Published : 06 Jul 2019 04:02 PM
Last Updated : 06 Jul 2019 04:02 PM
மது அருந்தினால் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, ஏடிஜிபி ரவி விளக்கம் அளித்துள்ளார்.
விழுப்புரம், கா குப்பம் ஆயுதபடை மைதானத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) பயிற்சியை நிறைவு செய்த இரண்டாம் நிலைக் காவலர்களுக்கான அணிவகுப்பு நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பரிவு கூடுதல் காவல் துறை இயக்குநர் எம். ரவி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு தலைமை வகித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பயிற்சி நிறைவு செய்யும் 179 காவலர்களின் அணி வகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டு சிறப்புரையாற்றியதாவது:
"தற்போது 7 மாதங்கள் பயிற்சியை நிறைவு செய்திருக்கும் காவலர்களுக்கு மேலும் 2 ஆண்டுகள் பணி செய்யும் இடத்தில் பயிற்சி இருக்கிறது. அதனை சிறப்பாக செய்ய வேண்டும். அதன் பிறகே, ஒரு நிறைவு பெற்ற காவலராக உருபெறுவீர்கள்.
காக்கி சட்டைக்கு விளக்கம்
காவல்துறையினருக்கும் ஏன் காக்கிச் சட்டை சீருடையாக வழங்கப்பட்டுள்ளது என்று பலருக்கு தெரியும், சிலருக்கு தெரியாமல் இருக்கலாம். காக்கிச்சட்டை அணிவது பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதை உணர்த்த வழங்கப்படுள்ளது. என்னதான் போலீசார் அடுத்தடுத்த பதவிகளுக்கு சென்றாலும் பொதுமக்களுக்கு மேலானவர்கள் என்று எண்ணக்கூடாது. அதனால் தான் காவல்துறை தலைவர் முதல் கடைநிலைக் காவலர் வரையில் அனைவருக்கும் ஒரு சீருடை வழங்கப்பட்டுள்ளது. இதனை உணர்ந்து செயல்பட வேண்டும்.
பயிற்சி பெற்றுள்ள நீங்கள், நல்ல உடற்பயிற்சி செய்து உடலை நன்கு வைத்துள்ளீர்கள். இதேபோன்று, தொடர்ந்து உடலையும், உள்ளத்தையும் வைத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் 24 மணி நேரமும், கடமையாற்றக்கூடியவர்கள் போலீசார். அதன் காரணமாக பெற்றோரை பிரிந்து கூட பயணியாற்ற வேண்டிய சூழல் இருக்கும். ஆகையால் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும்.
பொதுமக்களிடம் பணிவாகவும், குற்றவாளிகளிடம் கடுமையாகவும் நடத்து கொள்ள வேண்டும். கடுமையாக என்பது அடித்து தன்புறுத்துவதோ அல்லது சுட்டு விடுவதோ இல்லை. குற்றவாளிகளை பிடிப்பதில் தீவிரமாகவும், சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்று தருவது தான் கடுமையாக நடந்து கொள்ளவதாகும். அதேபோல, போலீஸாருக்கு வீரம் என்பது, சமயோசிதமாக நடந்து கொள்ளவதில்தான் உள்ளது. யார் என்ன பேசினாலும், பொருத்துக்கொண்டிருப்பதில்தான் வீரம் உள்ளது.
போலீசார் பெண்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில், தற்போது வாட்ஸ் ஆப் போன்ற சமூக ஊடங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெற்று வருகின்றன. அதிகரித்து வரும், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க, தங்களது குடும்பத்தினர் போல எண்ணி மற்ற பெண்களையும், குழந்தைகளையும் காக்க வேண்டும்.
காவலர்கள் மது குடிக்க மாட்டோம் என்று உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும். அதுதான் உங்களது பெற்றோருக்கும் பயிற்சி அளித்த போலீஸாருக்கும் செய்யும் கைமாறாகும். டாஸ்மாக் கடைக்கு எந்த போலீசாரும் செல்லக் கூடாது. நண்பர் வாங்கி கொடுத்தாலும் குடிக்கக் கூடாது. அப்படி மது அருந்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்"
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழச்சியில் தற்காலிக பயிற்சி பள்ளி முதல்வரும், விழுப்புரம் காவல் கண்காணிப்பாளருமான எஸ்.ஜெயக்குமார், ஏடிஎஸ்பி சரவணக்குமார், விழுப்புரம் டி.எஸ்.பி. திருமால், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் நெடுஞ்செழியன், தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT