Published : 21 Nov 2014 03:51 PM
Last Updated : 21 Nov 2014 03:51 PM

தமிழகத்தை சீரழிக்கும் திமுக, அதிமுகவுக்கு மாற்றாக புதிய அணி: பாமக அழைப்பு

"தமிழகத்தை இரு திராவிடக் கட்சிகளின் பிடியிலிருந்து மீட்டு, வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதில் அக்கறைக் கொண்ட கட்சிகள் அனைத்தும் பாட்டாளி மக்கள் கட்சி தலைமையிலான மாற்று அணியில் இணைந்து பணியாற்ற வரவேண்டும்" என்று பாமக பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பாமக பொதுக்குழு கூட்டம் வெள்ளிக்கிழமை அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் தலைமையில் சென்னையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் விபரம்:

"தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளில் வளர்ச்சியடைந்த துறைகள் என்னவென்று பட்டியலிட்டால், அவற்றில் முதலிடம் பிடிப்பவை கல்வியாகவோ, சுகாதாரமாகவோ அல்லது விவசாயமாகவோ இருக்காது. மாறாக மக்களைக் கெடுக்கும் மதுவும், சோம்பேறிகளாக்கும் இலவசக் கலாச்சாரமும் தான் பல்கி பெருகியுள்ளன.1967&ஆம் ஆண்டில் அண்ணா தலைமையில் தி.மு.க. ஆட்சி அமைந்தபோது தமிழகத்தில் தரமான கல்வியை இலவசமாக வழங்கும் அரசுப் பள்ளிகள் தான் கல்விக் கோவில்களாக நிறைந்திருந்தன; ஆனால், இன்று அரசுப் பள்ளிகள் தந்திரமாக சீரழிக்கப்பட்டு வேலைவாய்ப்பை வழங்காத கல்வியை அளிக்கும் தனியார் பள்ளிகள் தான் கல்விக் கொள்ளைக் கூடங்களாக நிறைந்திருக்கின்றன.

அரசு மருத்துவமனைகளில் தரமான மருத்துவம் இலவசமாக கிடைத்த நிலை மாறி, தனியார் மருத்துவமனைகளில் லட்சங்களைக் கொட்டிக் கொடுத்தால் தான் மருத்துவம் கிடைக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது.

8 விழுக்காட்டிற்கும் அதிகமான வளர்ச்சியை எட்டி, லாபம் தரும் தொழிலாக திகழ்ந்த வேளாண் தொழில், இப்போது மைனஸ் 12 விழுக்காடு வளர்ச்சியுடன், விவசாயிகளைத் தற்கொலைக்குத் தூண்டும் துயரமாகிவிட்டது.

வேலைவாய்ப்பில் இரு திராவிடக் கட்சி ஆட்சிகளின் சாதனை வேதனை அளிப்பதாக உள்ளது. தமிழகத்தில் சுமார் ஒரு கோடி பேர், அதாவது வேலைக்கு செல்லக்கூடிய வயதுடைய பிரிவினரில் ஐந்தில் ஒரு பங்கினர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து விட்டு வேலையில்லாமல் வாடுகின்றனர்.

மொத்தத்தில், மக்களின் வளர்ச்சிக்கும், நல்வாழ்வுக்கும் அவசியமான கல்வி, சுகாதாரம், விவசாயம் ஆகிய மூன்று துறைகளையும் சீரழித்தது தான் திராவிடக் கட்சி ஆட்சிகளின் சாதனை ஆகும்.

அண்ணாவால் தொடங்கப்பட்ட கட்சியும், அண்ணாவின் பெயரால் தொடங்கப்பட்ட கட்சியும் அண்ணாவின் கொள்கைகளை அடகு வைத்துவிட்டன. மதுக்கடைகளை திறந்தால் மானியத் திட்டங்களை செயல்படுத்துவதற்குத் தேவையான பணம் கிடைக்கும் என்று அதிகாரிகள் கூறியபோதிலும், மக்களைக் கெடுப்பதன் மூலம் கிடைக்கும் பணம் தேவையில்லை என்று மறுத்தவர் பேரறிஞர் அண்ணா.

ஆனால், அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் தெருவுக்குத் தெரு மதுக்கடைகளைத் திறந்து பள்ளி மாணவர்களையும் மதுவுக்கு அடிமையாக்கி அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை நம்பி தான் ஆட்சியை நடத்துகின்றன.

மக்கள் நலனைக் காப்பதிலும், புரட்சிகரமான திட்டங்களைக் கொண்டுவந்து நிறைவேற்றுவதிலும், தமிழகத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்வதிலும் போட்டிபோட வேண்டிய கட்சிகள், ஊழல் செய்வதிலும், இலவசத் திட்டங்களை செயல்படுத்துவதிலும் தான் போட்டிபோடுகின்றன.

ஒரு கட்சியின் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை இன்னொரு கட்சி ஆட்சிக்கு வந்ததும் ரத்து செய்வது எழுதப்படாத சட்டமாகிவிட்டது.

இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் அக்கறை காட்டாத இரு திராவிடக் கட்சிகளும், அவற்றை தனியார் நிறுவனங்கள் கொள்ளையடிப்பதற்கு துணை போவதில் போட்டி போடுகின்றன. தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் கொள்ளையடிக்கப்பட்ட கிரானைட், தாதுமணல், ஆற்று மணல் உள்ளிட்ட இயற்கை வளங்களின் மதிப்பு மட்டும் ரூ.5 லட்சம் கோடிக்கும் அதிகமாகும்.

சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் அண்ணாவின் கொள்கைகளுக்கு எதிரான ஆட்சியைத் தான் இரு திராவிடக் கட்சிகளும் நடத்திக் கொண்டிருக்கின்றன.

இந்தியா விடுதலை அடைந்தவுடன், ‘‘நாட்டிற்கு காங்கிரஸ் கட்சியின் சேவை இனியும் தேவையில்லை; கட்சியைக் கலைத்துவிடலாம்’’ என்று மகாத்மா காந்தியடிகள் கூறினார். அதேபோல், பேரறிஞர் அண்ணா இப்போது உயிருடன் இருந்தால்,‘‘ இரு திராவிடக் கட்சிகளும் மாற்றி மாற்றி ஆட்சி செய்ததன் மூலம் தமிழ்நாட்டைக் கெடுத்தது போதும்; இரு கட்சிகளையும் கலைத்துவிடலாம்’’ என்று தான் கூறியிருப்பார். அந்த அளவுக்கு திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் சமூக, பொருளாதார, கலாச்சாரச் சீரழிவுப் பாதையில் தமிழகம் வேகமாக சென்று கொண்டிருக்கிறது.

1967-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணா, ‘‘திராவிட இயக்கத்தின் முதல் பாகத்தை நான் எழுதிவிட்டேன், இனி வரும் 50 ஆண்டுகளுக்கு திராவிட இயக்கங்களைத் தவிர வேறு இயங்கங்கள் இந்த மண்ணை ஆளமுடியாது’’ என்று சொன்னார். திராவிட இயக்கத்தின் முதல் பாகத்தை அண்ணா எழுதிய நிலையில், அதன் கடைசி பாகத்தை தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் எழுதிக் கொண்டிருக்கின்றன. அண்ணா கூறிய 50 ஆண்டுகள் 2016 ஆம் ஆண்டுடன் முடிவுக்கு வரவிருக்கும் நிலையில், திராவிடக் கட்சிகளின் ஆட்சியும் முடிவுக்கு வருவது உறுதியாகிவிட்டது.

திராவிடக் கட்சிகளின் ஆட்சியால் சலித்துப் போயிருக்கும் மக்கள், தமிழ்நாட்டில் மாற்றம் ஏற்படாதா? என்று 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், மக்கள் விரும்பும் மாற்றத்தை தமிழகத்தில் உள்ள எந்தக் கட்சியாலும் வழங்க முடியவில்லை. பாட்டாளி மக்கள் கட்சியும் மக்களின் இந்த விருப்பத்தை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளில் ஈடுபடாமல் தவறு செய்து விட்டது.

இத்தகைய சூழலில், தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்கு முடிவு கட்டி மக்கள் விரும்பும் மாற்றத்தை ஏற்படுத்துவதை காலம் இட்ட கட்டளையாக பாட்டாளி மக்கள் கட்சி கருதுகிறது. இதற்காக மக்கள் நலனிலும், தமிழகத்தின் வளர்ச்சியிலும் அக்கறைக் கொண்ட கட்சிகளை ஒருங்கிணைத்து புதிய அணி ஒன்றை உருவாக்க பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு தீர்மானிக்கிறது.

பாட்டாளி மக்கள் கட்சி தலைமையிலான இந்த மாற்று அணி வளர்ச்சிக்கான அரசியலை முன்னெடுக்கும். அனைத்துக் குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான தரம் கொண்ட இலவசக் கல்வியை கட்டாயமாக வழங்குதல், குடியரசுத் தலைவருக்கு கிடைக்கும் தரமான மருத்துவம் கடைசிக் குடிமகனுக்கும் இலவசமாகக் கிடைப்பதை உறுதி செய்தல், விவசாயத்திற்கான தேவைகளை இலவசமாக வழங்கி அதை லாபம் ஈட்டும் தொழிலாக மாற்றுதல் ஆகியற்றுக்கு இந்த மாற்று அணி முன்னுரிமை அளிக்கும்.

மதுக்கடைகளை மூடி மதுவில்லாத சமுதாயத்தையும், நிம்மதியான குடும்பங்களையும் உருவாக்குதல், அரசின் அனைத்துச் செயல்பாடுகளிலும் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்துதல், ஊழலை அடியோடு ஒழித்து நேர்மையான நிர்வாகத்தை வழங்குதல் ஆகியவற்றை பா.ம.க. தலைமையிலான அணி செய்து முடிக்கும் என்பதை பிரகடனமாகவே இப்பொதுக்குழு அறிவிக்கிறது.

தமிழ்நாட்டை இரு திராவிடக் கட்சிகளின் பிடியிலிருந்து மீட்டு, வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதில் அக்கறைக் கொண்ட கட்சிகள் அனைத்தும் பாட்டாளி மக்கள் கட்சி தலைமையிலான இந்த மாற்று அணியில் இணைந்து பணியாற்ற வரும்படி பா.ம.க. பொதுக்குழு அழைப்பு விடுக்கிறது" என தெரிவிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x