Published : 11 Jul 2019 09:46 AM
Last Updated : 11 Jul 2019 09:46 AM

வெளி மாநில சர்க்கரையால் தரம் குறைகிறதா பழநி பஞ்சாமிர்தம்?

நாடி வரும் பக்தர்களுக்கு எல்லாம் ‘வேலுண்டு வினையில்லை’ என்று அபயம் தந்து காக்கும் பழநி தண்டாயுதபாணி சுவாமியின் கோடிக்கணக்கான பக்தர்களுக்கு, அங்கு தயாராகும் பஞ்சாமிர்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த பஞ்சாமிர்த  தயாரிப்புக்கு மூலப்பொருளான கரும்பு சர்க்கரையை ஈரோடு மாவட்ட கரும்பு விவசாயிகளிடமிருந்து பெருமளவு கொள்முதல் செய்து வந்தது பழநி தேவஸ்தானம். இந்த முறையில் மாற்றம் செய்ததால், வெளி மாநிலங்களில் இருந்து வரும், தரம் குறைவான சர்க்கரை, பஞ்சாமிர்த தயாரிப்புக்கு கொள்முதல் செய்து அனுப்பப்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர் விவசாயிகள். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, பழநி பஞ்சாமிர்தத்தின் தரம் காக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர் விவசாய சங்கத்தினர்.

ஈரோடு மாவட்டத்தில் ஏறத்தாழ 75 ஆயிரம் ஏக்கரில் கரும்பு பயிரிடப்பட்டு வருகிறது. இவற்றில் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு  வழங்கும் விவசாயிகள்போக, 25 ஆயிரம் ஏக்கரில் விளையும் கரும்பு நாட்டுச் சர்க்கரை, வெல்லம் தயாரிப்புக்கென பயன்படுத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக, சித்தோடு, கவுந்தப்பாடி போன்ற பகுதிகளில் கரும்புச்சர்க்கரை மற்றும் வெல்லத் தயாரிப்பில் அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

கூடுதல் இனிப்புச் சுவை...

தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனப் பகுதியில் நிலம் மற்றும் நீர்வளம் காரணமாக, அங்கு விளையும் கரும்பில் தயாரிக்கப்படும் சர்க்கரை கூடுதல் இனிப்பு கொண்டதாக உள்ளது. இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் நாட்டுச் சர்க்கரை, பவானி நகர கூட்டுறவு சங்கம் வாயிலாக, பழநி தேவஸ்தானதுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இதில் சில முறைகேடுகள் நடந்ததால், கடந்த 1993-ல் அப்போதைய இந்து சமய அறநிலையத் துறை ஆணையர், இப்பகுதிக்கு வந்து, விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை  நடத்தினார். அதனடிப்படையில், கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் வாயிலாக, விவசாயிகளிடமிருந்து நேரடியாக கரும்புச்

சர்க்கரையை, பழநி தேவஸ்தானம் கொள்முதல் செய்யத் தொடங்கியது. முருகப் பெருமானின் பிரசாதத்துக்கு செல்லும் சர்க்கரை என்பதால், புனிதம் கெடாமல் அதை  தயாரித்த விவசாயிகள், தங்களது காணிக்கையாக சில மூட்டை சர்க்கரை வழங்குவதையும் வழக்கமாக வைத்திருந்தனர்.

2,000 மூட்டை சர்க்கரை!

பழநி பஞ்சாமிர்தம் தயாரிப்பதற்காக சராசரியாக வாரத்துக்கு 1,000 மூட்டைகள் (ஒரு மூட்டை 60 கிலோ) சர்க்கரை  பஞ்சாமிர்தத்துக்காக கொள்முதல் செய்யப்பட்டு வந்துள்ளது. சபரிமலை சீசன், தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற விழாக்காலங்களில், வாரத்துக்கு  2,000 மூட்டை சர்க்கரை வரை கொள்முதல் செய்யப்பட்டது. கடந்த 2014-ம்

ஆண்டில் பழநி தேவஸ்தான நிர்வாகம், சர்க்கரைக் கொள்முதல் முறையில் மாற்றம் கொண்டுவந்தது. இதன்படி, நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலமாக,  பஞ்சாமிர்தத்துக்குத் தேவையான சர்க்கரை, பழம், நெய் உள்ளிட்ட பொருட்கள் கொள்முதல் செய்யப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்தது. இந்த மாற்றம் காரணமாக இடைத்தரகர்கள் ஆதிக்கம் ஏற்பட்டு, பழநி பஞ்சாமிர்தத்துக்கு தரமற்ற சர்க்கரை கொள்முதல் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எவ்வித ரசாயனமும் கலக்காமல், இயற்கை முறையில் நாட்டுச் சர்க்கரையை விவசாயிகள் உற்பத்தி செய்யும் நிலையில், அவர்களிடம் இருந்து நேரடியாக பழநி கோயில் நிர்வாகம் கொள்முதல் செய்ய வேண்டுமென வலியுறுத்தி,  தமிழக விவசாயிகள் சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.

இந்த வழக்கைத் தொடர்ந்துள்ள விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பி.சி.செங்கோட்டையன் கூறும்போது, “கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மூலமாக 1993 முதல் 2014 வரை விவசாயிகளிடம் இருந்து பழநி தேவஸ்தானம் நேரடியாக நாட்டுச் சர்க்கரையைக் கொள்முதல் செய்துவந்தது.

இந்த முறையில் மாற்றம் கொண்டுவந்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் சர்க்கரை கொள்முதல் செய்யப்படும் என்று  அறிவிக்கப்பட்டது.

ஆனால், நுகர்பொருள் வாணிபக் கழகம் நேரடியாக கொள்முதலில் ஈடுபடவில்லை. தன் சார்பில்,  ஒரு தனியார் நிறுவனத்தை கொள்முதல் பணியில் ஈடுபடுத்தியது. அந்த நிறுவனம்,  தனக்கு கீழ் இரு முகவர்களை நியமித்து, அவர்களிடமிருந்து சர்க்கரையைக் கொள்முதல் செய்துவந்தது. இந்த முகவர்கள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் கொள்முதல் செய்யாமல், தனியார் வியாபாரிகளிடம்,  தரம் குறைவான சர்க்கரையைக் கொள்முதல்செய்து, பஞ்சாமிர்த தயாரிப்புக்கு அனுப்பினர்.

இந்நிலையில், கடந்த ஓராண்டாக கோயில் பணியாளர்கள் கூட்டுறவு சங்கம் பெயரில், தேவஸ்தானம் சர்க்கரை கொள்முதல் செய்யத் தொடங்கியுள்ளது. அவர்களும் இதே முகவர்களைப் பயன்படுத்தியே சர்க்கரை வாங்குகின்றனர். வெளி சந்தையில் கிலோ ரூ.32-க்கு விற்கப்படும் நாட்டுச் சர்க்கரையை கிலோ ரூ.42-க்கு தேவஸ்தானம் கொள்முதல் செய்கிறது. மேலும், முகவர்களுக்கு கமிஷன் என்ற அடிப்படையிலும் ஒரு தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பான ஆதாரங்களைத் திரட்டி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத்  தொடர்ந்துள்ளோம். இந்து சமய அறநிலையத் துறை விளக்கமளிக்க வேண்டுமென நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது.

எங்களைப் பொறுத்தவரை, பாரம்பரியமாக பழநி முருகனின் பஞ்சாமிர்த பிரசாதத்துக்கு  கலப்படமில்லாத தரமான சர்க்கரை வழங்கும் உரிமை விவசாயிகளுக்கே கிடைக்க வேண்டும். இடைத்தரகர்கள் பலனடைவதைத் தடுத்து, விவசாயிகள் பலனடைய வேண்டும். எந்த காரணத்தைக் கொண்டும் தரம் குறைந்த  சர்க்கரையை, பழநி தேவஸ்தானத்துக்கு விவசாயிகள் கொடுத்தார்கள் என்ற பழிச்சொல் வரக்கூடாது என்று எண்ணுகிறோம்” என்றார்.

மாவட்ட உழவர் விவாதக் குழு செயலர் பா.மா.வெங்கடாசலபதி கூறும்போது, “மகாராஷ்டிராவில் உற்பத்தியாகும் சர்க்கரை தரம் குறைவானதாகும். அந்த சர்க்கரையை கிலோ ரூ.26-க்கு வாங்கிவந்து, கவுந்தப்பாடி, சித்தோடு பகுதி சர்க்கரைச் சந்தையில், உள்ளூர் சர்க்கரையுடன் கலந்து கிலோ ரூ.43 என விலை நிர்ணயம் செய்து, பழநி தேவஸ்தானத்துக்கு  முகவர்கள் விற்பனை செய்கின்றனர்.

இதனால், இங்கு சர்க்கரை உற்பத்தி செய்யும் விவசாயிகள் பாதிக்கப்படுவதுடன், கோடிக்கணக்கான பக்தர்களுக்கு தரம் குறைந்த பஞ்சாமிர்தம் வழங்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

சராசரியாக ஆண்டுக்கு 70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் மூட்டை வரை பஞ்சாமிர்தத்துக்காக நாட்டுச் சர்க்கரை கொள்முதல் செய்யப்படுகிறது. ஒரு மூட்டைக்கு ரூ.300 முதல் ரூ.500 வரை அதிக விலைக்கு சர்க்கரை விற்பனை செய்யப்பட்டு, முறைகேடு நடக்கிறது. பஞ்சாமிர்தத்துக்கான சர்க்கரை கொள்முதலில் மட்டும் கோடிக்கணக்கில் ஊழல் நடந்து வருகிறது.

தரம் குறைவான சர்க்கரையைப் பயன்படுத்தி பஞ்சாமிர்தம் தயாரிக்கப்படுவதால், அதை இருப்பு வைத்துப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. பஞ்சாமிர்தம் தயாரிப்புக்கான சர்க்கரையில் தொடங்கி, அனைத்து மூலப் பொருட்கள் கொள்முதல் குறித்தும் அரசு உரிய விசாரணை நடத்தி, சரியான விலையில், தரமான பொருட்களைக் கொள்முதல் செய்ய வேண்டும்” என்றார்.

ஈரோடு மாவட்ட ஒழுங்குமுறை விற்பனைக்கூட அதிகாரிகளிடம் பேசியபோது, “கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திலிருந்து வாரத்துக்கு 2,000 மூட்டை சர்க்கரை வரை பழநி தேவஸ்தானம் கொள்முதல் செய்து வந்தது. தற்போது ஒரு மூட்டைகூட கொள்முதல் செய்வதில்லை. முழுமையாக தனியார் வியாபாரிகளிடம் சர்க்கரை கொள்முதல் செய்யப்படுகிறது.  ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேரடியாக கொள்முதல் செய்தால், விவசாயிகள் நேரடியாகப் பலனடைவார்கள், ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்ட தரமான சர்க்கரை, சரியான விலைக்கு கிடைக்கும் என்று எங்கள் துறை உயரதிகாரிகள் மூலம், இந்து சமய அறநிலையத் துறை உயரதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இது தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருவதால், முடிவு எடுக்கப்படாமல் இருக்கலாம்” என்றனர்.

உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்!

இதற்கிடையே,  500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்றிணைந்து, உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தைத் தொடங்கி, நாட்டுச் சர்க்கரை தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தேவைக்கேற்ப வாரம் 3,000 மூட்டை வரை பழநி தேவஸ்தானத்துக்கு நாட்டுச் சர்க்கரை வழங்க இவர்கள் தயாராக உள்ளனர். இவர்களிடமாவது நேரடி கொள்முதல் செய்து முறைகேடுகளைத் தடுப்பதுடன்,  தரமான பஞ்சாமிர்தம் பக்தர்களுக்கு கிடைக்க அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர் விவசாயிகள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x