Published : 06 Jul 2019 10:08 AM
Last Updated : 06 Jul 2019 10:08 AM
மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக, திருப்பூர் தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஏ.சக்திவேல் (ஏஇபிசி துணைத் தலைவர்): நாட்டின் முதல் பெண் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த இந்த நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை வரவேற்கிறேன். பொருளாதார வளர்ச்சியை முன்னோக்கி எடுத்துச் செல்லும் வகையில் அமைந்துள்ளது. வரி விதிப்பு முறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. உள்கட்டமைப்பை வலுப்படுத்த ஐந்து ஆண்டுகளில் நூறு லட்சம் கோடி நிதி ஒதுக்கி இருப்பது பாராட்டத்தக்கது. நடுத்தர மக்களுக்கான அனைவருக்கும் வீடு, விவசாயிகள் வருவாயை உயர்த்தும் வகையில் நல்ல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சிறு, குறு, நடுத்தர வர்த்தகர்கள் பயன்பெறும் வகையில், ரூ.350 கோடி ஒதுக்கியிருப்பது வரவேற்கத்தக்கது. வருமான வரி விலக்கு ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. சுயஉதவிக் குழு மூலமாக பெண்களுக்கு ரூ.1 லட்சம் கடன் உதவி அளித்தல். எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு ஜிஎஸ்டி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதத்துக்கு ஜிஎஸ்டி கொண்டு வரப்படும். ரூ.400 கோடி வரை ஆண்டு வருவாய் உள்ள நிறுவனங்களுக்கு, 25 சதவீதம் வரி அமலாக்கப்பட்டுள்ளது. மின்சார வாகனங்கள் வாங்கினால் வருமான வரியில் விலக்கு பெறலாம். மின்சார வாகன கடனுக்கு ரூ.1.5 லட்சம் வரை வருமான வரி விலக்கு, மின்சார வாகன உற்பத்தி தொழில் தொடங்குவோருக்கு வரிச்சலுகை, ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், இனி வருமான வரி விசாரணைக்கு உட்படுத்தப்படமாட்டாது, வீட்டு கடனுக்கான வரி விலக்கில் கூடுதலாக ரூ.1.5 லட்சம் கோரலாம், வருமான வரித் தாக்கலுக்கு, பான் கார்டுக்கு பதில் ஆதார் கார்டு பயன்படுத்தலாம், சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் பசுமை சாலைகள், ரூ.80250 கோடி செலவில் 1.25 லட்சம் கி.மீ. தூரத்துக்கு சாலைகள் உட்பட பல்வேறு அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை. ஆயத்த ஆடை ஏற்றுமதிக்கு சலுகைகள் எதுவும் இல்லாதது ஏமாற்றத்தை அளிக்கிறது.
ராஜா எம்.சண்முகம் (திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர்): திருப்பூர் பின்னலாடைத் துறையினர் பெரிதும் எதிர்பார்த்த சிறிய அளவில் செயல்படும் ஜாப் ஒர்க் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி ரத்து குறித்தோ அல்லது குறைப்பு குறித்தோ எந்தவித அறிவிப்புகளும் இல்லை. திருப்பூர் பின்னலாடைத் துறை ஒரு லட்சம் கோடி இலக்கை எட்ட தேவையான எந்த அறிவிப்புகளும் இடம் பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது.
பெரிய நிறுவனங்களுக்கு இருக்கும் சில சலுகைகள்கூட, சிறு, குறு நிறுவனங்கள் வளர எந்தவித அறிவிப்புகளும் இல்லை. அதிக வேலை வாய்ப்பை உருவாக்குவது ஜவுளித்துறை. ஆனால், இத்துறைக்கு மத்திய பட்ஜெட்டில் போதுமான முன்னுரிமை அளிக்கப்படவில்லை. தொழிலாளர் களுக்கான தங்கும் விடுதி வசதி, இஎஸ்ஐ மருத்துவமனை, திறன் மேம்பாட்டு மையம் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் இடம்பெறவில்லை. இது, தொழில்துறைக்கு சாதகமான அம்சங்களாக இல்லை.
முத்துரத்தினம் (டீமா): ஜவுளித் துறைக்கு பல்வேறு எதிர்பார்ப்புகள் இருந்தது. ஆனால், இதனை பட்ஜெட் நிறைவேற்றவில்லை. ஜிஎஸ்டி பிரதான பிரச்சினையாக இருக்கிறது. ஆனால், அதனை குறைக்கவோ அல்லது நீக்கவோ அறிவிப்பு இல்லை. திருப்பூர் பகுதியை சிறப்பு ஜவுளி மண்டலமாக அறிவித்து, தொழில்துறையின் வளர்ச்சிக்கு பல்வேறு விஷயங்களை செய் திருக்க வேண்டும். சிறு, குறு பின்ன லாடை நிறுவனங்களின் வளர்ச்சிக்கு திட்டங்கள் இல்லாதது ஏமாற்றம்.
அமெரிக்கா- சீனா ஆகிய நாடுகளிடையே வர்த்தகப் போர் நிலவும் சூழலில், அதனைப் பயன்படுத்தி ஆர்டர்களை பெற்றுத்தர வேண்டும். மத்திய அரசு நேரடி சலுகைகள் வழங்கினால் மட்டுமே, வீழ்ச்சி பாதையில் இருந்து வளர்ச்சி பாதைக்கு தொழில்துறை செல்ல இயலும். நூற்பாலைகள் வளர்ச்சிக்கும் திட்டங்கள் இல்லாதது ஏமாற்றமே.
ஏ.சி.ஈஸ்வரன் (சைமா): விவசாயத் துறையில் 75000 தொழில்முனைவோருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். சிறு, குறு தொழில் வளர்ச்சிக்காக ஆண்டுக்கு ரூ.350 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சரக்கு போக்கு வரத்துக்காக உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். 2030-ம் ஆண்டுக்குள் ரயில்வே துறையில் ரூ.50 லட்சம் கோடி முதலீடு செய்து நவீனப்படுத்தப்படும். இதுபோன்ற நல்ல திட்டங்கள் இருப்பதால், இந்த பட்ஜெட் அறிவிப்பை வரவேற்கிறோம்.
நந்தகோபால் (பவர்டேபிள் சங்கம்): பவர் டேபிள் நிறுவனங் களுக்கு ஜிஎஸ்டி-யை நீக்குவார்கள் என எதிர்பார்த்தோம். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகைகள் அள்ளி வழங்கப்பட்டுள்ளது. தொழில் நகரங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது தொடர்பாக எந்தவித அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT