Published : 02 Jul 2019 01:11 PM
Last Updated : 02 Jul 2019 01:11 PM

தமிழக மக்களை குறைசொல்ல கிரண்பேடிக்கு தகுதியில்லை: நாராயணசாமி விமர்சனம்

தமிழக மக்களை குறைசொல்ல கிரண்பேடிக்கு தகுதி கிடையாது என, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி விமர்சித்துள்ளார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கடந்த மூன்று தினங்களுக்கு முன் தனது வாட்ஸ் அப்பில் மோசமான ஆட்சி, ஊழல் அரசியல், அலட்சிய அதிகாரத்தால் சென்னையில் வறட்சி ஏற்பட்டுள்ளதாகவும், மக்களின் சுயநல எண்ணமும் கோழைத்தனமான அணுகுமுறையும் கூட வறட்சிக்கு காரணமாக உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் இதுகுறித்து இன்று (செவ்வாய்க்கிழமை) கோவை விமான நிலையத்தில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் பேசியதாவது:

"கிரண்பேடி தமிழக அரசியல் தலைவர்கள் ஊழல் பேர்வழிகள், மக்களும் அதில் சம்மந்தப்பட்டிருப்பதாக கருத்து தெரிவித்திருக்கிறார். தமிழகத்தில் மட்டும் இல்லை கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலங்கானா என பல மாநிலங்களில் மழையின்மையால் நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. சில மாநிலங்களில் திறம்பட கையாளப்பட்டு உள்ளது, சில மாநிலங்களில் தாமதமாக பணிகள் நடைபெற்று வருகிறது. மத்திய அரசு அந்த பணிக்கு உதவ வேண்டும்.

எந்தவித ஆதராமும் இல்லாமல் அரசியல் தலைவர்கள், மக்கள் மீது கிரண்பேடி குற்றம் சுமத்தியுள்ளார். அவருக்கு வியாதி இருக்கிறது, எப்போதும் விளம்பரத்தில் இருக்கவே விரும்புவார். மற்றவர்கள் சொல்வதை அவர் கவனிப்பது இல்லை.

காங்கிரஸ் ஆட்சிக்கு வேண்டுமென்றே தொல்லை கொடுப்பதற்காக மோடி கிரண்பேடியை நியமித்துள்ளதாக தெரிகிறது. ஆளுநராக இருந்துகொண்டு தரம் தாழ்ந்த வேலையை செய்து வருகிறார். தமிழக மக்களை குறைசொல்ல கிரண்பேடிக்கு தகுதி கிடையாது", என நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x