Published : 02 Jul 2019 12:42 PM
Last Updated : 02 Jul 2019 12:42 PM
விழுப்புரம் அருகே மனைவி, குழந்தைகளைத் தவிக்கவிட்டு சென்ற இளைஞர் ஒருவர், திருநங்கை ஒருவருடன் சேர்ந்து குடும்பம் நடத்தி வருவதை டிக் டாக்கில் வீடியோவாக வெளியிட்டதால் 3 வருடங்கள் கழித்து போலீசாரிடம் சிக்கி உள்ளார்.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள வழுரெட்டி பகுதியில் வசித்து வருபவர் ஜெயப்பிரதா. இவருக்கு கடந்த 2013-ம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் பூந்தமல்லி கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.
இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த 2016 ஆம் ஆண்டு சுரேஷ் திடீரென வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து தனது உறவினர்களுடன் கணவரைத் தேடிய சுரேஷின் மனைவி ஜெயப்பிரதா விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்திலும் புகார் அளித்தார்.
கடந்த 3 ஆண்டுகளாக விழுப்புரம் தாலுகா காவல் துறையினர் சுரேஷை தேடி வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு டிக் டாக் செயலியில் மாயமான சுரேஷ் போன்ற நபர் ஒருவர் திருநங்கையுடன் ஜோடியாக வீடியோ பதிவிட்டிருப்பதை ஜெயப்பிரதாவின் உறவினர் பார்த்துள்ளார் சந்தேகப்பட்டு அந்த டிக்டாக் வீடியோவை ஜெயப்பிரதாவிடம் காண்பித்துள்ளார்.
இதனையடுத்து டிக்டாக் வீடியோவில் இருந்தது சுரேஷ் தான் என உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்த தகவலை விழுப்புரம் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் ராஜன் மற்றும் உதவி ஆய்வாளர் பிரகாஷ் ஆகியோருக்கு தெரிவித்தனர்.
இதனையடுத்து விழுப்புரம் திருநங்கை அமைப்பு சார்ந்தவர்களிடம் விசாரித்த காவல்துறையினர், அவர்கள் உதவியுடன் டிக் டாக் வீடியோவில் இருப்பது ஓசூரில் இருக்கும் திருநங்கை என்பதை கண்டறிந்தனர்.
அவர்கள் அளித்த தகவலின் பேரில் ஓசூர் சென்று விசாரித்த போலீசார், திருநங்கையை திருமணம் செய்து கொண்டு சுரேஷ் குடும்பம் நடத்தி வந்ததை கண்டறிந்தனர். இதனையடுத்து சுரேஷ் மீட்டு வந்த காவல்துறையினர் அவரை மனைவி ஜெயபிரதாவிடம் சேர்த்து வைத்தனர்.
தான் வீட்டில் இருந்து சென்ற பின்னர் ஓசூர் பகுதியில் உள்ள தனியார் டிராக்டர் கம்பெனியில் பணிபுரிந்து வந்ததாகவும் அப்போது அங்குள்ள திருநங்கையருடன் ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாக திருநங்கையை திருமணம் செய்து அங்கேயே குடும்பம் நடத்தி வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மனைவி குழந்தைகளை தவிக்க விட்டு, திருநங்கையுடன் குடும்பம் நடத்துவதாக கூறி டிக்டாக்கில் வந்தவர், காவல்துறையினரிடம் கையும் களவுமாக சிக்கிய சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT