Published : 07 Jul 2019 04:54 PM
Last Updated : 07 Jul 2019 04:54 PM

முகிலன் குறித்து கேள்விக்கு பதிலளிக்காமல் தவிர்த்த அன்புமணி ராமதாஸ்

முகிலன் குறித்த கேள்விக்கு பதிலளிக்காமல் தவிர்த்த அன்புமணி ராமதாஸ், தொடர்ந்து கேள்வி எழுப்பியதால் விவரம் தெரிந்ததும் கருத்து கூறுகிறேன் என நழுவினார்.

நீலகிரி மாவட்டம் உதகையில் நடந்த மாஸ்டர்ஸ் தேசிய அளவு இறகுப்பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை பாமக இளைஞரணி தலைவர் மற்றும் மாநில இறகுப்பந்து சங்கத்தின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் சேர்ந்த இறகுப்பந்து வீரர்கள் உலக அரங்கில் சாதித்து வருகின்றனர். இவர்களுக்கு வெளிநாடுகளிலிருந்து பயிற்சியாளர்களை வரவழைத்து பயிற்சி அளிக்க வேண்டும்.

சங்கர் முத்துசாமி என்ற வீரர் தொடர்ந்து 3 ஆண்டு காலமாக 17 வயதுக்கு கீழ் தேசிய அளவில் முதன்மை இடம் வகித்து வருகிறார். விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில், தமிழக அரசு உள்விளையாட்டு அரங்குகளை அமைக்க வேண்டும்.

மாவட்ட தலைநகர் மட்டுமல்லாமல் தாலுக்கா அளவில் அரங்கங்கள் அமைக்க வேண்டும். பாமகவின் கொள்கை சமூக நீதி, நீர் மேலாண்மை, தரமான கல்வி, சுகாதாரம், மது விலக்கு, புகையிலை ஒழிப்பு ஆகியவை.

தமிழகத்தில் தற்போது கடும் வறட்சி நிலவுகிறது. தென் மேற்கு பருவ மழை தற்போது பெய்ய தொடங்கியுள்ளது. இதனால், மழை நீரை சேமித்து, பாதுகாக்க வேண்டும். கால நிலை மாற்றம் உலக அளவில் நடக்கிறது. நீரை சேமித்து பயன்படுத்த வேண்டும். முப்பையில் வெள்ளம் இங்கு வறட்சி ஏற்பட்டுள்ளது. இந்த நிலை மேலும் மோசமாகும்.

எனவே, ஏரி, குளங்களை தூர் வார வேண்டும். ஆறுகளில் மணல் திருட்டை நிறுத்த வேண்டும். காவிரி நீரை பெற தமிழக அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. காவிரி மேலாண்மை ஆணையம் 9 டிஎம்சி தண்ணீர் வழங்க உத்தரவிட்டது. ஆனால், கர்நாடகா அரசு தண்ணீர் இல்லை என தெரிவத்துள்ளது.

எனவே, மத்திய அரசு நடுநிலையாக செயல்பட வேண்டும். மேகதாது அணை கட்ட அனுமதிக்க கூடாது. இதனால், தமிழகத்துக் கடும் பாதிப்பு ஏற்படும்.

காவிரி ஆற்றில் தமிழகத்தில் ஒரு அணை மட்டமே உள்ளது. கர்நாடகத்தில் 4 அணைகள் உள்ளன. மேகதாது அணை கட்டினால் கர்நாடக அணைகளின் மொத்த கொள்ளளவு 175 டிஎம்சி உயரும். தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர் கிடைக்காது.

தமிழக அரசு ராசி மணல் அணை கட்டி தண்ணீரை சேமிக்க வேண்டும். கோதாவரி-காவிரி இணைப்பை மத்திய, மாநில அரசுகள் முயற்சி மேற்கொள்ள வேண்டும். தமிழக அரசு நீர் மேலாண்மைக்கு முக்கியதுவம் அளிக்க வேண்டும்.

நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது. தகுதியற்ற மாணவர்கள் மருத்துவப்படிப்பில் சேருகின்றனர். ஆண்டுக்கு ரூ.25 லட்சம் கட்டணம் கட்ட வேண்டும். தகுதியற்ற மாணவர்கள் மருத்துவம் படிக்கின்றனர். இதனால், நீட் தேர்வு கொண்டு வரப்பட்ட நோக்கமே சிதைந்து விட்டது.

இதனால், மத்திய அரசு மாநிலங்களுக்கு உரிமை கொடுக்க வேண்டும். கல்வி மாநில பட்டியலுக்கு மீண்டும் கொண்டு வர வேண்டும்.

இந்தி கற்கலாம். திணிக்கக்கூடாது. நீதிமன்றங்களில் வழக்காட மொழியாக தமிழை கொண்டு வர வேண்டும். மத்திய அரசு மாநிலத்தின் உரிமைகளை, கலச்சாரம், பண்பாடு ஆகியவற்றை மதிக்க வேண்டும்.

வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் வெற்றி பெறுவார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் ஸ்டாலினின் பொய்களை நம்பி வாக்களித்து, ஏமாற்றமடைந்துள்ளனர்.

உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞரணி செயலாளர் பதவி வழங்கப்பட்டது, திமுகவின் உட்கட்சி பிரச்சினை. கலைஞர், ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் பின்னர் அவர் மகனுக்கு பதவி வழங்கப்படும்.

8 வழி சாலை விவகாரம் தொடர்பாக என் பேரில் கேவியட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது விவசாயிகளுக்கு எதிரான திட்டம் என முதல்வர் சந்தித்து முறையிடுவோம். தொடர்ந்து 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்ப்போம்.

மத்திய பட்ஜெட்டில் வரிகளை உயர்த்தியுள்ளனர். கச்சா எண்ணை விலை குறைந்த வரும் நிலையில், பெட்ரோல், டீசல் விலையேற்றம் தேவையில்லாதது. மறைமுகமாக வரிகள் விதிக்கப்பட்டள்ளன. கல்விக்கும் சுகாதாரம், வேளாண்மைக்கு கூடுதலாக நிதி ஒதிக்கீடு செய்திருக்கலாம் என்றார்.

முகிலன் குறித்த கேள்வியை தவிர்த்தவர், தொடர்ந்து கேள்வி எழுப்பிய பின்னர், ‘முகிலன் குறித்து முழுமையான செய்திகள் வரவில்லை. வந்த உடன் கருத்து தெரிவிக்கிறேன்’ என நழுவினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x