Published : 09 Jul 2019 09:26 PM
Last Updated : 09 Jul 2019 09:26 PM
எஸ்சி, எஸ்டி மாணவர்களின் பட்டப்படிப்பு கல்வி உதவித்தொகைக்கான நிதியை விடுதலை சிறுத்தைகள் கட்சி மீண்டும் வலியுறுத்தி உள்ளது. இதற்கானக் கோரிக்கை மனுக்களை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் இன்று அதன் தலைவர் தொல்.திருமாவளவனும், பொதுச்செயலாளர் டி.ரவிக்குமாரும் அளித்தனர்.
கடந்த 5 ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சமர்ப்பித்த பொது பட்ஜெட்டில் எஸ்சி, எஸ்டி மாணவர்கள் பட்டப்படிப்பிற்கான உதவித்தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.3000 கோடி குறைவாகும்.
இதனால், எஸ்சி, எஸ்டி மாணவர்களின் பட்டப்படிப்பு பாதிக்கப்படும் என அமைச்சர் நிர்மலாவிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான கோரிக்கை மனுக்களை இன்று அமைச்சர் நிர்மலாவை நாடாளுமன்ற அலுவலகத்தில் சந்தித்து விசிக தலைவர்கள் அளித்தனர்.
இது குறித்து ’இந்து தமிழ் திசை’ இணையத்திடம் விழுப்புரம் தொகுதி எம்.பியான ரவிக்குமார் கூறும்போது, ‘தமிழ்நாட்டில் பொறியியல் படிக்கும் எஸ்சி மாணவர்களின் எண்ணிக்கை மிக மிக அதிகம். இவர்களில் பலருக்கும் உதவித்தொகை கிடைக்காமல், சுமார் நூறு பொறியியல் கல்லூரிகள் வரை தமிழகத்தில் மூடப்பட்டும் விட்டன.
இந்த உதவித்தொகை கிடைப்பதில் உள்ள சிக்கல்களை கண்டறிந்து களைய வேண்டும் எனவும் அமைச்சரிடம் கேட்டுக் கொண்டோம். அதற்கு அவர், இதற்கானப் பிரச்சனைகளை கண்டறிந்து களைவதற்காகப் பரிந்துரைக்கக் குழு ஒன்றை தமிழகத்திற்கு அனுப்ப உள்ளதாகவும் உறுதி அளித்தார்.’ எனத் தெரிவித்தார்.
டாக்டர்.பாபா சாஹேப் அம்பேத்கர் கோரியதன் பேரில் ஆங்கிலேயர் காலம் முதல் எஸ்சி, எஸ்டி மாணவர்களின் உதவித்தொகை அளிக்கப்படுகிறது. தேவைப்படும்
அனைவருக்கும் என அளிக்கப்பட்டு வந்த இது, கடந்த ஆட்சியில் மாற்றம் செய்யப்பட்டது. இதனால், அதன் நிலுவை சுமார் ரூ.11000 கோடியாக உயர்ந்து அச்சமூக மாணவர்களின் கல்விக்கு எதிரான சூழல் ஏற்பட்டுள்ளது.
விசிக தலைவர்கள் தனித்தனியாக அமைச்சர் நிர்மலாவிடம் அளித்த மனுவில், ‘ஜன் தன்’ வங்கிக்கணக்குகள் மூலமாக ரூ.5000 கடன் பெறலாம் என்ற அறிவிப்பை, ரூ,50,000 என உயர்த்தவேண்டும் எனவும், ஒரு லட்சம் கடன் என்பதை அனைத்து உறுப்பினர்களுக்கும் விரிவுபடுத்தவேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இத்துடன் மேலும் தாழ்த்தப்பட்டவர்களுக்கான ஒன்பது கோரிக்கைகளும் விசிக தலைவர்களின் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் போது அமைச்சர் நிர்மலா தனது பட்ஜெட் உரையில் புறநானுற்றுப் பாடலை குறிப்பிட்டமைக்கு அவரை திருமாவும், ரவிகுமாரும் பாராட்டினர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT