Published : 22 Nov 2014 10:41 AM
Last Updated : 22 Nov 2014 10:41 AM

பள்ளியில் புகுந்து ஆசிரியர் மீது தாக்குதல்: தொழிலதிபரை கைது செய்யக் கோரி பெற்றோர், ஆசிரியர்கள் சாலை மறியல்

தனியார் பள்ளி ஆசிரியரை தாக்குவதற்கு ஆட்களை ஏவிவிட்ட தொழிலதிபரை கைது செய்யக்கோரி பெற்றோர்கள், ஆசிரியர் கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர். இதனால், கடுமையான போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது.

சென்னை கோடம்பாக்கம் யுனைடெட் இந்தியா காலனி 4 வது குறுக்கு தெரு வில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் அதே பகுதியைச் சேர்ந்த மாணவன் ஒருவன் 8- ம் வகுப்பு படித்து வருகிறான். இவனது தந்தை அருளானந்தம் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருகிறார்.

நேற்றுமுன்தினம் மதியம் அந்த மாணவன் பள்ளி வகுப்பறையில் விசில் அடித்ததாக கூறப்படுகிறது. இதைக் கண்ட உடற்கல்வி ஆசிரியர் பாஸ்கர் அவனது தலையில் குட்டியுள்ளார்.

உடனே அந்த மாணவன் தனது செல்போன் மூலம் தந்தை அருளானந்தத் துக்கு தகவல் தெரிவித்துள்ளான். அவர் 50 அடியாள்களை பள்ளிக்கு அனுப்பி வைத்தார். அவர்கள், பள்ளிக்குள் திரளாக புகுந்து, உடற்கல்வி ஆசிரியர் பாஸ்கரை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.

இதில், படுகாயமடைந்த ஆசிரியர் பாஸ்கர் உடனடியாக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், ராயப்பேட்டை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஆசிரியர் தாக்கியதில் மாணவனுக்கும் காயம் ஏற்பட்டதாகக் கூறி, சிகிச்சைக்காக தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். இந்த சம்பவம் தொடர்பாக 2 தரப்பி னரும் போலீஸில் புகார் செய்துள்ளனர்.

பள்ளி நிர்வாகம் கொடுத்த புகாரின் பேரில் ஆசிரியரை தாக்கியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுவரை யில் மொத்தம் 20 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அதேபோல் மாணவன் சார்பில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் ஆசிரியர் மீதான தாக்குதலுக்கு காரணமான தொழிலதிபர் அருளானந்தத்தை கைது செய்யக்கோரி பள்ளி ஆசிரியர்கள் நேற்று காலையில் ஆற்காடு சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆசிரியர்களுக்கு ஆதரவாக மற்ற மாணவர்களின் பெற்றோர் களும் போராட்டத்தில் கலந்து கொண்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால், கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், கூடுதல் கமிஷனர்கள் சுபாஷ்குமார், திருஞானம், துணை கமிஷனர் பகலவன் ஆகியோர் பள்ளிக்கு நேரில் வந்து விசாரணை நடத்தினர்.

பின்னர், “அருளானந்தம் தலைமறை வாக இருக்கிறார். அவரை கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என போலீஸார் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு வெளியிட்டனர். இதையடுத்து, அனைவரும் மறியலை கைவிட்டு, கலைந்து சென்றனர்.

சிபிசிஐடி விசாரணை தேவை

தனியார் பள்ளி ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டுமென லயோலா மெட்ரிக்குலேஷன் மேல் நிலைப் பள்ளியின் தாளாளர் எட்வர்ட் செல்வராஜ், உதவி தலைமை ஆசிரியர் அல்போன்ஸ் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x