Published : 04 Jul 2019 12:00 AM
Last Updated : 04 Jul 2019 12:00 AM
தமிழகத்தில் கடுமையான வறட்சியின் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்ட நிலையிலும் வேலூர் மாவட்டத்தில் நாகநதி நீர் செறிவூட்டும் திட்டத்தால் நிலத்தடி நீர் மட்டம் மேம்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் வெற்றியை பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் பாராட்டியுள்ளார். கடந்த 30-ம் தேதி‘மன் கி பாத்’ என்ற வானொலி நிகழ்ச்சியில் பேசிய அவர், ‘வேலூர் மாவட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளது’ என்று பாராட்டினார்.
நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம்வேலூர் மாவட்டத்தில் கணியம்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சலமநத்தம் உள்ளிட்ட கிராமங்களின் வழியாக ஓடும் நாகநதி துணை கானாற்றில் கடந்த 2016-17-ம் நிதியாண்டில் நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம் தொடங்கப்பட்டது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் கானாற்றில் 349 நீர் செறிவூட்டும் கிணறுகள் அமைக்கவும், அதையொட்டி 128 சிறிய தடுப்பணைகள் கட்டவும் ரூ.3.15 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
ஒவ்வொரு நீர் செறிவூட்டும் கிணறு அமைக்கவும் 10 பெண்கள் கொண்ட மகளிர் குழு அமைக்கப்படுகிறது. ஒரு கிணற்றுக்கான பணியை 21 நாட்களில் முடிக்க வேண்டும். ஒவ்வொரு கிணறும் ரூ.90 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்படுகிறது. 15 அடி நீளம், 6 அடி அகலம், 20 அடி ஆழம் கொண்ட செறிவூட்டும் கிணறு அமைக்கப்படுகிறது. 20 அடி ஆழத்தில் 3 அடி விட்டம் கொண்ட 13 சிமென்ட் உறைகள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைத்து மூடப்படுகின்றன. பக்கவாட்டில் ஜல்லி கற்களைக் கொண்டு நிரப்புகின்றனர்.
சிமென்ட் உறைகளில் தேங்கும் தண்ணீர் நிலத்தடி நீர் மட்டத்தை வேகமாக உயர்த்துகிறது. செறிவூட்டும் கிணற்றுக்கு அருகில் கருங்கற்களைக் கொண்டு சிறிய தடுப்பணை கட்டப்படுகிறது. இதன்மூலம் சேறும் சகதியுமாக வரும் மழை நீரால் செறிவூட்டும் கிணற்றில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கப்படும். ஒவ்வொரு கிணற்றின் மூலமாக ஒரு லட்சம் லிட்டர் தண்ணீர் நிலத்தடியில் செறிவூட்ட முடியும் என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு கி.மீ தொலைவுக்கும் அமைக்கப்பட்ட தடுப்பணைகள், கிணறுகளால் மழைக் காலங்களில் பெறப்பட்ட தண்ணீர் சேமிக்கப்பட்டு நிலத்தடி நீர்மட்டம் 4 அடி முதல் 7 அடி வரை உயர்ந்தது.
திட்டம் விரிவாக்கம்
இந்தத் திட்டத்தின் வெற்றியால் வேலூர் மாவட்டத்தில் கந்திலி, நாட்றாம்பள்ளி, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, ஆலங்காயம், பேரணாம்பட்டு, மாதனூர், குடியாத்தம், அணைக்கட்டு உள்ளிட்ட 9 ஊராட்சி ஒன்றியங்களில் 3,768 இடங்களில் நிலத்தடிநீர் செறிவூட்டும் கிணறுகள் அமைக்கவும், 476 சிறு தடுப்பணைகள் அமைக்கவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2018-19-ம் நிதியாண்டில் தொடங்கப்பட்ட இந்தப் பணிகளில் 2,289 கிணறுகள், 349 சிறு தடுப்பணை பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மீதமுள்ள பணிகளை வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் முடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெரியசாமி தெரிவித்தார்.
மீண்டும் விவசாய பணி
சலமநத்தம் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் பலராமன் கூறும்போது, ‘‘கடந்த 1968-ல் ராணுவத்தில் சேர்ந்து 1992-ல் ஓய்வு பெற்றேன். ஓய்வுக்குப் பிறகு விவசாயம் செய்யலாம் என்றால், ஆண்டுக்கு ஒரு போகம் மட்டுமே செய்ய முடியும் என்ற நிலை உருவானது. நீர் செறிவூட்டும் திட்டத்தில் எங்கள் கிராமத்தில் 5 கிணறுகளை அமைத்தனர். மழைக் காலத்தில் 15 நாட்களில் அடுத்தடுத்து பெய்த மழையால் நீர் செறிவூட்டும் கிணறு நிறைந்தது. வறண்டுபோன கிணறுகளில் நீர் மட்டம் கிடுகிடுவென உயரத் தொடங்கியது. தற்போது, ஆண்டுக்கு 2 போகம் விவசாயம் செய்கிறேன். இந்தத் திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தினால் தண்ணீர் பிரச்சினையே வராது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT