Published : 02 Jul 2019 05:51 PM
Last Updated : 02 Jul 2019 05:51 PM
தமிழகம் முழுவதுமுள்ள அரசு உதவி பெறும் பள்ளிகள் பெயர் பலகையில் 'அரசு உதவி பெறும் பள்ளி' என கட்டாயம் எழுத வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதனை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்யவும் உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை இயக்குநரகம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்/மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:
தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் மதிப்பீட்டுக்குழு (2016-18)ம் ஆண்டிற்கான பள்ளிக்கல்வி குறித்த அறிக்கையில் பொதுவாக அரசு உதவிபெறும் பள்ளிகளில் அரசு உதவிபெறும் பள்ளிகள் என பெயர் பலகையில் குறிப்பிடாமல், அவர்களுடைய பெயர் மட்டுமே குறிப்பிடப்படுவதால் பொதுமக்கள் அப்பள்ளியினை தனியார் பள்ளி என்கிற எண்ணம் கொள்கிறார்கள்.
அவ்வாறு இருக்கும் நிலையில் ஆங்கிலத்தில் 'Government Aided School' என்றும், தமிழில் 'அரசு உதவி பெறும் பள்ளி' என குறிப்பிடாமல் தங்கள் பெயரை மட்டும் குறிப்பிட்டுகிறார்கள் என குழு சார்பாக ஒரு கருத்து தெரிவிக்கப்பட்டது. குழு தெரிவித்த கருத்தினை, அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.
எனவே, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்/மாவட்டக் கல்வி அலுவலர்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் 'அரசு உதவி பெறும் பள்ளி' (Government Aided School) எனp பெயர் பலகையில் குறிப்பிடப்பட வேண்டும் என சுற்றறிக்கை அனுப்புமாறும் மேலும் முதன்மைக் கல்வி அலுவலர்/மாவட்டக் கல்வி அலுவலர்கள் பள்ளியினை ஆய்வு செய்யும்போது பெயர் பலகையில் 'அரசு உதவி பெறும் பள்ளி' என குறிப்பிடப்பட்டுள்ளதா என ஆய்வு செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT