Published : 11 Jul 2019 09:41 AM
Last Updated : 11 Jul 2019 09:41 AM

சுற்றுச்சூழலை காக்கும் சூரியஒளி மின்சாரம்!- `ப்ரோசன்’ நிர்வாக இயக்குநர் கே.தனவேல்

ஒருபுறம் டீசல், பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. மற்றொருபக்கம், மரபு சார்ந்த எரிபொருட்களால் சுற்றுச்சூழல் மாசு அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த நிலையில், மாசற்ற மின்சாரத்தையும், எரிசக்தியையும் வழங்கும் சூரிய ஒளியே நாட்டின் எதிர்கால  மின்சக்தி மற்றும் எரிசக்தி யின் அடிநாதமாக இருக்கும். சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் சூரியஒளி மின்சாரத்தின் பயன்பாடு அதிகரித்து வருவதுடன், மக்களிடமும் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது “

என்கிறார் சோலார் சாதனங்களை தயாரிக்கும் `ப்ரோசன் எனர்ஜி’  நிறுவன நிர்வாக இயக்குநர் கே.தனவேல்(47).

கோவை சிட்கோ தொழிற்பேட்டையில் சூரிய ஒளி மூலம் சக்தியை உருவாக்கும் இயந்திரங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வரும் தனவேலை சந்தித்தோம். “பூர்வீகம் கோவை சுந்தராபுரம். பெற்றோர்

கந்தசாமி-ருக்மணி. அப்பா சுந்தராபுரத்தில் லேத் பட்டறை நடத்தி வந்தார். செங்கோட்டையா உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு முடித்துவிட்டு, கோவை அரசு பாலிடெக்னிக்கில் டிப்ளமோ படித்தேன்.

1989-ல்  படிப்பு முடிந்து அப்பாவின் பட்டறைக்கு வந்துவிட்டேன். 2, 3 வருடங்கள் கடந்த நிலையில், பெரிய வளர்ச்சி எதுவுமில்லை. அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டுமெனில், வேறு ஏதாவது செய்ய வேண்டுமெனக் கருதினேன். அலுமினியம் பவுண்டரி, ஹார்டுவேர் ஸ்பேர்ஸ் நிறுவனம் தொடங்கியும், பெரிய வளர்ச்சியில்லை. எனினும், தேடல் மட்டும் நிற்கவில்லை.

ஆர்விஎஸ் கல்லூரி ஆலோசகர் துரைசாமி, கோவை பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில், இந்திய சூரியஒளி சாதனங்கள் அமைப்பு சார்பில் கருத்தரங்கம் நடைபெற உள்ளதாகவும், அதில் பங்கேற்றால் ஏதாவது யோசனை கிடைக்கும் என்றும் தெரிவித்தார். மத்திய அரசு செயலராக இருந்த பக்தவத்சலம் அந்தக் கருத்தரங்கை தொடங்கிவைத்தார். அவர் ஏற்கெனவே அப்பாவிடம் மேனேஜராகப் பணிபுரிந்தவர். இந்தக் கருத்தரங்கில் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

நாட்டின் வருங்காலம் ‘மரபுசாரா எரிசக்தி’

இந்தியாவின் வருங்காலம் மரபுசாரா எரிசக்திகளை நம்பியிருக்கும் என்பதும், சூரிய ஒளி சக்தி சாதனங்களுக்கு பெரிய வரவேற்பு இருக்கும் என்றும் புரிந்தது. அதேசமயத்தில், சுற்றுச்சூழலுக்கும் பாதுகாப்பான தொழிலாக இருக்கும் என்றும் தோன்றியதால், சோலார் சாதன தயாரிப்புத் தொழிலில் இறங்கத் துணிந்தேன். அந்த காலகட்டத்தில் சூரியஒளி சாதனங்கள் தொடர்பான விழிப்புணர்வு பெரிய அளவில் ஏற்படவில்லை. இதனால், ஓராண்டு பல்வேறு புத்தகங்களைப் படித்தும், விவரம் அறிந்தவர்களிடம் பேசியும் தகவல் சேகரித்தேன். ஆழியாறு வேதாத்ரி மகரிஷியின் ஆசிரமத்தில் இருந்த பழைய `சோலார் வாட்டர் ஹீட்டரை’ விற்பனை செய்ய உள்ளதாக அறிந்தேன். அதை வாங்கி, சரி செய்தேன். 2003-ல் ப்ரோசன் பிராண்ட் என்ற பெயரில் சூரியஒளி மூலம் தண்ணீரை சூடாக்கும் இயந்திரத்தைத் தயாரிக்கத் தொடங்கினேன்.

ஆர்விஎஸ் நிறுவன ஆலோசகர் துரைசாமி, ஆர்விஎஸ் மருத்துவமனையில் ரூ.1.50 லட்சம் மதிப்பில் சோலார் வாட்டர் ஹீட்டர் நிறுவ முதல் ஆர்டர் கொடுத்தார். அப்போது நிறுவிய வாட்டர் ஹீட்டர் இன்னும் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், `யெல்லோ பேஜஸ்’ புத்தகத்தில் விளம்பரம் கொடுத்தேன்.

உதகை நஹார் ஹோட்டல் நிர்வாகம் என்னை அழைத்து, சோலார் வாட்டர் ஹீட்டர் நிறுவ முடியுமா என்று கேட்டார்கள். ஏற்கெனவே பல பெரிய நிறுவனங்கள் அந்த ஹோட்டலைப் பார்த்துவிட்டு, அங்கு வாட்டர் ஹீட்டர் பொருத்த வாய்ப்பில்லை என்று கைவிரித்துவிட்டனர். வழக்கமான சோலார் வாட்டர் ஹீட்டரில் சில தொழில்நுட்ப மாறுதல்களை செய்து பொருத்தினேன். மிகச் சிறப்பாக இயங்கியது. அதற்கு முன் டீசலைப் பயன்படுத்தி தண்ணீரை சுடவைத்துள்ளனர். சோலார் வாட்டர் ஹீட்டரால் தினமும் சுமார் ரூ.2 ஆயிரம் மீதமானது. ரூ.7 லட்சம் முதலீட்டை இரண்டே ஆண்டுகளில் சேமித்துவிட்டனர். அந்த ஹோட்டல் உரிமையாளர் மிகவும் மகிழ்ந்து, பல்வேறு ஹோட்டல்களுக்கும் என்னைப் பரிந்துரைத்தார். ஏறத்தாழ ஓராண்டு உதகையில் பல ஹோட்டல்களிலும் வாட்டர் ஹீட்டர் பொருத்தும் வாய்ப்புக் கிடைத்தது. 2006-ல் ஸ்ரீபெரும்புதூரில் ஹூன்டாய் நிறுவனத்தில் வாட்டர் ஹீட்டர் பொறுத்தினேன். ஏற்கெனவே அங்கு பொருத்தப்பட்டிருந்த வேறொரு நிறுவனத்தின் வாட்டர் ஹீட்டர் பழுதாகி, அகற்றப்பட்ட  சூழலில், நான் பொருத்தியது தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

தொடர்ந்து, சோலார் தெருவிளக்குகள்,  சோலார் மோட்டார் பம்ப், சோலார் இன்வெர்டர்  என ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு இயந்திரங்களை உற்பத்தி செய்தேன். 2007-ல் கிரீஸ், கென்யாவுக்கு சோலார் வாட்டர் ஹீட்டர்களை ஏற்றுமதி செய்தேன். அந்தக் காலகட்டத்தில் வாட்டர் ஹீட்டர் ஏற்றுமதி என்பது வெகு அபூர்வமாகும். எனினும், உள்ளூர் மார்க்கெட்டில் பெரிய வரவேற்பு இருந்ததால், தொடர்ந்து ஏற்றுமதியில் கவனம் செலுத்தவில்லை.

2012-ல் தமிழகத்தில் பெரிய அளவில் மின்வெட்டு நிலவியபோது, சோலார் தயாரிப்புகளுக்கான தேவை உச்சத்தை எட்டியது. 2013-ல் சிட்கோ தொழிற்பேட்டையில் நிறுவனத்தை தொடங்கினேன். வீடுகளுக்கு ஒரு கிலோவாட் முதல் 10 கிலோவாட் வரையிலும், தொழிற்சாலைகள், நிறுவனங்களில் 25 கிலோவாட் முதல் ஒரு மெகாவாட் வரையிலும் திறன்கொண்ட சோலார் பிளான்டுகளை அமைத்தோம். தாராபுரத்தில் ஒரு பொதுத்துறை நிறுவனத்துக்கு ரூ.14 கோடியில் 2 மெகாவாட் சோலார் பிளான்டுகளை அமைத்துக் கொடுத்தோம். தற்போது 10 மெகாவாட் அளவுக்கு சோலார் பிளான்டுகளை அமைக்கும் திறன் உள்ளது.

நான்கு ஏக்கர் பரப்பில் ஒரு மெகாவாட் திறன் கொண்ட சோலார் பிளான்டுகளை அமைக்கலாம். சில ஆண்டுகளுக்கு முன் இதற்கு ரூ.18 கோடி தேவைப்பட்ட நிலையில், தற்போது ரூ.5 கோடி முதலீட்டிலேயே இதை அமைக்க முடியும். இந்த முதலீட்டையும் 4 ஆண்டுகளில் எடுத்துவிடலாம். சூரியஒளி சாதனங்களுக்கு 25 ஆண்டுகள் வரை வாரண்டியும் வழங்கப்படுகிறது.

சூரிய ஒளி சாதனங்கள் மூலம் கிடைக்கும் மின்சாரம் மற்றும் மரபுசாரா எரிசக்தி ஆகியவை, சுற்றுச்சூழலுக்கு மிகவும் உகந்தவை.

உலக வெப்பமயமாதல் பெரும் பிரச்சினையாகி வரும் சூழலில், மரபுசாரா எரிசக்தியே இயற்கைக்கு உகந்ததாக இருக்கும். பொருளாதார அடிப்படையிலும் லாபம் தருவதாக இவை இருக்கும். அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில்,

மரபுசாரா எரிசக்தித் துறைக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. இந்தியாவில் இன்னும் சில ஆண்டுகளில் டீசலால் இயங்கும் கார்களே இருக்காது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அந்த சூழலில், பெட்ரோல் நிலையங்கள்போல, சோலார் மின்சக்தி நிலையங்கள் அமைந்திருக்கும். கார்கள் அங்கு சென்று, சார்ஜ் செய்துகொள்ளும் நிலை உருவாகும்.

வேளாண் நிலத்தில் சோலார் பிளான்டுகள்!

கர்நாடக மாநிலத்தில் வேளாண்மை செய்யப்படாத விவசாய நிலங்களில் சோலார் பிளான்டுகள் அமைத்து,  மின்சாரத்தை உற்பத்தி செய்து, அரசுக்கு விற்கிறார்கள். இதேபோல, தமிழகத்திலும் தரிசு நிலங்களில் சோலார் பிளான்டுகளை அமைக்கலாம். சூரிய ஒளியைப் போலவே, காற்றாலைகளும் மரபுசாரா மின்சக்தியை உற்பத்தி செய்கின்றன. எனினும், சீசன் காலங்களில் மட்டுமே காற்றாலை மின்சாரம் கிடைக்கும்.

 மேலும், காற்றாலைகளைப் பராமரிப்பதும் சிரமம். அதேசமயம், இந்தியாவில் ஏறத்தாழ 330 நாட்கள் அதிக சூரியஒளி இருப்பதால், சோலார் மின்சாரத்தை அதிக அளவு உற்பத்தி செய்ய முடியும்.  இது தொடர்பாக பொதுமக்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மனைவி கிருத்திகா, நிறுவனத்தின் நிர்வாகத்தைப் பார்த்துக் கொள்கிறார். மகள் வானதி, மகன் கார்த்திக் உட்பட குடும்பத்தினரின் ஒத்துழைப்பே அடுத்தடுத்த கட்டங்களுக்கு தொழிலை கொண்டுசெல்ல ஊக்குவிக்கிறது.

பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவ, மாணவிகளின் ஆய்வுக்காக சூரிய ஒளித்திறன் மேம்பாடு மற்றும் ஆய்வுக்கூடத்தை அமைத்துள்ளேன்” என்றார் பெருமிதத்துடன் தனவேல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x