Published : 05 Jul 2019 12:00 AM
Last Updated : 05 Jul 2019 12:00 AM
புவி வெப்பமயமாதலைத் தடுக்க வும், மழை பெய்யவும் மரக்கன்று கள் அதிக அளவில் நட வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், தனது 152 ஏக்கர் நிலத்தில் 1.5 லட்சம் மரக்கன்றுகள் நட்டு, சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதுடன், அதன் மூலம் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை வருமானத்தையும் ஈட்டி வருகிறார் சேலத்தைச் சேர்ந்த மருத்துவர் துரைசாமி.
சேலம் மாவட்டம் தம்மம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மருத்துவர் துரைசாமி. இவர், திருச்சி மாவட் டம் துறையூர் அருகே பச்சை மலை அடிவாரத்தில் காஞ்சேரி கிராமத்தில் கடந்த 20 ஆண்டு களுக்கு முன்னர் வாங்கி வைத்திருந்த 152 ஏக்கர் நிலத் தில் தற்போது மிகப்பெரிய சோலை வனத்தை உருவாக்கி, அதற்கு லிட்டில் ஊட்டி என்ற பெயரையும் சூட்டியுள்ளார்.
தற்போது இந்த வனத்தில் 10 ஆயிரம் பனை, 5 ஆயிரம் மகா கனி, 20 ஆயிரம் மலை வேம்பு, வேங்கை, மருது, நீர்மருது, மஞ்சள் கடம்பை, கரு மருது, வில்வம், நாகலிங்கம், 600 தென்னை, 10 ஏக்கரில் பாக்கு மரங்கள், 3 ஏக்கரில் நெல்லி, 3 ஏக்கரில் மா, சப்போட்டா, 300 பலா உள்ளிட்ட பலவகையான மரங்களை சேர்த்து மொத்தம் ஏறத்தாழ 1.5 லட்சம் மரங்கள் வைத்துள்ளார்.
இதுகுறித்து மருத்துவர் துரை சாமி, 'இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியது: பச்சைமலை பகுதியில் மருத்துவராக பணியில் சேர்ந்த போது, அதன் அடிவாரத்தில் 152 ஏக்கர் வாங்கினேன். 1980-ம் ஆண்டு முதல் 2000 ஆண்டு வரை வேலைப்பளு காரணமாக இந்த நிலத்தை அப்படியே போட்டுவிட்டேன்.
அதன் பின்னர், இந்த நிலத்தில் மரம் வளர்க்கலாமே என்ற எண்ணம் தோன்றியது. பல வகை மரங்களை வைத்தேன் வளரவில்லை. அப் போதுதான் ஈஷாவின் அறிமுகம் கிடைத்தது. அவர்களை தொடர்பு கொண்டபோது, ஆர்வத்துடன் வந்து மண் மாதிரி பரிசோதனை செய்து, அதற்கேற்ற மரக்கன்று களை நடுமாறு அறிவுறுத்தினர். மேலும் மரக்கன்றுகளை வழங்கிய துடன், மாதந்தோறும் வந்து பார்வையிட்டு உரிய ஆலோசனை களையும் வழங்கினர்.
தற்போது ஏறத்தாழ 1.5 லட்சம் மரங்கள் உள்ளன. நீண்ட கால மரங்கள் மட்டுமல்லாமல், குறுகிய கால மரங்களான மலை வேம்பு, குமிழ் தேக்கு உள்ளிட்ட பல்வேறு மரங்களையும் வைத்துள்ளோம். இவற்றை 5 ஆண்டுகளுக்குள் அறுவடை செய்யலாம், ஒரு டன் மரத்தை ரூ.10 ஆயிரம் வரை விற்பனை செய்யலாம்.
மரங்களுக்கிடையே ஊடுபயி ராக கோ-கோ, மிளகு, மலர்ச் செடிகள், வாழை உள்ளிட்டவற் றையும் பயிரிட்டுள்ளோம். இதன் மூலம் நல்ல வருமானம் கிடைக் கிறது. மேலும், செம்மறி ஆடுகள், நாட்டு மாடு, நாட்டுக்கோழி உள்ளிட்டவற்றையும் வளர்த்து வருகிறோம். காடு முழுவதும் சுற்றி வர உள்ளேயே சாலைகள், ஒவ்வொரு சாலைக்கும் பெயர்கள், பசுமை வேலிகள் ஆகியவையும் அமைத்துள்ளோம்.
விவசாயிகள் தாங்கள் விளை வித்த பொருளை விற்பனை செய் வதற்கு இடைத்தரகர்களை நம்பியிருக்க வேண்டிய சூழல்தான் உள்ளது. ஆனால், மரம் வளர்ப் போரை தேடி வியாபாரிகள் வந்து மரங்களை வாங்கிச் செல்கின்றனர். இதற்கு விலையும் நாம்தான் நிர்ணயிக்கிறோம் என்பதுதான் இதன் சிறப்பு. அதிக மரங்கள் இருப் பதால், மாதம் ஒரு முறையாவது இங்கு மழை பெய்கிறது. இங்கு தினந்தோறும் 30 பேர் பணியாற்றி வருகின்றனர் என்றார்.
வாரந்தோறும் 2 நாட்கள் தனது வனத்துக்கு வந்து பணிகளை மேற்பார்வையிட்டுச் செல்வது தனக்கு மகிழ்ச்சியைத் தருவதாக டாக்டர் துரைசாமி கூறுகிறார்.
மரக்கன்றுகளை நட்டு, சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதுடன், செலவை ஈடுகட்ட தேவையான மரங்களையும் வளர்த்து, அதன் மூலம் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை வருமானத்தையும் பெற்று வருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT