Last Updated : 02 Jul, 2019 05:03 PM

 

Published : 02 Jul 2019 05:03 PM
Last Updated : 02 Jul 2019 05:03 PM

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மீது துரித நடவடிக்கை: காவல்துறையில் புதுப் பிரிவு தொடக்கம்

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மீது துரித நடவடிக்கை எடுக்கும் வகையில் புதிய குற்றத்தடுப்புப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலுள்ள மாநகராட்சி மற்றும் அனைத்து மாவட்டத்திலும், காவல்துறையில் ஏடிஎஸ்பி அந்தஸ்தில் மதுவிலக்கு, குற்றப்பிரிவு செயல்படுகின்றன.

இதன்கீழ் நியமிக்கப்படும் ஏடிஎஸ்பிக்கள் மதுவிலக்கு, குற்றச் சம்பவங்கள் தொடர்பான வழக்கு, விசாரணைகளைக் கவனிக்கின்றனர்.

தற்போது மதுவிலக்கு (பிஇ.டபிள்யூ) பிரிவு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் பிரிவு (சி.டபிள்யூசி) என, 2019 ஜூன் முதல் பெயர் மாற்றப்பட்டுள்ளது.

இப்பிரிவிலுள்ள கூடுதல் டிஎஸ்பி, கூடுதல் துணை காவல் ஆணையர்கள் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை கவனிக்கவேண்டும் என, டிஜிபி அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும், மாநகராட்சியிலும் செயல்படும் அந்தந்த காவல் நிலையங்களில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றம், ‘போக்சோ’ உள்ளிட்ட புகார், வழக்கு விவரங்களை இப்பிரிவு போலீஸார் சேகரிக்கின்றனர். இதில் முக்கிய சம்பவம் பற்றி  உயரதிகாரிகளுக்கு உடனுக்குடன் தெரிவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர், "பெண்களுக்கு எதிரான குற்றம் மற்றும் குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் சம்பவம் நாளுக்குநாள் அதிகரிக்கிறது. இதை கருத்தில் கொண்டும், பெண்களுக்கு எதிரான சம்பவங்களுக்குத் துரிதமாக தீர்வு காணும் வகையிலும் புதிதாக இப்பிரிவு உருவாக்கப்பட்டுளளது. கூடுதல் டிஜிபி அளவில் இப்பிரிவு செயல்படத் தொடங்கி இருக்கிறது.

மாநகர், மாவட்டத்திலும் மதுவிலக்கு தடுப்புப் பிரிவு கூடுதல் டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளே இப்பிரிவையும் கவனிக்கின்றனர். மதுவிலக்கு பிரிவிலுள்ள காவல் ஆய்வாளர்களே அது தொடர்பான புகார், விசாரணையை கவனிக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான புகார், வழக்கு, விசாரணைகளை உடனடியாக இப்பிரிவுக்கு தெரிவிக்க  காவல் நிலையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார்.

குறிப்பாக மகளிர் போலீஸார்  புதிய குற்றத்தடுப்பு பிரிவுக்கு தகவல் தெரிவிக்க, கூடுதல் கவனம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.  சட்டம், ஒழுங்கு பிரிவு காவல் நிலையங்களுக்கு வரும் பெண்களுக்கு எதிரான குற்றப் புகார்களை மகளிர் போலீஸாரே சேகரித்து ஏடிஎஸ்பி அலுவலகத்திற்குத் தரவேண்டும் எனவும் வலியுறுத்தப்படுகிறது. ஏற்கனவே ஆட்கள் பற்றாக்குறையால் தவிக்கும் மகளிர் போலீஸாருக்கு இது கூடுதல் சுமையும் ஏற்படும். இப்பிரிவுக்கு தேவையான போலீஸாரை  அதிகரிக்கவேண்டும், என்றார்.  

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x