Published : 06 Jul 2019 08:07 AM
Last Updated : 06 Jul 2019 08:07 AM

ஓர் ஆண்டு மட்டுமே தண்டனை விதிக்கப்பட்டதால் மாநிலங்களவை தேர்தலில் வைகோ போட்டியிடவோ, பதவியேற்கவோ தடை இல்லை: சட்ட நிபுணர்கள் கருத்து

தேசத்துரோக வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள வைகோ, மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் போட்டியிடுவதிலோ, பதவியேற்பதிலோ எந்த தடையும் இல்லை. அவரது வேட்பு மனுவை நிராகரிக்க முடியாது என சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய இறையாண் மைக்கு எதிராக பேசியதாக சென்னை ஆயிரம்விளக்கு போலீஸார் கடந்த 2009-ல் அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் அவருக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இந்த சூழலில், மாநிலங்களவை தேர்தலில் வைகோ போட்டியிடு வதில் சிக்கல் எழுமா என்பது குறித்து சட்ட நிபுணர்கள் கூறியிருப்பதாவது:

ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு: அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் தண் டனை பெறுவதற்கும், பதவியைப் பெறுவதற்காக மனு தாக்கல் செய்யப்போகும் நபர் ஒரு வழக்கில் தண்டனை பெறுவதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. பதவியில் உள்ளவர் தண்டனை பெற்றால் அவரை தகுதி நீக்கம் செய்ய, மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றிருக்க வேண்டும். அதேபோல வேட்புமனு பரிசீலனையின்போது அரசியலமைப்பு சட்டப் பிரிவு  191-ன் கீழும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 8-ன் கீழும் தடை இருக்கிறதா என்றுதான் பார்ப்பார்கள். எனவே, வைகோ மீதான குற்றச்சாட்டுக்கோ, அந்த குற்றச்சாட்டின் கீழ் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதற்கோ, அந்த 2 சட்டத்திலும் எந்த தடையும் இல்லை.

ஆனால் வைகோ தனது வேட்புமனுவில்  இந்த தண்ட னையை சேர்த்து குறிப்பிட வேண்டும். அதை வேறு யாராவது ஆட்சேபிக் கும்போது தேர்தல் அதிகாரிதான் பரிசீலித்து, அது தகுதி இழப்பில் வருமா, இல்லையா என்பதை முடிவு  செய்ய வேண்டும்.

அதேநேரம், சட்டத்திலேயே இல்லாத ஒரு விஷயத்தைக் கூறி தகுதி இழப்பு செய்ய முடியாது. வைகோ மீதான 124(ஏ) குற்றச்சாட்டு, மக்கள் பிரநிதித்துவ சட்ட எல்லைக்குள்ளேயே வர வில்லை. எனவே  வைகோ எம்.பி.யாவதில் எந்த சிக்கலும் இருக்காது. ஆனால் பதவியில் இருந்தால் தண்டனை பெற்ற மறுநிமிடமே தகுதி இழப்பு ஆகிவிடும். மொத்தத்தில் சிறைக்கு சென்றால் மட்டுமே தகுதி இழப்பு சாத்தியமாகும்.

உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன்: வைகோ மீது பிரிவு 124(ஏ)ன்கீழ் தேசத்துரோக வழக்கு போடப்பட்டுள்ளது. இந்த வழக்கில்தான் அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பிரிவு, தகுதி நீக்கம் செய்வதற்கு வழிவகை செய்யும் மக்கள் பிரநிதித்துவ சட்டம் பிரிவு 8-க்குள் வரவில்லை. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 8(3)-ன்படி 2 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை பெற்றால் தகுதி இழப்பை சந்திக்க நேரிடும்.

ஆனால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவு  8(1), 8(2)ஆகியவற்றில் எந்தெந்த குற்றங் களுக்காக பதவியில் உள்ள  ஒருவர் தகுதி இழக்க முடியும் அல்லது போட்டியிட  முடியாது என்பது வரையறை செய்யப்பட்டுள்ளது. இவற்றில் ஊழல் தவிர்த்து பிற குற்றங்களுக்காக 6 மாதம் சிறை தண்டனை பெற்றிருந்தாலும்கூட அவரால் போட்டியிடவோ, பதவி யில் தொடரவோ முடியாது.

ஆனால் வைகோவுக்கு விதிக் கப்பட்டுள்ள ஓராண்டு சிறை தண்டனை என்பது எந்த தகுதி இழப்புக்குள்ளும் வரவில்லை. எனவே அவர் மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் போட்டியிடுவதிலோ, பதவியேற்பதிலோ எந்த சிக்கலும் ஏற்பட வாய்ப்பு இல்லை.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ள னர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x