Published : 09 Jul 2019 10:33 AM
Last Updated : 09 Jul 2019 10:33 AM
பேராசிரியை நிர்மலாதேவி நேற்று (திங்கள்கிழமை) ஸ்ரீவில்லிபூத்தூர் நீதிமன்ற வளாகத்தில் வினோதமான நடவடிக்கைகளின் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நேற்றிரவு அருப்புக்கோட்டையில் ஒரு தர்காவுக்குள் நுழைந்து ரகளையில் ஈடுபட்டார்.
கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்தியதாக விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த பேராசிரியை நிர்மலா தேவி கடந்த 2018 ஏப்ரல் 16ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது தொடர்ந்து மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன் மற்றும் ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நேற்று(திங்கள்கிழமை) நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது தாமதமாக நீதிமன்றத்தில் ஆஜரான பேராசிரியை நிர்மலாதேவி நடவடிக்கையில் மாற்றம் காணப்பட்டது.
நீதிமன்ற வளாகத்தில் பல்வேறு இடங்களில் அமர்ந்து பேராசிரியை நிர்மலாதேவி தியானத்தில் ஈடுபடுவதுபோல் கண்களை மூடிய நிலையில் காணப்பட்டார். அத்தோடு சம்பந்தம் இல்லாமலும் பேசத் தொடங்கினார்.
இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. வழக்கறிஞர்கள் சிலர் பேராசிரியை நிர்மலா தேவியை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
அதைத்தொடர்ந்து நேற்று இரவு அருப்புக்கோட்டையில் புதிய பேருந்து நிலையம் பகுதியில் பேராசிரியை நிர்மலா தேவி மனநிலை பாதிக்கப்பட்டவர்போல் சுற்றி திரிந்துள்ளார்.
பின்னர் சுமார் 8 மணி முதல் 9.45 மணி வரை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தர்காவுக்குள் சென்ற நிர்மலாதேவி அங்கும் தியானத்தில் ஈடுபடுவது போல் அமர்ந்து நபிகள் எனக்கு ஆசீர்வாதம் செய்து உள்ளார் எனக் கூறியும் பாவா என்னை காப்பாற்றுங்கள் என கூறியும் அழுது புலம்பினார்.
அத்தோடு தனது முடிகளை கைகளால் பிய்த்துப் போட்டு அழுது புலம்பியுள்ளார். முதலில் இவர் யார் என்று அடையாளம் காண முடியாத ஜமாத் நிர்வாகிகளுக்கு பின்னர் இவர் நிர்மலா தேவி என்பது தெரியவந்தது. அதையடுத்து அருப்புக்கோட்டை போலீஸாருக்கு ஜமாத்தார் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் பேராசிரியை நிர்மலா தேவியை வலுக்கட்டாயமாக அங்கிருந்து ஜீப்பில் ஏற்றி அருப்புக்கோட்டை அருகே ஆத்திப்பட்டியில் உள்ள பேராசிரியை நிர்மலா தேவியின் வீட்டில் கொண்டு சென்று சேர்த்தனர். ஆனால் பேராசிரியை நிர்மலா தேவி வீட்டுக்குள் செல்ல மறுத்து வாசலிலேயே அமர்ந்து தான் பூஜை நடத்த உள்ளதாக கூறி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
பின்னர் போலீஸார் அவரை சமாதானம் செய்து வைத்து கதவை திறந்து வீட்டுக்குள் அனுப்பி வைத்தனர். அப்போது வீட்டுக்குள் பழைய காகிதங்கள் மற்றும் பழைய சேலைகள் குவிந்து கிடந்தன. வீட்டுக்குள் சென்றதும் தான் பூஜை நடத்தப் போவதாக கூறி புலம்பிக்கொண்டிருந்த பேராசிரியை நிர்மலா தேவி பூஜை அறைக்கு சென்று சாமி கும்பிட்ட பிறகு நிதானமாக பேசத் தொடங்கியுள்ளார்.
அதன்பின் போலீஸாரும் அங்கிருந்த பொதுமக்களும் கலைந்து சென்றனர். பேராசிரியை நிர்மலா தேவியின் நடவடிக்கையில் மேற்கொள்ள ஏற்பட்டுள்ள மாற்றம் ஸ்ரீவில்லிபுத்தூரைத் தொடர்ந்து அருப்புக்கோட்டையிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனித்து வாழும் நிர்மலாதேவி..
பேராசிரியை நிர்மலாதேவி இப்போது மட்டுமல்ல இந்த சம்பவங்கள் நடப்பதற்கு முன்னதாகவும் தனிமையில்தான் வசித்துவந்துள்ளார்.
திருமணம் ஆன சில ஆண்டுகளிலேயே மன அழுத்தம் ஏற்பட நிர்மலாதேவி தனது கணவரைப் பிரிந்து வாழ்ந்துள்ளார்.
கணவர் அருப்புக்கோட்டையில் வசிக்கிறார். இவர் ஊருக்கு ஒதுக்குப்புறமாக வசித்து வருகிறார். பெண் பிள்ளைகள் இருவரும் சென்னையில் தங்கி படிக்கின்றனர். இதனால் பல ஆண்டுகளாகவே நிர்மலாதேவி தனிமையில்தான் வசிக்கிறார். அவருக்கு ஒரு அண்ணன் இருக்கிறார். ஆனால், சர்ச்சைகளுக்குப் பின் அவரும் சரிவர நிர்மலாதேவியின் வீட்டுக்கு வருவதில்லை எனத் தெரிகிறது. தனிமை, வழக்கு விசாரணை, சிறைத் தண்டனை, இப்போது சிபிஐ-க்கு வழக்கை மாற்றக் கோரி நடைபெறும் வழக்கு என பல்வேறு நெருக்கடிகள் காரணமாக நிர்மலாதேவிக்கு மன அழுத்தம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் அவருடைய நடவடிக்கைகளைப் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT