்குல இரவு நேரத்துல படிச்சேன்.

சின்ன வயசுலேயே அப்பாகிட்ட இருந்து எல்லா விவசாய வேலைகளையும் கத்துக்கிட்டேன். ஆஸ்துமாவால அவதிப்பட்ட அப்பாவை, மழைக்காலத்துல வண்டிபூட்டி ஆஸ்பத்திரிக்கு கூட்டிச் செல்ல ரொம்ப சிரமப்பட்டோம். கட்ட வண்டிக்கு பதிலாக சவாரி வண்டி வாங்கணும், உடுமலை-பல்லடம்

சாலை வரை சொந்தமாக நிலம் வாங்கி, பாதையை சீரமைக்கணும்ங்கறதுதான் என்னோட ஆசை. நான் இந்த ரெண்டையும் செஞ்சி முடிச்சவாட்டி, அப்பாவோட ஆஸ்துமா குணமாகிவிட்டது. மூணு தலைமுறைக்கு அப்புறம் நிலம் வாங்கினோம். அப்பா, தன் நண்பரோட சேர்ந்து ரோடு சப்-கான்ட்ராக்ட் வேலை செய்தாரு. பள்ளிக்கூட லீவு நாட்கள்ல அப்பாவோட நானும் வேலைக்குப் போவேன்.

தோட்ட வேலையும்... பள்ளிக்கூடமும்...

புள்ளியப்பம்பாளையம் ஆரம்பப் பள்ளியில் படிப்பை தொடங்கினேன். குறும்பும், சுறுசுறுப்புமாக இருந்தது ஆரம்பப் பள்ளி வாழ்க்கை. அதுக்கப்புறம் கேத்தனூர் உயர்நிலைப் பள்ளியில் படிச்சேன். காலையில் தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்சிவிட்டு, தூக்குப்போசியில் சாப்பாடு எடுத்துக்கிட்டு, ரெண்டு மைல் நடந்து பள்ளிக்கூடம் போவேன். தமிழாசிரியர் ஏ.கு.சாமிநாதன் அருமையா தமிழ் கற்பித்தார். இதனால் நான் சின்ன சின்னதாக கவிதை எழுதுவேன்.

சித்தப்பா திராவிடர் கழகத்துல இருந்தாரு. கட்சிக் கூட்டத்துக்கு எல்லாம் நானும் போவேன்.  திராவிடத் தலைவர்கள் பேச்சு என்னை ஈர்த்தது. பள்ளிக்கூடத்துல கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார் வேஷமெல்லாம்போட்டு அசத்தினேன்.

மாநிலத்திலேயே முதலிடம்!

உயர்நிலைப் பள்ளி  முடிந்தவுடன், பியூசி-க்குப் போவதா? பாலிடெக்னிக் சேருவதானு குழப்பம். நண்பர் கொடுத்த ஆலோசனைப்படி பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக்கில் சேர்ந்தேன். அம்மாவோட மூணு பவுன் அட்டிகையை அடமானம் வைத்து, கல்லூரிக் கட்டணம் கட்டினோம். ஸ்காலர்ஷிப் வந்தபிறகு பணக் கஷ்டம் தீர்ந்தது. விடுதியில் தங்கி படிக்க ஆரம்பிச்சேன். நல்லா படிச்சதால, ஆசிரியர்களுக்கு என்னை ரொம்ப பிடிக்கும். முதலாமாண்டு தேர்வு முடிவுகள் வெளியானபோது, தமிழ்நாட்டிலேயே முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றேன். சிவில் இன்ஜினீயரிங் படிச்ச எனக்கு நல்ல நண்பர்கள் கிடைச்சாங்க.

பட்டயப் படிப்பு முடிஞ்சவாட்டி, காண்ட்ராக்டர் ராகவநாயுடுகிட்ட ரூ.75 சம்பளத்துக்கு சேர்ந்தேன். அவர்கிட்ட எனக்கு மிகப் பெரிய அனுபவம் கிடைச்சது. ஒரு கட்டத்தில் சொந்த தொழில் செய்யலாம்னு எண்ணம் வந்தது. வட்டிக்கு கடன் வாங்கி, குன்னூரில் சில வேலைகள் செஞ்சேன். ஆனால், கையில இருந்த பணமும் போனதுதான் மிச்சம். இந்த சமயத்துல,பெரியநாயக்கன்பாளையம் தாமோதரசாமி

நாயுடு,  சில வேலைகள் கொடுத்தார்.

பாலிடெக்னிக்கில் வேலை...

1973-ல் நாச்சிமுத்து பாலிடெக்னிக்குல ஜூனியர் இன்ஸ்ட்ரக்டராக வேலைக்கு சேர்ந்தேன். மொத்த சம்பளம் ரூ.500. ஒருபக்கம் பாலிடெக்னிக் வேலை செய்தாலும்,  `கட்டுமானப் பொறியாளர்’ கனவு தொடர்ந்துகிட்டே இருந்தது.

அந்த சமயத்துல நண்பர் முத்துலிங்கம் மூலமாக உடுமலை அமராவதி சர்க்கரை ஆலையில ஒரு கான்ட்ராக்ட் கிடைச்சது. பாலிடெக்னில் வேலை முடிஞ்சி மாலையில் உடுமலைப்பேட்டைக்குப் போய், வேலையைப் பார்வையிடுவேன். அடுத்தநாள் அதிகாலையில் எழுந்து ரெடியாகி, காலை 7.30 மணிக்கெல்லாம் பாலிடெக்னிக் வந்துடுவேன். அடுத்ததா, சமத்தூர் சக்தி டெக்ஸ்டைல் நிறுவனத்துல கட்டுமானப் பணியையும் மேற்கொண்டேன்.

1977-ல் பகுதி நேரமாக கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் பி.இ. படித்தேன். அதே ஆண்டு திருமணம். மாலையில் பாலிடெக்னிக் பணி முடிந்தவுடன் கோவைக்கு வந்து பி.இ. வகுப்புகளை முடித்துவிட்டு, இரவு வீடு திரும்புவேன். சில நாட்களில் பஸ்ஸை தவறவிட்டு, லாரி பிடித்து ஊருக்குப் போனதும் உண்டு. 1980-ல் மாநிலத்திலேயே முதல் ரேங்க் எடுத்து பி.இ. தேர்ச்சி பெற்றேன். தொடர்ந்து எம்.இ. முழு நேரமாக படித்தேன். அதேசமயம், கட்டுமானப் பணிகளையும் ஒப்பந்த அடிப்படையில் மேற்கொண்டேன். நான் எடுக்கும் வேலைக்கு கான்ட்ராக்டர், இன்ஜினீயர், அக்கவுண்டன்ட், கேஷியர், மார்க்கெட்டிங் மேனேஜர் என எல்லாமே நான்தான். எம்.இ. படிப்பிலும் மாநில அளவில் முதலிடம் பிடித்து, தங்கப் பதக்கம் பெற்றேன். மீண்டும் நாச்சிமுத்து பாலிடெக்னிக்கில் வேலைக்கு சேர்ந்தேன். 1995 முதல் 2000-ம்

ஆண்டு வரை சிவில் இன்ஜினீயரிங் துறைத் தலைவராகவும், கல்லூரி துணை முதல்வராகவும் செயல்பட்டேன். தொடர்ந்து கல்லூரி முதல்வராகவும் பொறுப்பேற்றேன்.

மாநில அளவில் இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் சிறந்த ஆசிரியருக்கான விருதும், மத்திய அரசு சார்பில் சிறந்த பாலிடெக்னிக் முதல்வருக்கான தேசிய விருதும் கிடைத்தது. கனடா சென்று பல்வேறு கல்வி நிறுவனங்களைப் பார்வையிட்டு, தொழில்நுட்பங்களை அறிந்தேன். கல்விப் பணியுடன், கட்டுமானப் பணியிலும் தொடர்ந்து ஈடுபட்டேன். 2005-ல் பணியிலிருந்து ஓய்வுபெற்றேன்” என்கிற அ.அப்புக்குட்டி, ஏறத்தாழ 32 ஆண்டுகள் கல்வித் துறையில் சிறப்பாக செயல்பட்டுள்ளார்.

அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கழகத்தின்  செயற்குழு உறுப்பினர், தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்கக வல்லுநர் குழு உறுப்பினர் என பல பொறுப்புகளையும் வகித்துள்ளார்.

குவித்த விருதுகள்...

பொள்ளாச்சி அரிமா சங்கத்தால் `பிரம்ம குருவிருது’, உடுமலை ரோட்டரி சங்கத்தால் சிறந்த தொழில்முனைவோர் விருது, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில அனைத்து கட்டிடப்பொறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்புசார்பில் `வாழ்நாள் சாதனையாளர் விருது’,  அரிமா சங்கத்தால் சிறந்த சமுதாய சேவை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி இந்திய தொழில்நுட்பக்

கல்வி கழகத்தால் `வாழ்நாள் சாதனையாளர் விருது’ விருது, இந்தியப் பொறியாளர்கள் பயிலகம் சார்பில் சிறந்த இன்ஜினீயர் விருது, உலகத் தமிழ் பல்கலைக்கழகம் சார்பில் கவுரவ டாக்டர் பட்டம், சாலைக் கட்டுமானத் துறை சாதனைகளுக்காக தமிழக ஆளுநரால் சிறப்பு விருது, அகில இந்திய தமிழ்ப் பேச்சாளர்கள் கூட்டமைப்பு சார்பில் `கல்விச் சுடர் விருது’, கோவை சிவில் இன்ஜினீயர்கள் சங்கம் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது என பல விருதுகளைக் குவித்துள்ளார்.இதேபோல, பல்வேறு கோயில்கள், பள்ளிகள், கல்லூரிகள், நிறுவனங்களில் கவுரவ கட்டிட ஆலோசகராகவும் பணியாற்றி உள்ளார்.  2002-ல் கனடா நாட்டின் சட்பரி நகரில் உள்ள கேம்பிரியன் பல்கலைக்கழகம், நியூ பின்லாந்து  நகரில் உள்ள  மெமோரியல் கல்லூரியில் உரையாற்றியுள்ளார்.

2006-07-ல் நான்கு பட்டயப் படிப்புகளுடன் இவர் தொடங்கிய பி.ஏ. பாலிடெக்னிக் கல்லூரி, தற்போது 2,000-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயிலும் கல்வி நிறுவனமாக மாறியுள்ளதுடன், தொடர்ந்து 8 ஆண்டுகளாக தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்கக தேர்வுகளில் முதலிடம் பெற்று வருகிறது. இதேபோல, 2009-2010-ல் பி.ஏ. கல்வியியல் கல்லூரி, பொள்ளாச்சி பி.ஏ. சர்வதேச பள்ளி ஆகியவற்றையும் இவர் தொடங்கியுள்ளார்.

“1980-ல் அருட்செல்வர் என்.மகாலிங்கத்திடம் என்னை அறிமுகப்படுத்தினார் ஆசான் கே.ஆறுமுகம். பல கோயில்களில் திருப்பணி மேற்கொள்ளும் வாய்ப்பை எனக்கு என்.மகாலிங்கம் ஏற்படுத்திக் கொடுத்தார். தீர்க்க தரிசனம் மிக்க அவர், இறுதிவரை நாட்டுக்காக சிந்தித்தார்.

2005-ல் பணி ஓய்வுபெற்ற பின், பாலிடெக்னிக் கல்லூரி அமைக்கலாம் எனத் தீர்மானித்தேன். தகுதித் தேர்வில் 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட மாணவர்களை மட்டுமே சேர்த்தோம். புகழ்பெற்ற தொழில் நிபுணர்களை வரவழைத்து, பயிற்சி அளித்தோம். இதுவே,  மாநில அளவில் தர வரிசையில் இடம்பிடிக்க காரணமாக இருந்தது. 2008-ல் பி.ஏ. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி ஆரம்பித்தேன். இங்கு பயின்ற மாணவர்கள், பல முன்னணி நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.

மனதைக் கவர்ந்த கலாம்...

கோவையில் ஒரு விழாவில் அப்துல் கலாமை சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தபோது, தூரத்தில் இரு துப்புரவுப் பணியாளர்கள் அவரையே பார்த்துக்கொண்டிருந்தனர். அவர்களை அழைத்து கலாம் விசாரித்தார். அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்புவதாக அவர்கள் தெரிவித்தனர். உடனே, என்னையும் இணைத்து, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட கலாம், காரில் ஏறிப் புறப்பட்டார். சிறிது தூரத்தில் காரை நிறுத்திய அவர், என்னை அழைத்து, மறக்காமல் அந்தப் புகைப்படத்தை வாங்கி, துப்புரவுப் பணியாளர்களிடம் கொடுத்து விடுங்கள் என்று  கூறிச் சென்றார்.

இதேபோல, பி.ஏ. கல்வி நிறுவனத்தில் நடந்த  நிகழ்வில் அவர் பங்கேற்றார். சத்தியமங்கலத்திலிருந்து அவர் கல்லூரிக்கு வர இரவு 10.30 மணியாகிவிட்டது. காரில் வந்துகொண்டிருந்தபோதே, செல்போனில் தொடர்புகொண்டார் கலாம். “பார்வையாளர்களாக வந்திருக்கும் மாணவர்கள் அனைவருக்கும் இரவு உணவு கொடுத்துவிட்டீர்களா?” என்று கேட்டார். கொடுத்துவிட்டதாக கூறியபோது, எப்படி என்று கேட்டார். “ஏற்கெனவே சிற்றுண்டி கொடுப்பதாக முடிவு செய்திருந்தோம். அதனால் உப்புமா தயாரித்து கொடுத்து, சமாளிப்பது எளிதானது” என்று கூறியவுடன், மிகவும் பாராட்டினார். அங்கிருந்து புறப்பட்டுச் செல்லும்போது,  இரவு 12 மணியாகி விட்டது.

மாணவர்களை பத்திரமாக அனுப்பிவைக்க வேண்டும்,  எப்படி அனுப்புவீர்கள் என்று கேட்டார். கல்லூரி வாகனங்கள் மூலம் பத்திரமாக அனுப்பி விடுவோம் என்று உறுதியளித்தோம். இதெல்லாம் என் வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவங்கள். இதனால்தான், கலாம் எப்போதும் `மக்களின் ஜனாதிபதி’ என்று போற்றப்படுகிறார்.

ஆசிரியப் பணியே அறப்பணி!

ஒரு சமுதாயத்தில் ஆசிரியர்கள் சரியாக அமைந்துவிட்டால், அந்த நாடே வளர்ச்சியடைந்த நாடாக விரைவில் முன்னேறும் என்பதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. இதனாலேயே, கல்வி நிறுவனங்களின் தலைவர்

என்பதைக் காட்டிலும், ஆசிரியராகப் பணிபுரிய வேண்டுமென்பதே எனது விருப்பும். காலம் உள்ளவரை ஆசிரியராகவே இருக்க விரும்புகிறேன். விவசாயப் பணியில் தொடங்கிய வாழ்க்கை, கல்வித் துறையில் தொடர்கிறது. இந்த இரு துறைகளுமே தேசத்தின், சமூகத்தின் நலனை

முன்னிறுத்தியவைகள்தான்.  தற்போதைய மாணவர்கள் மிகுந்த புத்திக்கூர்மை உடையவர்கள். ஆனால், பொழுதுபோக்கு அம்சங்களில் அதிக கவனம் செலுத்தி, நேரத்தையும், முயற்சியையும் வீணடிக்கிறார்

களே என்ற வேதனை உள்ளது. நாளைய இந்தியாவை வழிநடத்திச் செல்லும் மாபெரும் சக்தி படைத்த மாணவர்களை, சரியான பாதையில் அழைத்துச் செல்ல வேண்டியது ஆசிரியர்கள் கடமை. இதைத்தான் எங்களது கல்வி நிறுவனங்களின் பணியாற்றும் ஆசிரியர்களிடம் வலியுறுத்துகிறோம்” என்கிறார் நெகிழ்ச்சியுடன் ப.அப்புக்குட்டி.

வெற்றியின் வேர்கள்...

இவரது மனைவி லட்சுமி அப்புக்குட்டி. மகள்கள் பூங்கோதை அருள்ரமேஷ், கலைவாணிராஜேஷ்.  அண்மையில் இவர் எழுதிய`வெற்றியின் வேர்கள்’ என்ற நூலை பாரதிய வித்யா பவன் தலைவர் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர் வெளியிட்டார். “அருட்செல்வர்மகாலிங்கம் போல, அவரது குடும்பத்தினரும் எனக்குப் பிடித்தமானவர்கள். பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயரின் நட்பு கிடைத்ததே பெருமிதம்தான். ‘தன்னம்பிக்கை கொண்ட சில மனிதர்களின் வாழ்க்கை குறிப்புதான் உலக வரலாறு’ என்பார் விவேகானந்தர். இளம் தலைமுறையை தன்னம்பிக்கையும், வெற்றியை அடையும் முயற்சியையும் உடையவர்களாக மாற்றுவதே பி.ஏ. கல்வி நிறுவனங்களின் இலக்கு” என்கிறார் உறுதியுடன்

ப.அப்புக்குட்டி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x